முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து "ஜெயிலர்' இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. "ஜெயிலர்' படத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் "ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்திருக்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஜெயிலர் 2' படத்தில் எனக்கான காட்சிகளுக்கான ஷுட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சின்ன ரோலில்தான் நடித்திருந்தேன். இந்த முறை அதிக காட்சிகள் இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததற்கு நெல்சனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாள்களில் தனது ரசிகர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் சூர்யா. தனது மன்றத்தினரின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து அவர்களை வழிநடத்தி வரும் அவர், இம்முறை தமிழகம் முழுவதும் இருந்து வந்த 4 ஆயிரம் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
கடந்த 13-ஆம் தேதி மற்றும் 14 }ஆம் தேதி இரு நாள்கள் போரூரில் உள்ள சக்தி பேலஸில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் 70 மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் இருப்போர் பங்கேற்றுள்ளனர்.
நடிகை மோனாலின் மரணம் குறித்து பேசும்போதெல்லாம் உடைந்துவிடுவார் அவரின் சகோதரி நடிகை சிம்ரன். ஒவ்வொரு வருடமும் மோனாலின் நினைவு நாளை அனுசரித்து வரும் நடிகை சிம்ரன், தன் எக்ஸ் பக்கத்தில், "இந்த 23 வருடங்களில் ஒருநாள்கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல்.
நீ மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிம்ரனின் இந்தப் பதிவு அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. பார்வை ஒன்றே போதுமே படத்தில் அறிமுகமான மோனாலின் மரணம் இப்போது வரை சர்ச்சையாகவே இருந்து வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் "மதராஸி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். "மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5}ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் தேதியை அறிவித்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பதிவிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு விஜயின் "கோட்' திரைப்படமும் இதே தேதியில்தான் வெளியாகியிருந்தது. அப்படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பிஜு மேனன், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.