ஒரு குற்றமும் அதன் ஆதாரமும்!

'சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது.
ஒரு குற்றமும் அதன் ஆதாரமும்!
Published on
Updated on
2 min read

'சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது.

பிறக்கும்போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.

இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள்.

இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை.'' இதமான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் சபரிஷ் நந்தா. படத் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை, உதவி இயக்குநர், குறும்பட உலக அனுபவம் என சினிமாவில் நீண்ட பயணம் கொண்டவர். தற்போது 'இந்திரா' படத்தின் கதையோடு வருகிறார்.

இந்திரா.... தலைப்பு தருகிற அர்த்தம் என்ன...

ஒரு தனி நபரின் பெயர்தான். ஒரு த்ரில்லர் கதை. அதனால் தலைப்பை இப்படி வைத்தோம். இந்த திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஓர் உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது.

அதிசயத்தக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்து கொண்டே இருப்பதாக தெரிந்தது.

கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள்.

அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாம்...

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.

அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும்.

அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை.

அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

வசந்த் ரவி, சுனில் என மாறுபட்ட நடிகர்களை எப்படி கொண்டு வந்தீர்கள்...

முதலில் இந்தக் கதையில் வசந்த் ரவி இல்லை. கிச்சா சுதீப் நடிக்க வேண்டிய கதை. அது கை மாறி வசந்த் ரவிக்கு வந்து விட்டது. அவருக்கு இது அவ்வளவு பொருத்தம். ஒரு எதார்த்தமான நடிகர். எப்படி ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசுவாரோ... அப்படியேதான் அவர் திரையில். அவ்வளவு அமைதி. ஒரு நடிகராக இன்னும் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்கள் அவரிடம் நிறைய உண்டு.

'ராக்கி', 'தரமணி' என அவரின் கதை தேர்வுகளை பார்த்தாலே தெரியும். அவர் வழக்கமான நடிகர் இல்லை. இந்தப் படம் அவரின் முந்தைய அடையாளங்களை மாற்றும். சுனில் வந்ததும் இந்தக் கதை அடுத்தக் கட்டத்துக்கு போய் விட்டது. அவரை 'ஜெயிலர்' படத்தில் காமெடியாகத்தான் பார்த்திருப்போம். இதில் அவர் வில்லன். வழக்கமான சுனிலின் வேறு ஒரு பரிமாணத்தை காட்ட வேண்டும் என்று ஓர் இயக்குநராக நினைத்தேன்.

அந்த இடத்தில் சுனில் இருப்பார். என்னையும் அடுத்த இடத்துக்கு கொண்டு போகிற படம். ஹீரோயின் மெஹ்ரின் பிரசன்டா தமிழில் 'பட்டாசு' படத்தில் நடித்தவர். தெலுங்கில் எல்லோருக்கும் அறிந்த முகம். அவர்தான் ஹீரோயின். அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர் இப்படி வேடங்களுக்கு நல்ல நடிகர்கள் வந்திருக்கிறார்கள். 'சொப்பன சுந்தரி' படத்துக்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். நேர்த்தியான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com