
'துப்பறிவாளன்', 'அயோக்யா', 'சவரக்கத்தி', 'துர்கா', இப்போது 'டென் ஹவர்ஸ்'... எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
தீவிரத் தன்மையோடும், உண்மையோடும் எளிய மக்களுக்கு நான் போய்ச் சேர்ந்திருக்கிறேன். வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் இங்கே சிறப்பு. இந்த சந்தோஷமே என்னை ஒவ்வொரு நல்ல சினிமாவுக்கும் கடத்திச் சேர்க்கும்.'' உள்ளங்கை தேய்த்தப்படி பேசத் தொடங்குகிறார்
சினிமாவுக்கு முன் பின் தொடர்பில்லாத குடும்பம். சென்னைதான் என் பூர்விகம். எல்லோரைப் போலவும், நானும் சினிமாவின் ரசிகன். அதுவும் நல்ல சினிமாக்களின் ரசிகன். பார்த்த படங்களை மறுநாள் பள்ளி வளாகங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதோடு சரி. மற்றபடி சினிமா உள்ளுக்குள் ஏறாது.
லயோலா கல்லூரியில் விஸ்காம் என படிப்பு ஓடிய காலம். புகைப்படத்துறையில் ஆர்வம். பள்ளிக் காலத்தில் இருந்தே புகைப்படங்கள் எடுப்பது, அதை டெவலப் செய்வது என ஒரு ஆர்வம் இருக்கும். அந்த நேரங்களில் நான் பார்த்த மணிரத்னம் - பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் வெளிவந்த ' நாயகன்' படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படம்தான் உள்ளுக்குள் சினிமா ஓட்டத்தைக் கொண்டு வந்தன.
கதையாகவும், காட்சியாகவும் தொடர்ந்து பார்த்து வந்த கதைகள் உள்ளுக்குள் விரிந்து கொண்டே இருந்தன. பி. சி. ஸ்ரீராமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். 'யாவரும் நலம்', தொடங்கி ' ஐ' படங்கள் வரை அவர் கூடவே இருந்தேன். இப்போது நீங்கள் வந்து பேசுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.
ஒவ்வொரு படத்திலும் ஒளியின் வித்தியாச அடுக்குகளை நேரில் இருந்து பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்திலிருந்து எளிமையாக எப்படிப் படம் செய்வது என்பதை நோக்கியே நகர்ந்து வந்திருக்கிறேன். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம்.
உணரக்கூடிய, புரியக்கூடிய, எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடியதுதான் சினிமா. திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியிலிருக்கிற புரிதல். உண்மையில் யதார்த்த சினிமா எடுப்பதைப் போல சுலபமான விஷயம் எதுவும் கிடையாது. அப்படியே தொடரும் என்றும் சொல்ல முடியாது.
எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து அப்படித் தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. டெக்னாலஜி, ஒளிப்பதிவுக்கு நிறைய சுதந்திரங்களையும், வசதியையும் கொடுத்திருக்கிறது. மிஷ்கின், ஆதித்யா இப்போது 'டென் ஹவர்ஸ்' இளையராஜா கலியபெருமாள்..இப்படி ஒவ்வொரு இயக்குநரும் ஒரு மாதிரி.
இதில் எல்லாம் இருந்த திரைக்கதைதான் முதல் சுவாரஸ்யம். அதைக் காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான்.
இத்தனை வருட பயணம், இத்தனை படங்கள் எனப் பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது. இருள் என்பது குறைந்த ஒளி என்றார் பாரதி.
ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை எடுப்பதற்கு, நிறைய வழிகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றையும் முயற்சித்துக் கொண்டிருக்க முடியாது. சரியானதைத் தேர்ந்தெடுப்பதில் சுவாரஸ்யமும் இல்லை.
அந்தக் காட்சிக்கு சிறந்த வழி எது என்பதைப் பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. அது கைக்குச் சிக்காது. கிடைத்தால் ஒளியின் சூட்சுமம் புரியும். கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிஷங்கள் நம்மையே அழகாக்கும். என் எல்லாப் படங்களுக்குமே நல்ல வசீகர வார்த்தைகள் கேட்டு இருக்கின்றன. எல்லோருக்கும் நன்றி.
ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய்க் கதை செய்வது மட்டும்தான். அதைப் புரிந்துக் கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். மிகை என்பது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றுதான். அது கமர்ஷியல் சினிமாவின் அடிப்படை. கதையில் மிகை, நடிப்பில் மிகை, ஒப்பனையில் மிகை, வண்ணத்தில் மிகை, ஒலியில் மிகை... இதனால்தான் ஒளிப்பதிவும் மிகையாக இருக்கிறது. சில இடங்களில் அது அழகு.
சில இடங்களில் அதுவே உறுத்தல். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். எது திரைக்கதையோ, அதற்குப் பணியாற்ற வேண்டும். இந்தக் கட்டாயம் இருக்கும் வரை சினிமாவில் மிகை என்பது இருந்து கொண்டே இருக்கும். மிகையில்லாத சினிமாவை இங்கே எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்....'' என ஆர்வமாக பேசி முடிக்கிறார் ஜெய் கார்த்திக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.