பேச்சு எனது மூச்சு!

'வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன்.
பேச்சு எனது மூச்சு!
Updated on
2 min read

பொ.ஜெயச்சந்திரன்

'வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு'' என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்றப் பேச்சுப் போட்டியின்போது, 'பாலின சமத்துவம்', 'உணவே மருந்து' ஆகிய தலைப்புகளில் பேசி முதலிடம் பெற்றவர்

ஷே.தமனா ரோஸ்னி. இவருக்கு மதுரை இலக்கிய

மன்றம் சார்பில் 'மகளிர் சுடரொளி' விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

அவரிடம் பேசியபோது:

'நான் 2011 ஜனவரி 5-இல் பிறந்தேன். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள புள்ளான்விடுதி எனும் கிராமம்தான் எனது சொந்த ஊர். எனது பெற்றோர் ஷேக்முகம்மது, ஷர்மிளா.

பணியின் காரணமாக ஆலங்குடிக்கு குடிபெயர்ந்தபோது, அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்தேன். கரோனா காலம் வந்தபோது, இணைய வகுப்புகளில் ஆசியர்கள் ஓரிரு மணி நேரம் பாடம் நடத்துவார்கள். கிட்டத்தட்ட 10 மணி நேரமாவது சும்மாவே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

ஒரு நாள் மேடைப் பேச்சு பேசுமாறு எனது அம்மா ஊக்கம் அளித்தார். சிறிய வார்த்தைகளை மனப்பாடம் செய்து பேசினேன். தொலைக்காட்சிகளில் பல்வேறு ஆளுமைகளின் பேச்சை உற்று கவனித்தேன்.

ஊரடங்கு முடிந்தவுடன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு சேர்ந்தேன். பேச்சு, கட்டுரை, இலக்கிய மன்றப் போட்டிகளில் பங்கேற்றபோது வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி கிடைத்தன.

7-ஆம் வகுப்பு படித்த நேரத்தில் புதுக்கோட்டை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பரிசு பெற்றேன். இதன்தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பட்டிமன்றம், கலை சொல்லுதல், அறிவியல் கண்காட்சி, வீதி நாடகம், இசைக் கருவி வாசித்தல், பேச்சுப் போட்டி என ஆறு போட்டிகளில் முதலில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றேன்.

எனது பேச்சுக்கு பெரிய அளவில் உதவியதே ஆலங்குடி அரசு நூலகம்தான். என்ன தலைப்பில் பேச போகிறமோ, அது சார்ந்த தலைப்புகளின் புத்தகங்களைத் தேடி வாசித்தாலே போதும். அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை வைத்து, நம்முடைய சொந்தக் கருத்துகளையும், வரலாறு சார்ந்த ஆய்வுகள், புள்ளிவிவரங்களையும் வைத்து மேடையே அசர வைக்கிற அளவில் பேசமுடியும். தொடக்கம் முதல் மேடை பயம் என்பது முற்றிலும் கிடையாது. எனது பேச்சில் தலைப்பை முன்னிறுத்தி ஒரு திருக்குறள் மேற்கொள் காட்டுவேன்.

ஒருமுறை எனது பேச்சை சமூக ஊடகத்தில் பார்த்துவிட்டு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்;யாமொழியே என்னைப் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதுபோல தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் மு.அருணாவிடமும் பாராட்டும் பெற்றேன்.

இதுவரையும் 75-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 25-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், 10-க்கும் மேற்பட்ட நினைவுப் பரிசுகள், கேடயங்களைப் பெற்றுள்ளேன். விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி, 2024- இல் வன உயிரின வார விழா பேச்சுப் போட்டி, திருச்சியில் 2025-இல் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளேன்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் பள்ளி அளவில் 7,55,939 மாணவர்களும், வட்டார அளவில் 1,51,699 மாணவர்களும், மாவட்ட அளவில் 7,587 மாணவர்களும், மாநில அளவில் 722 மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். அதில் நான் கலந்து கொண்டு மாநில அளிவில் முதலிடம் பெற்றது என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்! முயற்சி, பயிற்சி வெற்றி இதனை நோக்கியே பயணிக்கிறேன்'' என்கிறார் தமனா ரோஸ்னி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com