தற்கால விவசாயிகளின் பிரச்னைகளை பேசும் விதமாக உருவாகி வரும் படம் 'உழவர் மகன்'. கெளஷிக், சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ், விஜித் சரவணன், யோகி ராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஐயப்பன். சுப லெட்சுமி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
'அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம். தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றி இந்தத் திரைக்கதை அழுத்தமாகப் பேச வருகிறது. நாள்தோறும் இந்தத் தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலங்கள் களவாடப்படுகின்றன. வெவ்வேறு தொழில்களுக்கு இரையாக்கப்படுகின்றன. உயிர்த்
தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பவை எவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசுகிறது.
விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் உள்ளது. அதனுடன் இணைந்து ஒரு சமூகக் கருத்தை வெளிப்படுத்தி திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம். விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி 40 நாள்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.