ஆக்ஷன் படம் என்றாலும், துடித்து அலற வைக்கிற ஆக்ஷன் இல்லை. எல்லாமே கதையோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். போலீஸ் அதிகாரியான சோனியா அகர்வாலுக்கு ஒரு வழக்கை விசாரிக்கிற பொறுப்புத் தரப்படுகிறது.
அது சுற்றிச் சுற்றி அவர் குடும்பத்தையே பாதிக்கிற நிலைக்கு வருகிறது. ஒரு மெலிதான லைன்தான் கதை. 'அடடா, நல்லா வரும் போலிருக்கே! பெரிசா பண்ணிடுங்க' என்று பச்சைக் கொடி காட்டிய தயாரிப்பு நிறுவனமான அஜய் ஃபிலிம் பேக்டரிக்கு முதல் நன்றி.
அப்படி உருவானதுதான் இந்த 'கிப்ட்'. எப்படிப் படமாக்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே திரையிலும் வந்திருக்கு. - ஆர்வத்தோடு பேசுகிறார் இயக்குநர் பா. பாண்டியன். 'தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும்', 'கால் டாக்ஸி' படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார்.
கிப்ட்.... எதன் குறியீடாக இருக்கும் ?
பெயர், கதையோடு தொடர்புடையது. இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். கதைக்கான புள்ளி ஆங்காங்கே செல்லும் சிறு சிறு பயணங்கள்தான். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டுப் பேரை புதிதாகச் சந்தித்துப் பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை.
ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ற மாதிரி இயங்குவதே சிரமமானது.
இது சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை அல்ல. ஒரு நேர்மையான அதிகாரியின் கதை. இதற்காக நிறைய தரவுகள் தேவைப்பட்டன. அதையெல்லாம் ஆராய்ந்து கதை செய்திருக்கிறேன். நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. இது த்ரில்லர் கதை. அதே சமயம் மனித மனங்களை எடை போடும் கதை.
கதையை சொல்லுங்களேன்....
கேரள காவல் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய ராமச்சந்திர நாயர் என்பவர் எழுதிய 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்ற புத்தகம். அப்படி இருக்கும்... புரட்சியாளன் நர்கீஸை, மேலதிகாரிகளின் குரூரமான வற்புறுத்தலால் தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, போலீஸ் என்பவன் பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்கிறான்.
அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக ஆய்வு செய்து எழுதப்பட்ட பதிவு அது. உண்மையில் சாலையோரக் கடைகளில் நிற்கும் காவலர்களை யார் உருவாக்குகிறார்கள்? வெறுமென காக்கியோடு அண்ணா மேம்பாலத்தில் கால் கடுக்க நின்றிருக்கும் பெண் காவலர் ஒருத்தி, போலீஸ் வேலை கிடைத்த தருணத்தில் என்னென்ன நினைத்திருப்பாள்... போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களையும் பார்த்திருக்கலாம்.
ஆனால், இங்கே நிறைய பேருடைய மனிதத்தை அதிகாரமும், அரசியலும் தின்று விடுகின்றன. அரசியலும், சாதியும், பணமும் காவல் துறையை இயக்கிக் கொண்டு இருக்கிற வரை உன்னதமான பாதுகாப்பை நம்மால் உணரவே முடியாது. மேல் அதிகாரிகளால் முதலில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதிகாரத்தாலும், கேவலமான அரசியல்வாதிகளாலும் காக்கிகளின் மனிதம் இங்கே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்படி பல விஷயங்கள் மீது பொது விவாதங்களை எழுப்புவதாக இருக்கும் இந்தக் கதை.
போலீஸை விமர்சிக்கிற மாதிரி இருக்குமா ?
சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களைக் கேவலமாகத் திட்டும் நமக்கு, நல்ல காவல் அதிகாரிகளை தெரிவதே இல்லை. ஒரு குற்றம்தான் இந்தக் கதையின் பிரதானம்.
குற்றத்தின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100-க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. அதை ரிபீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும்.
நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். நீங்கள் போலீஸில் நல்லவரையும், கெட்டவரையும் பார்த்திருக்கலாம். இது அப்படி இரண்டு பக்கமும் இருக்கிறது. இந்தியாவை உலுக்கிய ஒரு பெண் கொலையை மையமாக வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறேன்.
சோனியா அகர்வால் இதில் போலீஸ்... என்ன சிறப்பு ?
ஆமாம். அவருக்கென தனி ரசிகர் வட்டம் இங்கே உண்டு. அதை விட அவரிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. கதையைக் கேட்டதும் சம்மதம் சொல்லி விட்டார். கதை கூடவே பயணிக்கிற மாதிரி ஓர் இடம் அவருக்கு. காதல், அன்பு, நேசம், பாசம் எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு விதமாக கதை இருக்கும்.
படத்தில் அவருக்கு அருமையான ரோல். முதன் முறையாக போலீஸ் ரோல். நடித்துக் கொண்டு இருக்கும் போதே அவர் அதை உணர்ந்ததுதான் விசேஷம். எனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது. அவருக்கு எல்லா மொழிகளும் தெரியும். அது எனக்கு பணியின் அருமையை புரிய வைத்தது. பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி, பி. வி.
சந்திரமௌலி, சசி நயா, நிமல், ரேகா சுரேஷ், கிரேன் மனோகர் இப்படி கதை நெடுக நல்ல கலைஞர்கள் துணைக்கு வந்தார்கள். இணைத் தயாரிப்புக்கு வடிவேல், கமல கண்ணன் இருவரும் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.