'இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' என்றும் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
இங்கு திருட்டுகள் நடப்பதில்லை. கடைகள், வீடுகளுக்குப் பெயருக்காகக் கதவு இருந்தும், அவை ஒருபோதும் பூட்டப்படுவதில்லை. இருந்தாலும் எந்தவித அசம்பாவிதமும் எதுவும் நடப்பதில்லை.
திருட்டுகளும் கொள்ளைகளும் அதிகரித்து வரும் நேரத்தில், இன்றைக்கும் இப்படி ஒரு வித்தியாசமான, அதிசயமான கிராமம் இருப்பது ஆச்சரியம்தான். இங்குள்ள கடைகளில் கடைக்காரர்கள் இருக்க மாட்டார்கள். பொருள்கள் தேவைப்படுபவர்கள் விலையைச் சமமான பணத்தை வைத்துவிட்டு பொருளை எடுத்துச் செல்கிறார்கள். வீட்டுக் கதவுகளும் திறந்திருக்கும். மறந்தும் யாரும் மற்றவர் வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பதில்லை. நுழைவதும் இல்லை.
இதனால் அந்தக் கிராமமானது நேர்மை, நம்பிக்கை கிராமமாக மதிக்கப்படுகிறது. 'அங்கமி' பழங்குடியினரின் தாயகமாக கோனோமா விளங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்தக் கிராமத்தினர் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். காலங்கள் மாறினாலும் தங்கள் பழக்க வழக்கத்தை யாரும் மாற்றிக் கொள்ளவில்லை.
கோனோமாவில் சுமார் 425 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கிராமத்தில் குப்பை கூளங்கள் இல்லை. உள்ளூர்வாசிகள் அதிகபட்ச இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு பெருமளவில் வளரும் செடியான 'குவோனோ'வின் பெயரால் கோனோமா என்ற பெயரிடப்பட்டது. இங்கு வசிக்கும் அங்கமி பழங்குடியினர்கள் வீரம், போர்த் திறமைக்கு பெயர் பெற்றவர்கள். மூங்கில் , கரும்பு விளைச்சல் மட்டுமல்லாமல் நெசவுக் கலையில் தலைசிறந்த கைவினைஞர்களுக்கும் இந்தக் கிராமம் பெயர் பெற்றது.
வேட்டையாடுதல் உள்ளூர்வாசிகளின் முக்கியத் தொழிலாக இருந்த நிலையில், 1998 முதல் வேட்டையாடுதல் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. வாழ்வாதாரத் தேடலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எவ்வாறு இணைந்து வெற்றிகரமாகச் செயல்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கோமோனா மாறி இருக்கிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வன வளங்கள் மூலம் வருமானத்துக்கு மாற்றுவழியை தேடுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் குவியும் கிராமமாகவும் கோனோமா மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.