'கைத்தொழில் ஒன்றை கற்றால் கவலை இல்லாமல் வாழ்க்கையை சுலபமாக வாழலாம்' என்ற முதுமொழி எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.
இதற்கேற்ப ட்ரோன், பேக்கரி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், அழகுக் கலை, சோலார் மின்தகடுகள் நிறுவுதல், ஜி.எஸ்.டி. செலுத்துதல், தங்க மதிப்பிடுதல், தொழிற்சாலை ரசாயனப் பயன்பாடு உள்ளிட்ட 20 துறைகளில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு, புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.) பயிற்சி அளித்து வருகிறது.
இதுகுறித்து அந்த நிறுவன இயக்குநர் இரா. அம்பலவாணனிடம் பேசியபோது:
'ட்ரோன்களை எப்படி கையாள்வது, எந்தெந்த இடங்களில் முன் அனுமதி பெற்று இயக்குவது, பேக்கரி பொருள்கள் உருவாக்கம் முதல் சந்தைப் படுத்துவது வரை துறை வல்லுநர்கள் செயல்முறை பயிற்சி அளிக்கின்றனர். ட்ரோன் படப்பிடிப்பு இல்லாமல் கேமராக்கள் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
திருமணம் முதல் நேரடி காட்சிகள் வரையில் ட்ரோன் கேமராக்களின் பயன்பாடு உள்ளது. ட்ரோன் பைலட் பயிற்சியை முடிந்தவுடன் தொழில்முனைவோராகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஊடகம், சினிமா, வேளாண் துறைகளில் ட்ரோன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோராக்கும் பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் 3 நாள்கள் முதல் 10 நாள்கள் வரையில் இந்த நிறுவனத்தில் நடத்தப்படுகின்றன.
இந்தப் பயிற்சியின் இறுதியில் தேர்வு வைத்து தமிழ்நாடு அரசின் பயிற்சிச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. வாழ்க்கைத் திறன் பயற்சி வகுப்புகள் பல்வேறு துறைகளில் நடத்தப்படுகின்றன. இதைப் பயின்று புதிய தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராகலாம்.
முன்பெல்லாம் வெளிநாடுகளுக்குச் சென்று பயின்று தொழிலை விரிவாக்கம் செய்துவந்தனர். தற்போது தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் நிறுவனத்தில் பயிற்சிப் பெற்றாலே போதும்.
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதை தொழில் வழிமுறையில் திறம்பட நிர்வாகம் செய்து விரிவாக்கம் செய்யலாம் என்பதற்கு இந்தப் பயிற்சிகள் உதவும்.
பயிற்சி பெற்றவர்கள் அரசு திட்டங்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப்புகளை தொடங்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். சுயசார்புடன் வணிகம் செய்வதில் ஓராண்டு பயிற்சி படிப்பும் கற்றுத்தரப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளைத் தேர்வு செய்து செயலாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் மட்டும் நடத்தப்படும் தொழில்முனைவோர் பயிற்சிகள் வரும் நாள்களில் கிராமங்களுக்குச் சென்று அளிக்கப்படுவதே அடுத்த இலக்கு'' என்கிறார் இரா. அம்பலவாணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.