முதன் முதலாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. இவர் நடிக்கும் 'கந்தன் மலை' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கிடுகு படத்தை இயக்கிய வீர முருகன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 'ஆதிங்கிற கேரக்டர்ல அதாவது படத்துக்கு ரொம்பவே முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார்.
அதாவது நாயகன் படத்துல கமல் நடிச்சிருப்பாரே அதை மாதிரி வசிக்கிற ஏரியாவுக்கு நல்லது செய்கிற கேரக்டர். மதுரை, காரைக்குடி சுற்று வட்டாரத்துல ஷூட்டிங் நடந்தது. அவ்வளவு அழகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு சீன்ல அவரை எதிரி அடிக்கிற மாதிரி இருக்கும். ஷூட்டிங்கிற்கு அவர் கூடவே வருகிற அவரது கட்சித் தொண்டர்கள் அந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அந்தச் சமயத்துல 'நடிக்க வந்துட்டா டைரக்டர் சொல்றதைக் கேக்கணும்ப்பா, எல்லாரும் பேசாம இருங்கன்'னு
அவங்களை அமைதிப்படுத்தினார் என்கிறார் இயக்குநர் வீரமுருகன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸூக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தனது திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தான் எடுக்க விரும்பும் பார்ட் 2 திரைப்
படம் குறித்தும் தனது குழந்தைகள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் தனது படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பும் படம் எது என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் சிவகார்த்திகேயன், 'முதலில் எனக்கு இரண்டாவது பாகம் என்றாலே பயம்தான். நல்ல படத்தை இரண்டாவது பாகம் எடுத்து, கெடுக்க வேணாம்னு நினைப்பேன். ஆனால், 'மாவீரன்' படத்துக்கு இரண்டாவது பாகம் எடுத்தால் நலம்' என்று கூறியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரஜினிகாந்த், பூஜா ஹெக்டே, அமீர் கான், நாகர்ஜூனா, சௌபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் அமீர் கான் பேசுகையில், 'நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் மட்டுமேதான் காரணம். அவருடைய புன்னகை, கண்கள், அவரின் எனர்ஜி ஆகியவை எனக்கு பிடிக்கும். நான் கதையைக் கூட கேட்கவில்லை. பணம் கேட்கவில்லை. தேதி விவரங்கள் பற்றிகூட கேட்கவில்லை. எப்போது படப்பிடிப்பு என்று மட்டும்தான் கேட்டேன்'' எனப் பேசினார் அமீர்கான்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தைப் பாராட்டி நடிகை சமீரா ரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள், பாதிப்புகள் அதிகமான பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிக முக்கியமானது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த முகாம்களில் மகப்பேறியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம் என அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
தமிழக அரசும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது பல உயிர்களைக் காக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.