நடையியல் வனப்பால், 'எழிலுரை'

தலைப்பிலேயே பொருள் அடுக்குகள் உறைந்து கிடக்கின்றன.
நடையியல் வனப்பால், 'எழிலுரை'
Published on
Updated on
4 min read

தலைப்பிலேயே பொருள் அடுக்குகள் உறைந்து கிடக்கின்றன.

'மறை' என்பதும் 'உரை' என்பதும் பெயர்ச் சொல்லாகவும் வரும்; வினைச் சொல்லாகவும் வரும். மறை - பெயர்ச் சொல்லாயின் வேதம்; வினைச் சொல்லாயின் மறைக்கச் சொல்வது. உரை - பெயர்ச் சொல்லாயின் உரையைக் குறிக்கும்; வினைச்சொல்லாயின் சொல்லச் சொல்லும்.

வள்ளுவரை மறைக்க நினைப்பவர்களின் சிந்தனை இருட்டுக்கு உரை விளக்கு ஏற்றுகிறார் கவிஞர். வள்ளுவரையும் திருக்குறளையும் ஒன்றாகப் பார்க்கச் சொல்கிறார். அதனால்தான் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று தலைப்பு வைத்திருக்கிறார் போலும்.

'உரையும் பாட்டும் உடையோர் சிலரே' என்று புலவர் உறையூர் முதுகண்ணன்சாத்தனார் சோழ அரசன் நலங்கிள்ளியைப் பாராட்டிய பாடல் வரி புறநானூற்றில் (27) இடம்பெறுகிறது. அப்படிப் புகழோடு மட்டுமின்றி, உரைகளும் முதுமொழி வெண்பா போன்று பாட்டும் உடைய இலக்கியம் திருக்குறள். அதன் தொடர்ச்சியாக, அறத்துப்பால், பொருட்பாலுக்கு உரையும் இன்பத்துப்பாலுக்குக் கவிநடையில் உரையும் தந்திருக்கிறார் கவிஞர்.

வள்ளுவர் மறை வைரமுத்து உரை யானது மூன்று வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

திருக்குறளைச் சமகாலப்படுத்துதல்

தமிழில் முதல்நூல், வழிநூல், சார்பு நூல் என்று நூல்களைக் கால வரிசையிலும் கருத்துநிலைகளிலும் வகைப்படுத்துவர். கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு இணைப்பதும் வரும் காலத்துக்கு வழிகாட்டுவதும் மொழியின் பணிகளாக இருக்கின்றன. அப்படித் தேவைப்படும் கடந்த கால மரபினை, விழுமியங்களைக் கலை, இலக்கியங்களின் வழியாக மொழி, காலம்காலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அதற்குக் கடந்தகாலக் கலை, இலக்கியங்கள் நிகழ்கால மொழிநடையில் சமகாலப் பார்வையில் கலக்க வேண்டியுள்ளன.

அதற்காகக் காலம்தோறும் கலை, இலக்கியங்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியுள்ளன. அதற்காக, அவ்வக்கால மொழிநடையில் அறிஞர்கள் உரை எழுதி அவற்றைச் சமகாலப்படுத்தி இருக்கிறார்கள். பொருள்கொள்ளும் தொடர்பும் தொடர்ச்சியும் அந்த உரைகளில் கிடைக்கும்.

கவிஞர் வைரமுத்து, கடவுள் வாழ்த்தை , அறிவு வணக்கமாக்குகிறார். திருக்குறளைக் கலகக் குரலாகப் பார்க்கிறார்- சொல்லம்பாகப் பார்க்கிறார். மாற்றத்தை விரும்பாத அமைப்பு - மாறத் தெரியாத மனிதன் என்ற இரண்டு பொருள்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு அந்தப் பார்வையில் திருக்குறளைச் சமகாலப்படுத்துகிறார்.

இலக்கணம் வழி நின்று இலக்கியத்திற்குப் பொருள் அறிதல்:

இலக்கியம் கண்டதற்குப் பின் இலக்கணம் என்பது மரபு எனினும் இலக்கணம் வழி நின்று இலக்கியத்துக்குப் பொருள் காணும் மரபும் இருந்து வருகிறது. அவ்வகையில் திருக்குறள் இலக்கியத்துக்கும் கவிஞர் உரை சொல்லியிருக்கிறார்.

'ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

( குறள் 560).'

'ஆபயன்' என்பதற்கு 'அரசன் உயிர்களை காவான் ஆயின் அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்' என்றார் பரிமேலழகர். கவிஞர் வைரமுத்து, 'பசுவின் பயன்' என்று பொருள் கொள்வதாயின் அது 'ஆப்பயன்' என்று ஆண்டு வந்திருக்க வேண்டும். 'காவலன் காவான்' எனில் 'அரசனால் ஆகும் பயன்கள் குன்றிவிடும்' என்று பொருள்கொள்வதே பொருந்தும். என்று இலக்கணத்தின் வழிநின்று இலக்கியத்தின் சிக்கல் அறுக்க முயற்சி செய்கிறார்.

இப்படி, இதுவரை வந்திருக்கும் உரைகளோடு முரண்படவும் செய்கிறார். முரண்படுகிற இடங்களில், 'முன்னோரை மறுப்பதில் 'நுண்மான் நுழைபுலம் மிக்க உரையாசிரியர்களை குறைபடச் சொல்லும் பேரறிவு எமக்கு இல்லை. ஆனாலும் அறிவியல் தளத்தில் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ள வேண்டும்' என்ற வேட்கையின் விளைவே ஆகும் இது. என்று கண்ணியம் காட்டுகிறார்.

பகுத்தறிவு வழி பொருள் காணுதல்

'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்...' எனும் குறளில்(41) இயல்புடைய மூவருக்குப் பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்பது பழைய உரை.

கவிஞர் வைரமுத்துவின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பாக, 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' திருக்குறளுக்குக் கிடைத்துள்ளது.

திருக்குறளுக்கு மற்றுமோர் உரையால் அழகு செய்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கவின்மிகு நடை கொஞ்சக் கொஞ்ச வள்ளுவர் மறைக்கு வைரமுத்து உரை அடிவைத்து நடக்கிறது.

'அந்தணர் என்போர் அறவோர்' என்ற குறள் உரையில், 'அந்தணர் என்பது இனப் பெயர் அன்று; குணப்பெயர்' என நயம்படக் கூறுகிறார். 'அறத்தான் வருவதே இன்பம்' என்ற புகழ் பெற்ற குறளுக்கு, 'பொன்னோ பொருளோ பெண்ணோ பிறவோ அறவழியில் வந்தால்தான் இன்பமாகும்; புறவழியில் வருவதெல்லாம் இன்பம் ஆகாது; புகழிலும் சேராது'' என உரைவகுப்பார். பொருளில் புதுமை இல்லையெனினும் எதுகையும் மோனையும் காதலன் காதலி போல் கைகோத்துக் கொள்கின்றன.

விருந்தோம்பல் அதிகாரத்தில், 'இறைக்கச் சுரக்கும் ஊற்றாய்க் கொடுக்கச் சுரக்கும்' பண்பை இனிய தமிழால் எடுத்துரைக்கிறார். அதே அதிகாரத்தில், 'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ' என்ற குறள் குறித்துக் கூறும்போது, 'பண்பைப் பாராட்டிப் பேசும் கவிதை மொழி இதுவென்று கருதுக' என்று உரைப்பது ஓர் உரை நுட்பம் எனலாம்.

'களவு என்னும் காரறிவு' என்னும் வள்ளுவர் தொடரை, 'திருட்டு என்னும் இருட்டறிவு' என எழில் ததும்ப விளக்குகிறார். வெகுளாமை அதிகாரத்தில், 'மறத்தல் வெகுளியை யார்மாட்டும்' என்ற வரிக்கு விளக்கம் தருகையில், 'சிறியார்- பெரியார், வலியார்- மெலியார், நண்பர்- பகைவர், ஆண்-பெண் என்று யாரிடத்திலும்' எனப் பொருளுரைப்பது தெளிவுக்கு அடையாளமாக விளங்குகிறது.

இவ்வாறு சொல்லில், நடையில் சுவை தோன்ற எழுதியிருப்பது வைரமுத்துவின் கைவண்ணமாகக் காண முடிகிறது. எனினும் பெரிதும் மரபுரைகளின் வழியேதான் வைரமுத்துவின் உரைப்பயணம் அமைந்துள்ளது.

ஒரு சில இடங்களில் மாறுபட்ட உரை சொல்ல முனைந்துள்ளார். 'ஊழ்' என்பதற்கு 'காலச் சூழல்' எனப் பொருள் கூறுகிறார். காமத்துப்பாலை 'இன்பத்துப் பால்' என அழைக்கிறார். ஏறத்தாழ 29 இடங்களில் 'காமம்' என்ற சொல்லைக் காதற்பொருளில் வள்ளுவர் கூறியிருக்கும்போது இந்தப் பெயர் மாற்றம் பொருந்துவதாகத் தெரியவில்லை.

இதுபோன்றே பல உரையாசிரியர்களைத் தடுமாற வைக்கும் 'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் வைரமுத்துவும் இடர்ப்படுகிறார். பகவன் 'சூரியன்' என்றும், 'புத்தன்' என்றும், 'அருகன்' என்றும் பண்டைய உரைகாரர்கள் தத்தம் கருத்தைப் புகுத்தி உரை தந்திருக்கிறார்கள்.

நம் கவிஞரோ அதிகாரத் தலைப்பை, 'அறிவு வணக்கம்' எனக் குறிப்பிடுகிறார். பத்துக் குறட்பாக்களுக்கும் இந்தத் தலைப்புக்கும் இசைவிருப்பதாய்க் கூற முடியாது.

முதல் குறளுக்கே, 'ஆதிபகவன் என்று நம்பப்படும் மூல ஆற்றல்' என்று பொருள் கூறும்போதே அறிவு வணக்கம் பொருந்தாமல் போகிறது. பெரியவர்கள், சான்றோர்கள் என்றெல்லாம் பிற குறட்பாக்களுக்குப் பொருள் காணும்போது மேலும் குழப்பம் மேலிடுகிறது.

திருவள்ளுவருக்கு இறைநம்பிக்கை இருந்தால், அதை ஏற்க மறுப்பது- புதிய உரையாசிரியர்களுக்குச் சிந்தனைத் தொல்லையாவது நியாயமில்லை. இவ்வாறு சில இடங்களில் புத்துரை காணக் கவிஞர் முயல்கிறாரெனினும் பெரிதும் பழைய உரைகளின் பாதையிலேயே பயணிக்கிறார்.

ஆனால், தமிழ் துள்ளி விளையாடும் அழகில் நாம் நம்மை மறக்கிறோம். அதனால், 'வள்ளுவர் மறை-வைரமுத்து உரை'யை நடையியல் வனப்பால், 'எழிலுரை' என அழைக்கலாம்.

திருக்குறளுக்கு எத்தனை உரைகள் தமிழில் வந்துள்ளன என்று கணக்கிடுவது எளிதல்ல. ஒவ்வொரு உரைநூலுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இனிய தமிழ் நடையில், எளிமையாக, ஆங்காங்கே கவித்துவம் தெரியுமாறு அமைந்துள்ளமை, இந்த நூலுக்கான சிறப்பு. குறள், சொற்கள் பிரிக்கப்பட்டு இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு உதாரணமாக, 'ஈத்துவக்கும் இன்பம்' என்று தொடங்கும் குறளில், சொல் பதம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 'வைத்திழக்கும்' என்னும் சொல், 'வைத்து இழக்கும்' என்று பிரிக்கப்பட்டுள்ளதால், அவ்வளவாகத் தமிழில் புலமை இல்லாதவர்களும் உடனே புரிந்துகொள்ள முடியும்.

குறள் தொடர்பான எல்லா நூல்களிலும் இந்தச் சிறப்பினைக் காண இயலாது. இப்படி பல குறட்பாக்கள், சொற்கள் பிரிக்கப்பட்டுப் பொருள் எளிதில் விளங்குமாறு அமைந்துள்ளன.

'நீர் இன்று அமையாது உலகு' என்று தொடங்கும் குறளுக்கு, 'நீரின்றி உலகம் இயங்காது' என்றே பொதுவாகப் பொருள் கண்டனர். அதுதான் பொருள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இந்த நூலில் உரையாசிரியர் இதனை விரித்துப் பொருள் காண்கிறார். 'உடல்-உயிர்-உணவு-உழவு-உற்பத்தி-ஆட்சி-அரசு-மக்கள் முதலிய எல்லாமே நீரையே சார்ந்ததனால், நீரென்ற பொருளின்றி உலகவாழ்வு இயங்காது' என்று பொருள் விரிகின்றபோது, அழகும் ஆழமும் மேலும் கூடுகிறது.

'அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த புகழும் இல' என்னும் குறளுக்கு விளக்கம், கவித்துவமாகவே உள்ளது. 'பொன்னோ பொருளோ, பெண்ணோ பிறவோ, அறவழியில் வந்தால்தான் இன்பமாகும். புறவழியில் வருவதெல்லாம் இன்பம் ஆகாது; புகழிலும் சேராது' என்னும் விளக்கத்தைப் படிக்கும்போதே, ஓர் எளிய கவிதையைப் படிக்கும் இன்பம் கிடைக்கிறது.

'ஒரு மயிர் கீழே விழுந்துவிட்டாலும், உடனே கவரிமான் இறந்துவிடும்' என்பதே அறியப்பட்ட பொருளாக இருக்கிறது. ஒரு மயிர் என்பது குறளில் இல்லை; கவரிமான் என்பதும் குறளில் இல்லை. 'கவரிமா' என்றுதான் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

மிகக் குளிர் நிறைந்த பனி மலைகளிலும் பனிக் காடுகளிலும் வாழும் கவரிமா என்னும் உயிரினத்தின் உடல் முழுதும் அடர்த்தியான மயிர் வளரும். அந்த அடர்த்தியான மயிர், குளிர்ப் பகுதிகளில் வாழும் உடல் வெம்மையை அந்த உயிரினத்திற்குத் தருகிறது. நாம் குளிர் காலத்தில் பயன்படுத்தும் கம்பளிப் போர்வை, மற்றும் கம்பளி உடைகள், கவரிமாவின் உடலில் இருந்து எடுக்கப்படும் மயிரில் தயாரிக்கப்படுபவைதான்.

உடலில் இருந்து முழுவதுமாக மயிர் நீக்கப்பட்டுவிட்டால், குளிர் தாங்காமல் கவரிமா இறந்துவிடும். உடைகளுக்காக மயிர் நீக்கப்பட்ட பின்னர், புதியதாக மயிர் முழுவதுமாக வளரும் வரையில், வெப்பம் இருக்கும் அறைகளில் அவற்றை வைத்திருப்பார்கள். இந்த விளக்கத்தைச் சுருக்கமாக முன்னுரை கொண்டிருப்பது, நூலுக்கு மெருகு சேர்க்கிறது.

தமிழரின் அடையாளம் திருவள்ளுவர். அவர் காலடியில் மலர்களாகப் பல நூல்கள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த மலர்களில் ஒன்றாக, இந்த நூலும் சிறப்பு சேர்க்கின்றது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com