முன்மாதிரி பள்ளி..

இயற்கை சூழலில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் நடத்திவருகிறார்.
முன்மாதிரி பள்ளி..
Published on
Updated on
2 min read

பொ.ஜெயச்சந்திரன்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் உள்ள மிரட்டுநிலையின் முக்கிய பிரதான சாலையில், மரங்களின் நடுவே இயற்கை சூழலில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை தலைமையாசிரியர் அழ.முத்துக்குமார் நடத்திவருகிறார்.

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை, கல்வி சார்ந்த விஷயங்களை எடுத்துரைக்கும் அவர், பல்வேறு பள்ளியின் மேம்பாட்டுக்காகப் பெருமளவு உதவியாக இருந்து, "முன்மாதிரி பள்ளி'யாக்கியுள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'புதுகை பெரியார் நகரில் வசித்து வருகிறேன்.

2019-ஆம் ஆண்டில் இருந்து இந்தப் பள்ளியில் பணியாற்றி வருகிறேன்.

பள்ளி வளர்ச்சிக்காக, நான் எனது ஊதியத்தில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வருகிறேன். மேலும், நண்பர்களிடம் உதவிகளைப் பெற்றும் உதவிகளைச் செய்துவருகிறேன்.

கடந்த ஆண்டு காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற 104 மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற 130 மாணவர்களுக்கும் தலா ரூ.500 வீதம் ஊக்கத் தொகையாக வழங்கினோம். மாணவர்களுக்கு நாள்தோறும் தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

பேருந்து வசதி இல்லாததால், பள்ளிக்கு சரியான நேரத்தில் வர முடியாத மாணவர்கள் 36 பேருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எனது நண்பர் மீ.மாதவனிடம் பேசி ரூ.2 லட்சம் மதிப்பில் மிதிவண்டிகளை வாங்கித் தந்தேன். 9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் சார்பில் இலவசமாக சீருடையை வழங்குகிறோம். மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக, வாய்பாடு ஒப்புவிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பேனா வழங்கப்பட்டு வருகிறது.

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பள்ளி சார்பாகவும், ஆசிரியர்கள் சார்பாகவும் ஒவ்வொரு ஆண்டும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பாடவாரியாக, சதவீதத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் ஆசிரியர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட முறையில் வெள்ளிப் பொருள்களைப் பரிசாக வழங்குகிறேன்.

தேசிய திறனாய்வுத் தேர்வில் பா.ரித்தீஷ் என்ற மாணவரும், தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களுக்கான அறிவுத்திறன் தேடல் திட்டத் தேர்வில் முகமது அன்சாரி என்ற மாணவரும் தேர்ச்சி அடைந்து எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றோம். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு தரவரிசை தொகுதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் மூலமாக வாக்களித்து தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு "நல்ல மாணவர் விருது' வழங்குகிறோம். முழுமையான ஆய்வக வசதி, இரண்டு எல்.இ.டி. டி.வி. மூலம் நவீன முறையில் கற்பித்தல் பயிற்சி, அடிப்படை மொழித்திறன் பயிற்சிகளை முழுமையாக வழங்குகிறோம். மரக்கன்றுகளை நடுகிறோம்.

வகுப்பறைகளில் 15-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் பணியைக் கண்காணிப்பு செய்கிறோம். மாதந்தோறும் தவறாமல் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை நடத்துகிறோம். அரசுப் பொதுத் தேர்வு நேரத்தில் மாணவர்களைப் பள்ளியில் கூடுதல் நேரம் அமர்த்தி படிக்க வைப்பதோடு, உணவுகளை வழங்குகிறோம்.

பள்ளியில் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அருகில் உள்ள அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பிடித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தொடர்ந்து நாங்கள் அளிக்கும் சிறந்த கல்விதான்.

உதவித் தலைமையாசிரியர் பி.கணபதி, ஆசிரியர்கள் பி.பிரபா, எம்.ஜெயஸ்ரீ, ஏ.தமிழ்ச் செல்வன், எம்.சுகன்யா, எம்.சங்கீதா, சி.ரேவதி, எம்.ஜீவிதா, பி.ஆர்.ரேணுகாதேவி, இ.சுஜி, செல்லப்பன், எம்.ஐஸ்வர்யா மற்றும் தூய்மைப் பணியாளர்கள் எனது பணிகளுக்கு உதவியாக இருக்கின்றனர்'' என்கிறார் அழ.முத்துக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com