அங்கே நாடகமன்றோ நடக்குது...

அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் இயல், இசை, நாடகம் முக்கிய இடத்தை வகித்தது.
அங்கே நாடகமன்றோ நடக்குது...
Published on
Updated on
2 min read

அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் இயல், இசை, நாடகம் முக்கிய இடத்தை வகித்தது. ஆனால், திரைப்படங்கள், தொலைக்காட்சி வருகைக்குப் பின்னர் நாடகத்தின் மீதான ஆர்வம் மக்களுக்குக் குறைந்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையிலும் ஐம்பத்து ஐந்தாவது ஆண்டாக, தஞ்சாவூரில் 'பத்து நாள்களுக்கு நாடக விழா' எனும் போட்டியை ஜூலை 21 முதல் 31 -ஆம் தேதி வரை நடத்தினார் மா.வீ.முத்து.எழுபத்து நான்கு வயதான இவர் இதுவரை 35 சமூக நாடகங்கள், 5 புராண நாடகங்கள், 6 வரலாற்று நாடகங்கள் என மொத்தம் 46 நாடகங்களை எழுதி, இயக்கி 800-க்கும் அதிகமான மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இவருக்கு தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவருடன் பேசியபோது:

'திரைப்படம் என்பது பொய்யானது. முந்நூறு அடி உயரத்திலிருந்து குதிப்பவர் 'டூப்'. குதிக்காமல் இருப்பவர் 'கதாநாயகர்'. பேசுவது கூட வேறு யாராவது இருக்கும். ஆனால், தங்களுடைய பெயரைப் போட்டுக் கொள்வார்கள். நாடகம் அப்படி கிடையாது. எல்லாமே ஒருவரே செய்ய வேண்டும். எனவே, நாடகம்தான் உண்மையான கலை. அதில் நடிப்பது மன மகிழ்ச்சியைத் தரும்.

மின்சாரம் வருவதற்கு முன்பு மக்களுக்கு நாடகம்தான் முதன்மையான பொழுதுபோக்காக இருந்தது. எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சென்று, அதை முழுமையாக, விடிய, விடிய பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

மின்சாரம் வந்தவுடன் திரைப்படம் வந்ததால், நாடகக் கலை அழியத் தொடங்கிவிட்டது. தொலைக்காட்சி வந்தவுடன் அனைத்தையும் வீட்டிலிருந்தே பார்க்கும் நிலை ஏற்பட்டதால், நாடகக் கலை மேலும் நலிவடைந்தது. தற்போது கைப்பேசி பயன்பாடு பரவலான பிறகு, நாடகத்துக்கான வரவேற்பு பெருமளவில் குறைந்துவிட்டது.

திரைப்படங்களில் நடிக்கிறபோது தவறு ஏற்பட்டாலும், மீண்டும், மீண்டும் நடித்து பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், நாடகத்தில் பாடம் படித்து நடிக்க வேண்டும். அதற்கு நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். இதனால், நாடகத்தில் நடிக்க வருவதற்கு விரும்புவதில்லை.

அந்தக் காலத்தில் நாடகத்துக்கு ஒவ்வொரு ஊரிலும் கலைமன்றம் இருந்தது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒரு லட்சம் கலைஞர்கள் இருந்தனர். ஆனால், தற்போது ஏறத்தாழ 1,500 கலைஞர்கள்தான் உள்ளனர். அதில், தஞ்சாவூரில் மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் இருக்கின்றனர்.

முன்பெல்லாம் கோயில் திருவிழாக்களில் ஆண்டுக்கு 15 - 20 நாடகங்கள் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஏறக்குறைய ரூ. 5 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. தற்போது ஆண்டுக்கு 5 நாடகங்கள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், நாடகம் போடுகிற வாய்ப்பு குறைந்துவிட்டது.

சமூக நாடகத்துக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவாகும். வரலாறு, புராண நாடகத்துக்கு ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவு செய்ய நேரிடும். இவ்வளவு செய்தாலும், ஊதியம் குறைவாகத்தான் கிடைக்கும். ஒரு நாடகத்தில் நடிகர்கள் உள்பட 15 முதல் 20 பேர் பணியாற்றுகின்றனர்.

ஒரு நாடகத்தை அரங்கேற்றினால் சராசரியாக ஒரு நபருக்கு 800 ரூபாய்தான் கிடைக்கும். இருந்தாலும், ஆர்வம் காரணமாக பலர் தொடர்ந்து இந்தக் கலையைத் தங்களது சொந்த செலவில் தொண்டுள்ளத்துடன் செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்காக வேறு ஏதாவது சொந்த தொழில் அல்லது பணி செய்து, இந்தக் கலையையும் காப்பாற்றி வருகின்றனர்.

நாடகக் கலையை ஊக்கப்படுவதற்காக, 'தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்றம்' வாயிலாக, ஆண்டுதோறும் பத்து நாள்களுக்கு நாடக விழா என்கிற நாடகப் போட்டி நடத்தி, சிறந்த நாடகங்களுக்குப் பரிசுகளை வழங்குகிறோம். தொடர்ந்து 55 ஆண்டுகளாக செய்து வருகிறோம். இதற்கு சுழற்சி முறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ. 1 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு அரசு அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் முப்பதுக்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி வருகிறோம். அறியாமையைப் போக்கும் விதமாக சமூகச் சீர்திருத்த நாடகங்கள், நிதி நிறுவன மோசடியால் ஏற்படும் பாதிப்புகள், கலப்புத் திருமணத்தால் கிடைக்கும் நன்மைகள், மனித நேயம், ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவற்றை முன் வைத்து நடத்துகிறோம். சில நாடகங்களுக்கு அரங்கமே நிரம்பி வழியும்.

ரசிகர்களிடம் நுழைவுக் கட்டணம் வாங்காமல், மன்ற உறுப்பினர்களிடம் சந்தா வாங்கி நாடகப் போட்டியை நடத்துகிறோம். நன்கொடை அளிக்க முன்வருவோரிடம் பணமாக வாங்கிக் கொள்ளாமல், பொருளாகப் பெற்று, நடிகர்களுக்கு பயனுள்ளதாக செய்து வருகிறோம்.

பல ஆண்டுகளில் நாடக விழா நடத்தும்போது மிகவும் கஷ்டப்படுவேன். மன்றத்திலும் வயோதிகம், மறைவு உள்ளிட்ட காரணங்களால் உறுப்பினர்களும் குறைந்து வருகின்றனர். முன்புபோல உதவி செய்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது குறைந்துவிட்டது. என்றாலும், இக்கலையைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து செய்து வருகிறோம்.

நலிவடைந்து வரும் நாடகக் கலையை மீட்டுருவாக்கம் செய்ய இளம்தலைமுறையினருக்கு நாடகப் பயிற்சியை அளிக்க அரசு முன் வர வேண்டும்'' என்கிறார் முத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com