குப்பைத் தொட்டியிலிருந்து அரசுப் பணி...

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை காப்பாற்றப்பட்டார்.
குப்பைத் தொட்டியிலிருந்து அரசுப் பணி...
Published on
Updated on
1 min read

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை காப்பாற்றப்பட்டார். அவர் வளர்ந்து, கல்வி பயின்று இன்று நாக்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்துள்ளார். 'மன உறுதி, தைரியம், கடின உழைப்புடன் கல்வியும் இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்' என்கிறது மாலா பாப்பல்கரின் வெற்றி.

மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் ரயில் நிலையத்தின் குப்பைத் தொட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தை மீட்கப்பட்டு, அமராவதியின் பரத்வாடாவில் உள்ள 'பார்வையற்ற, காது கேளாதக் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தில்' சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தை பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் சமூகச் சேவகர் 'பத்மஸ்ரீ' சங்கர் பாபாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், குழந்தைக்கு 'மாலா பாப்பல்கர்' என்று பெயரிடப்பட்டது. மாலா அர்ப்பணிப்புடன் கல்வியைத் தொடர்ந்தார். 2018-இல் அமராவதி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், அரசு விதர்பா அறிவியல், மனிதநேய நிறுவனத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மகாராஷ்டிரா பொது சேவை ஆணையத்தின் 'குரூப் சி' தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தற்போது 26 வயதான மாலா, நாக்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். அவர் கூறியது:

'25 ஆண்டுகள் நான் வளர்ந்த ஆசிரமத்தைவிட்டு வெளியேறி நாக்பூரில் தனியாக வாழ்வது குறித்து கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. என்னை கவனத்துடன் வளர்த்த சங்கர் பாபாவை நான் மிகவும் 'மிஸ்' செய்வேன். இந்த அரசு வேலை எனது முதல் படி மட்டுமே. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது.

பத்து வயதில் பார்வையை இழந்தேன். அதன் பிறகு பிரெய்லி முறையில் கல்வி கற்றேன். சுவாமி விவேகானந்தர் பார்வையற்றோர் பள்ளியில் படித்த நான், பின்னர் விதர்பா மகா வித்யாலயாவில் இளங்கலை பட்டம் பெற்றேன். எனது கல்லூரிப் படிப்பு செலவுகளை மனிதாபிமானம் உள்ள பிரகாஷ் டோப்லே பாட்டீல் ஏற்றுகொண்டார்.

'போட்டித் தேர்வுகள் எதிர்கால வாழ்க்கைக்கு - வாழ்வுக்கு வழி வகுக்கும்' என்று பாபா அறிவுறுத்தவே, பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன். கரோனா காலத்தில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்தேன்.

எனக்கு புத்தி கூர்மையுள்ளது என்று பாபா சொன்னாலும், பார்வையற்ற மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனக்கும் எழுந்தன. பாடப் புத்தகத்தை என்னால் வாசிக்க முடியாது. ஆடியோ புத்தகங்களைக் கண்டுபிடித்து வாங்குவது பெரிய சிரமமாக இருந்தது. அவற்றைக் கேட்டு, பயிற்சியாளர்களைத் தொலைபேசியில் அழைத்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வேன்.

என்னைக் காப்பாற்றி வளர்த்து கல்வி கொடுத்த பாபாவை நான் கவனித்துக் கொள்வேன். பாபா பார்வையற்ற உடல் ஊனமும் உள்ள காந்தாரி என்ற பெண்ணையும் வளர்த்திருக்கிறார். காந்தாரி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறார்'' என்கிறார் மாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com