ஆண்டுதோறும் சித்திரைப் பிறப்பு நாளில் கிராமங்களில் விவசாயம் தழைத்தோங்குவதற்காக வயல்களில் 'பொன்னேர்' பூட்டி வழிபாடு நடத்தும் பண்பாடு பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சிலர் சித்திரை மாதத்தில் பஞ்சாங்கம் பார்த்து ஏதாவதொரு நல்ல நாளைத் தேர்வு செய்து, வழிபாட்டை நடத்துகின்றனர். மழை பெய்து விவசாயம் செழித்து, விவசாயிகளும், மக்களும், அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு.
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்தப் பண்பாடு குறித்து சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல, மருதநில வேளாண்மையை எடுத்துரைக்கும் பள்ளு இலக்கியங்களும் பொன்னேர் பூட்டுதலைக் குறிப்பிடுகின்றன.
இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி. மாறன் கூறியது:
'பொன் விளையும் பூமி என்பதால், இதற்கு 'பொன்னேர்' என்றும், நன்மை செய்யும் பூமி என்பதால் 'நல்லேர்' எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். பண்டைய காலத்தில் சித்திரைப் பிறப்பின்போது மன்னர்கள் பொன்னால் செய்த ஏர் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுததாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. மன்னரைத் தொடர்ந்து குடிமக்களுக்கும் ஏர் பூட்டி உழும் வழக்கம் இருந்தது. இந்தப் பண்பாடு தாய்லாந்து, பர்மா, மலேசியா, இலங்கை, கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
சித்திரை மாதம் என்பது, கோடைக்காலத்தின் தொடக்கக் காலம். தை மாதத்தில் அறுவடைக் காலம் முடிந்தவுடன் வெள்ளாமை விளைந்த வயல்கள் காய்ந்தும், இலை தழைகள் சருகாகியும் கொஞ்சம் பொதுபொதுவென இருக்கும்.
கோடை வெயில் தொடங்கியவுடன் கடும் வெப்பத்தால் வயல் மண் இறுகிவிடும். மழை பெய்தவுடன் இலகுவாகாது. எனவே, கோடைகாலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும், நடவும் இல்லாமல் உழுது போடுவர். இந்தக் கோடை உழவுச் சடங்கைத்தான் 'ஏர் பூட்டுத் திருவிழா', 'நல்லேர் பூட்டுதல்', 'பொன்னேர் பூட்டுதல்' என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயரில் கொண்டாடப்படுகிறது'' என்கிறார் மணி.மாறன்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் இரா. வெங்கடேசன்:
வேளாண்மை செழிக்கவும், மனித இனம் வளம் பெறவும் சித்திரைத் திங்களில் இந்த விழா நடத்தப்படுகிறது. கோடையில் உழும் உழவுதான் செல்வ வளத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். அதனால்தான் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் இந்தச் சடங்கு தமிழ்நாடு முழுவதும் சிறு, சிறு வேறுபட்ட தன்மைகளுடன் நிகழ்த்தப்படுகிறது.
சித்திரை மாதத்தில் நல்ல நாள் பார்த்து, உழுதல் அல்லது சித்திரை மாதத்தில் முதல் மழை பெய்தவுடன் ஏர் பூட்டி உழுதல் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குழுவாக இணைந்து உழும்போது, ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுப்பர். அது, பெரும்பாலும் கோயில் நிலமாக இருக்கும். சிலர் தனியாக தங்களது குடும்பத்துடன் மட்டும் சேர்ந்து வழிபடும் வழக்கமும் உள்ளது.
இதையொட்டி, அதிகாலையில் வீட்டைக் கழுவி அல்லது பசுஞ்சாணத்தால் மெழுகி கோலமிட்டு, குளித்துவிடுவர். இதேபோல, குளம், கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலையில் மாடுகளைக் குளிப்பாட்டி, குங்குமப் பொட்டு வைத்து அலங்காரம் செய்து வயலுக்கு அழைத்துச் செல்வர். மேலும், வழிபாட்டுக்குத் தேவையான பொருள்களையும், ஏர் கலப்பையையும் எடுத்து கொண்டு செல்வர்.
ஏர் கலப்பை, மண்வெட்டியைக் கழுவி பூஜைக்கு வைப்பர். அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும்போது உழுவதற்குத் தயாராக இருக்கக் கூடிய நிலத்தின் ஈசானி மூலையில் மண்ணைக் குலைத்து மேடு போல அமைத்து, மஞ்சளில் அல்லது மண்ணில் பிள்ளையார் பிடித்து, அருகம்புல் சொருகி வைப்பர். சில இடங்களில் பிள்ளையாருடன் சிறு, சிறு கற்களையும் எடுத்து வந்து கழுவி, அவற்றுக்கும் சந்தனம், குங்குமம் இட்டு 7 கற்கள் ஊன்றப்படும். அந்த 7 கற்களும் ஏழு கன்னிமார்களைக் குறிக்கும்.
பச்சரிசியில் தேங்காய் உடைத்து ஊற்றி, அவற்றுடன் வெல்லம் கலந்தோ, சில இடங்களில் பச்சரிசியில் தேங்காய், வெல்லப்பாகு, பொட்டுக்கடலை, எள், அவல் போட்டு கிளறியோ சாமிக்கு படையலிடப்படும். வழிபடும்போது நிலத்தில் நல்ல மழை பெய்து நிலம் செழிப்படைய வேண்டும், விளைச்சலால் வீடு பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வர்.
வழிபாடு முடிந்த பிறகு பொன்னேர் பூட்டி வயலில் குறிப்பிட்ட பகுதியில் நவதானியங்களைத் தூவி, 3 அல்லது 5 முறை உழுது விடப்படும். முன்னால் ஓர் ஏர் செல்ல, அதைத் தொடர்ந்து பல ஏர்கள் செல்லும். படையலிடப்பட்ட உணவு பண்டங்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்படும். பொன்னேர் பூட்டி உழுதவர்களுக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து தீட்டு அல்லது கண்ணேறு கழித்தல் செய்யப்படும். பின்னர், வீட்டில் சைவ உணவு பரிமாறப்படும்.
இந்தச் சடங்கைச் செய்வதன் மூலமாக ஒரு தலைமுறையினர் தமக்குப் பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு உழவுதான் முதன்மையான தொழில் என்றும், அது நமக்கு வாழ்வு தரும் என்பதைச் சொல்கிறது. பொன்னேர் பூட்டும் சடங்கு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த அடையாளமாகவும், நீட்சியாகவும் உள்ளது'' என்கிறார் வெங்கடேசன்.
இயந்திரமயமாக்கல், உழவு மாடு வளர்ப்பு குறைவு போன்ற காரணங்களால் பொன்னேர் பூட்டி வழிபடுவது குறைந்துவிட்டது. என்றாலும், காலத்துக்கேற்றவாறு பெரும்பாலான கிராமங்களில் ஏர் கலப்பை, உழவு மாடுகளுக்கு பதிலாக டிராக்டர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, பொட்டு வைத்து, பாரம்பரியத்தைக் கைவிடாமல் பொன்னேர் வழிபாட்டைத் தொடர்கின்றனர்.
காலம் மாறிவிட்டாலும் சிறு, குறு விவசாயிகள் ஏர் கலப்பை, உழவு மாடுகளை வைத்து பாரம்பரிய முறைப்படி வழிபடுகின்றனர். ஏர் கலப்பை, உழவு மாடு, டிராக்டரும் இல்லாத விவசாயிகள் மண்வெட்டி, கடப்பாரை போன்ற விவசாய கருவிகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.
சில கிராமங்களில் பொன்னேர் பூட்டுதல் விழா ஊர்த்திருவிழா போன்று நடத்தப்படுகிறது. வேளாண்மை இயந்திரமயமாக மாறினாலும் கூட, விவசாயிகள் பொன்னேர் பண்பாட்டைத் தொடர்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.