சவூதி இளவரசர் காலீத் பின் தலாலின் மூத்த மகன் அல்-வலீத், அண்மையில் மறைவுற்றது அந்த நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இருபது வருடங்களாக கோமாவில் இருந்த அவர் என்றாவது ஒருநாள் கண் விழிப்பார் என்ற நம்பிக்கையில் உலகின் மிகச் சிறந்த கோமா சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தார் இளவரசர். ஆனால், பலனில்லை.
கோமாவின் ஆரம்பக் கால கட்டத்தில் சில விநாடிகள் அவருக்கு நினைவு திரும்பியது. அப்போது அவர் கேட்ட ஒரேயொரு கேள்வி, 'என் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்?'' என்பதுதான். ஆனால் விபத்தில் அவரது நண்பர்கள் இருவரும் உயிர் தப்பிவிட்டார்கள்.
'எதிர்காலத்தில் அரசில் முக்கியமான பொறுப்புகள் ஏற்க வேண்டியிருக்கும். அப்போது அவன் அந்தப் பொறுப்புகளைத் திறமையுடன் நிர்வகிக்க வேண்டும்' என விரும்பினார் இளவரசர் காலித். இதனால் அவர் தனது மகனை லண்டனில் ராணுவப் பள்ளியில் சேர்த்தார்.
இயல்பிலேயே சாகசத்தை விரும்பும் இளைஞர் அல்-வலீத், 2005-இல் ஒருநாள் அதிவேகமாக காரை ஓட்டினார். அவரது நண்பர்கள் இருவர் உடனிருந்தனர்.
சொகுசு கார் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சாலையின் குறுக்கே இருந்த கான்கிரீட் தடுப்பில் மோதியது. அந்த விபத்தில் படுகாயமடைந்த அல்-வலீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிலநாள்களில் மரணம் நிகழும் என்று மருத்துவர்கள் கூறினர். திறமைமிக்க மருத்துவர்களின் கடும் முயற்சிகள் பலனளிக்காமல் கோமாவில் விழுந்தார் அல்-வலீத்.
முதல் பத்து ஆண்டுகளுக்கு லண்டனிலேயே சிகிச்சை அளித்தாலும், அதன் பிறகு அல்-வலீத் சவூதி அரேபியாவுக்கே கொண்டுவரப்பட்டார். அரசர் அப்துல் அஜீஸ் மருத்துவ நகரத்தில் அவருக்குப் பிரத்யேகமான அறையை உருவாக்கி, அங்கே அவருக்கு நவீன சிகிச்சைகள் அனைத்தும் தரப்பட்டன.
'அல்-வலீத்தைக் கருணைக்கொலை செய்யலாம்' என பலமுறை மருத்துவர்கள் கூறினர். 'என் மகனின் உயிரை எடுக்க நான் யார்?' என்று கேட்டு, மறுத்துவிட்டார் இளவரசர்.
தினமும் இரவில் தன் மகனுக்குப் புத்தகம் படித்துக் காட்டினார் இளவரசர் காலித். அன்றைய குடும்ப, அரசியல் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். தினமும் பிரார்த்தனைகளை நடத்த ஏற்பாடு செய்தார். புனித நாள்களில் அந்த அறை அழகாக அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அல்-வலீத்தின் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அல்-வலீத்துடன் இருக்கும் செவிலியர்கள் பேசிக்கொண்டே இருக்கப் பணிக்கப்பட்டனர். அவ்வப்போது மெல்லிசை இசைக்கப்பட்டது. ஆனால் எதற்கும் பலனின்றி, மரணத்தைத் தழுவி, தன் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார் அல்-வலீத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.