
ட்டி . ஆர்.
அண்மையில் தனது 88-ஆவது வயதில் காலமான போப் ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அர்ஜென்டினாவில் சாண்டா ஃபே என்னும் நகரில் உள்ள அந்தப் பள்ளியில் மாணவர்கள் அவரை, 'குழந்தை முகம்' என்றே கூப்பிட்டார்கள்.
அந்த மாணவர்கள் அவர்களது பள்ளி இறுதி வகுப்புகளில் படித்தார்கள். அந்தச் சமயம் அவரது நுரையீரல் அவருடைய வாழ்க்கையையே பாதிக்கும் வண்ணம் சேதமடைந்திருந்ததால், எடுக்க வேண்டியதாயிற்று. அதனால் அவருடைய மாணவர்கள் அவரைவிட சற்றே இளையவர்களாக இருந்ததால் அவர் சற்றுத் தொலைவிலேயே இருந்து பழக வேண்டியதாயிருந்தது. அதிலும் ஒருவன் அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தவனாக, ஆனால் ஒரு பொழுதும் புன்னகை புரியாதவனாக இருந்தான்.
அவர் அவர்களுக்கு 'எல்சிட்' என்னும் ஸ்பானிய இதிகாசத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்தார். மற்ற ஆசிரியர்களைப் போல அவருக்கும் பள்ளிப் பாடம் புகட்டும் சராசரி வேலைக்கும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியத்துக்குமான இடைவெளி உறுத்தலாக இருந்தது. மாணவர்களும் ஒருவிதத் தடுமாற்றத்தில் இருந்தார்கள். அவர்கள் பிரெடெரிக் கார்சியா லோர்க்காவைப் படிக்க மிகவும் விரும்பினார்கள். அல்லது பெர்னாண்டோ ரோஜாசின் 'செலஸ்தினா' என்னும் உணர்ச்சிகளைத் தூண்டும் புத்தகத்தைப் படிக்க நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
பிரான்சிஸ் சற்று இடைஞ்சலான ஆனால் கல்வி கற்பித்தல் முறைக்கேற்ப ஒரு முடிவை எடுத்தார். அந்த மாணவர்கள் வீட்டில் எல்சிட் இதிகாசத்தைப் படிப்பார்கள். வகுப்பில் அவர்கள் விரும்பும் புத்தகங்களை! அவர்கள் விரும்பியவற்றைப் படிப்பதன் மூலம் அவர்களுக்கு இலக்கியத்திலும், கவிதைகளிலும் பிடிப்பு உண்டாயிற்று. அதன் வழியாக மேலும் பல படைப்பாளிகளைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிரான்சிஸ் பாடத் திட்டத்தை லேசாக ஒதுக்கிவிட்டு கட்டமைக்கப்படாத ஒரு திட்டத்தின் வழியே இந்தப் படைப்பாளிகளை வாசிக்க வழிவகை செய்து கொடுத்தார். இத்தகைய இயல்பான அணுகுமுறை அவருக்கும் 'தோதாக' இருந்தது. அவருடைய மாணவர்களை அவர்களின் உலகங்களை அவர் அணுக ஏதுவாக அமைந்தது.
மாணவர்களின் படிப்பு விசாலமடைந்து வருகையில் அவர் அவர்களை எழுத்தில் ஈடுபடுத்தினார். அவர் இலக்கியம் என்பது வாழ்வையே கலையாகப் பார்ப்பது என்று அவர் கருதினார். அவர் வாழ்வு முழுவதும் அது தன்னை ஆட்கொள்ளும் என்றும் நினைத்தார். பாஸ்டராக அவர் எழுதிய ஒரு முக்கியமான கடிதத்தில், 'உருவாக்குவதில் இலக்கியத்தின் பங்கு' பற்றி விவரித்திருந்தார்.
அத்தகைய கடிதம் ஒரு சமய குருவின் எண்ணங்களை வடிக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டியிருந்தும் அது எல்லோரையும் சென்றடையும் வண்ணம் 'நாவல்களையும் கவிதைகளும் கற்றுணர்கையில் , 'படிப்பின் மகிமை என்பது தனி நபரின் முதிர்ச்சிக்கு வழிகோலுகிறது ' என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரான்சிஸ் அவருடைய மாணவர்கள் இரண்டு பேர் எழுதிய சிறுகதைகளை உலகப் புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும் அவரது நண்பருமான ஜார்ஜ் லூயி போர்ஹேவுக்கு அனுப்பினார். போர்ஹேயின் செயலாளர், பிரான்சிஸின் இசை ஆசிரியர்.
போர்ஹே அந்த இரண்டு இளம் எழுத்தாளர்களின் கதைகளை வெகுவாகப் பாராட்டி 'ஒரிஜினல் கதைகள்' என்று பிரசுரித்தார். அதற்கு முன்னுரை எழுதுகையில், 'இந்த முன்னுரை இந்தப் புத்தகத்துக்கு மட்டுமில்லை வரவிருக்கும் காலத்தில் மேலும் மேலும் படைக்கவிருக்கும் இளைஞர்களின் கூட்டத்துக்காகவும்தான்' என்றார்.
2010-இல் போப் ஆண்டவர் அந்த மாணவர்களுடன் இணைந்தபோது, 'அவர்களை எப்போதும் தனது மாணவர்களாகவே நினைப்பேன்'' என்றார்.
போப் ஆண்டவராக அவர் இருந்தபோதும், அவர் தன்னை ஒரு ஆசிரியராகவே கருதினார். இலக்கியத்தின் மீதான அவரது ஆயர் கடிதங்கள் கதை சொல்லலின் பல்வேறு அவதாரங்களை எடுத்துக் காட்டின. அவரைப் பொருத்தவரை, 'இயேசு அரூபப் பொருளல்ல. ரத்தமும் சதையும் நிறைந்த மனிதர்.
அவரது உடல் கூருணர்வுகளும், உணர்ச்சிகளும் எண்ணங்களும் நிறைந்தது; வார்த்தைகள் சவால்களையும், சமாதானப்படுத்தலையும் கொண்டவை; கைகள் தொடுகையின் மூலம் ஆற்றுப்படுத்த வல்லவை; பார்வை, உய்வித்து உற்சாகப்படுத்துபவை; விருந்தோம்பல், மன்னித்தல், அறச்சீற்றம், தைரியம் என எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. சுருக்கமாகச் சொன்னால் ஆழ்ந்த காதலின் உரு' என்று கூறியிருந்தார்.
தன் கடிதத்தை 'உண்மையில் யார் காணும் சக்தியைக் கற்கிறார்களோ, அவர்கள்தாம் காணாததின் நெருக்கத்தை அடைகிறார்கள்' என்ற பால் செலானின் வார்த்தைகளுடன் முடித்திருந்தார்.
போப் பிரான்சிஸின் கருத்தான - 'இலக்கியம் அதனுடைய கொந்தளிப்புடன், ஆர்வத்துடன்,அர்த்தமுள்ள அனுபவங்களுடன் நமது ஆதாரமான இருப்பைக் கணிப்பதில் ஈடுபடுகிறது' - இவ்வாக்கியம் பல எழுத்தாளர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.
உதாரணமாக, நோபல் பரிசு பெற்ற கத்தோலிக்கராக மதம் மாறிய டோனி மாரிசன் 2015-ஆம் ஆண்டு தேசிய வானொலியில் பேசியபோது, 'சர்ச்சையும் அழகும் நிறைந்த இந்த போப் ஆண்டவர் பிரான்சிஸினால் கவரப்பட்டு நான் மறுபடியும் சர்ச்சுக்குப் போக ஆரம்பித்து விடுவேன் போலிருக்கிறது'' என்றார்.
போப் ஆண்டவர் ஆரம்பம் முதலே இயேசு சபையைச் சார்ந்தவர். புலமை நிறைந்தவர், சமத்துவவாதி. அவர்தான் இயேசு சபையின் முதல் போப். இது நடக்க முடியாத ஒரு போர்ஹேயிஸத்தின் நிகழ்வு போன்றது.
போர்ஹேயின் 'புராணக் கதை' என்னும் படைப்பு பிரான்சிஸூக்கு மிகவும் பிடித்தமானது: அவர்களின் மறைவுக்குப் பிறகு கெயினும் எபெல்லும் ஒரு பாலைவனத்தில் சந்திக்கிறார்கள். சகோதரர்கள் இருவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து தீப்பற்ற வைத்து சமைத்து உண்கிறார்கள்.
மாலையில் களைப்படைந்தவர்கள்போல அமைதியாக எதுவும் பேசாமல் சாப்பிடுகிறார்கள். தீயின் வெளிச்சத்தில் எபெல்லின் நெற்றியில் பாறையால் ஏற்பட்ட காயத்தைக் கெயின் காண்கிறான். அவன்தான் உண்ணும் ரொட்டியை கீழே போட்டுவிட்டு சகோதரனிடம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்கிறான் . கூடவே, 'நீ என்னைக் கொன்றாயா அல்லது நான் உன்னைக் கொன்றேனா?' என்று கேள்வியும் கேட்கிறான்.
'தனக்கு அது ஞாபகம் இல்லை' என்று சொல்லும் எபெல், 'அதனாலென்ன, இப்போது நாம் முன்பைப் போலவே சேர்ந்து விட்டோமே' என்கிறான். அதற்குப் பதிலாக கெயின், 'இப்போது எனக்கு உண்மையாகவே நீ என்னை மன்னித்து விட்டாய் என்று தெரிகிறது. ஏனெனில் மறப்பது என்பது மன்னிப்பது. நானும் மறக்க முயற்சிக்கிறேன்' என்கிறான்.
போப் ஆண்டவரின் மாணவர்களுக்கு பெருந்தன்மையுடன் முன்னுரை எழுதித் தந்த போர்ஹே ஒருமுறை தனது 66-ஆவது வயதில் போனஸ் அயர்ஸிலிருந்து சாண்டா ஃபேக்கு எட்டு மணி நேரப் பயணம் மேற்கொண்டார். போர்ஹே போப் ஆண்டவரிடம் அவர் தினமும் இரவு கடவுள் பிரார்த்தனை செய்து வருவதாகக் கூறினார். 'ஏனெனில் அதைச் செய்வதாக என் தாயிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன்' என்றார்.
ஒருமுறை போர்ஹேயைத் தன்னிடத்துக்கு அழைத்துச் செல்ல போப் ஆண்டவர் அவரிருந்த ஓட்டலுக்குச் சென்றார். அப்போது போர்ஹே , அவர் தனக்கு ஓர் உதவி தேவை என்றார். பின்னர் பிரான்சிஸிடம் சவரம் செய்து கொள்ளத் தனக்கு உதவும்படி கேட்டார். பிரான்சிஸ் பரிவுடனும் பணிவுடனும் அதைச் செய்து முடித்தார். அவரது இறுதிக் காலம் வரை போப் ஆண்டவரிடம் இந்த மாட்சிமை மிகுந்த குணங்கள் பிரகாசித்து நின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.