பசுமை வளாகம்...

புதுச்சேரி காலாப்பட்டில் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் பெயரில் அமைந்துள்ள நகரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமானது சுமார் 780 ஏக்கரில் அமைந்துள்ளது.
பசுமை வளாகம்...
Published on
Updated on
2 min read

தமிழானவன்

புதுச்சேரி காலாப்பட்டில் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் பெயரில் அமைந்துள்ள நகரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமானது சுமார் 780 ஏக்கரில் அமைந்துள்ளது.

நிலப் பரப்பு மிகவும் குறைவாக இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இப்படியொரு பல்கலைக்கழக வளாகம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. கிழக்குக் கடற்கரையோரம் கம்பீரமான கட்டடங்களும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிழலும் அந்த வழியாகப் பயணம் செய்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அம்சங்கள்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 1985 -ஆம் ஆண்டு சிறப்பு சட்டத்தின் வாயிலாக இதை உருவாக்கியது. இதன் முதல் துணைவேந்தர் முனைவர் கே.வெங்கடசுப்பிரமணியன் கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றினார்.

அவருக்குப் பிறகு வந்த அனைத்துத் துணைவேந்தர்களின் பங்களிப்பும், முயற்சியுமே இந்த வளாகமானது பசுமை வளாகத்தின் முன்னோடியாக மாறியிருக்கிறது. துணை வேந்தர் பி. பிரகாஷ் பாபு தலைமையில் இந்தப் பல்கலைக் கழகம் 'ஏ+' தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நீடித்த, பருவநிலை மாற்ற ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளரும், பசுமை வளாகத்தின் சிறப்பு அதிகாரியுமான பேராசிரியர் மதிமாறன் நடராசனுடன் ஒரு சந்திப்பு:

பசுமை வளாகமாக மாற்றியது எப்படி?

பல்கலைக்கழக வளாகத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 780 ஏக்கர். அதில் சுமார் 80 சதவீதம் பசுமை படர்ந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டு கால தொடர் முயற்சியால் சாத்தியமாயிற்று. இதனால்தான் சிறந்த மத்திய பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று என்று தேசிய தரச்சான்றிதழ் அளிக்கும் நாக் கமிட்டி கூறியிருக்கிறது.

பசுமை வளாகத்தில் உள்ள அதிக மரங்கள் எவை ? உயிரினங்கள் எதாவது வாழுகிறதா?

நிழல் தரும் பென்சில் மரங்கள் அதிகம். ஆக்சிஜன் அதிகமாகக் கொடுக்கக்கூடிய ஆலமரம், புங்கை, வேப்பமரம் உள்ளிட்ட மரங்களும் இருக்கின்றன. தற்போது ஐ.நா. சபையின் உணவுக்காடுகள் என்னும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் பல்கலைக்கழகத்தின் கொள்கை அடிப்படையிலும் பலன் தரும் பழ மரங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்.

கொய்யா, மாமரம் உள்ளிட்ட பழமரங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. தற்போது மாதுளை, கொய்யா, நாவல், எலுமிச்சை, இலந்தை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

இயற்கையாகவே உயிரினங்கள் இங்கு அதிகம் வாழுகின்றன. பாம்புகள் அதிகம். காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, காட்டுப் பூனை, அணில், பல்லி, உடும்பு, பறவைகளில் மயில், பச்சைக்கிளி, மைனா, சிட்டுக்குருவிகளை இங்கு பார்க்க முடியும். உணவு இருக்கும் இடத்தில்தான் உயிரினங்களின் நடமாட்டம் இருக்கும்.

எந்த உயிரினத்துக்கும் தொந்தரவு தர மாட்டோம். மாணவிகள் விடுதி உள்ளிட்ட இடங்களில் புகுந்துவிடும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்களைப் பிடித்து பசுமை வளாகத்தில் விட்டு விடுவோம். பசுமை வளாகமாக மாறுவதற்கு இந்த உயிரினங்களும் தங்கள் பங்களிப்பாக விதைகளைப் பரவச் செய்துள்ளன.

பசுமை வளாகத்துக்கும் படிப்புக்கும் தொடர்பு எதாவது ?

ஒரு நிலப்பரப்பு பசுமையாக மாறுவதே மனிதர்களுக்குப் படிப்புதான். பல்கலைக்கழகத்தில் சூழலியல் படிப்பு இருப்பதால், இந்த வளாகமே ஒரு சோதனைக் கூடமாக மாறியிருக்கிறது.

வெயிலை எதிர்கொள்ள இந்தப் பசுமை வளாகம் எப்படி உதவியாக இருக்கிறது?

இயற்கையோடு ஒன்றிய வளாகமாக இருக்கிறது. 'குருகுலக் கல்வி' இருந்தபோது, இயற்கைச் சூழல்தான் இருந்தது. நகரப் பகுதியில் காங்கிரீட் காடு போன்று கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. பெரிய வித்தியாசமான பகுதியில் உயர்கல்வி நிறுவனம்தான் எங்கள் பல்கலைக் கழகம். இங்குள்ள வகுப்பறைகளில் ஏ.சி. பயன்பாடு குறைவாக இருப்பதற்கும் பசுமை வளாகமே காரணம்.

ஆக்சிஜன் அளவு அதிகமாகக் கிடைப்பதால் அதிக ஆற்றலுடன் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சி பெறுகின்றனர். இவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. மனிதர்களுக்கு நல்ல மனநிலை நிலவும். சிறப்பான கல்விச் சூழல் கிடைக்கிறது.

பசுமை படர்ந்துள்ளதால் வளாகம் முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். அதிகமாக புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் வகையில் கரியமில வாயுவை இங்குள்ள அடர்த்தியான மரங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.

இது எவ்வாறு மாணவர்களை ஈர்க்கிறது ?

இங்கு படித்த மாணவர்கள் பல்கலை. தூதுவர்களாக மாறிவிடுகின்றனர். அவர்கள் இந்தப் பசுமை வளாகத்தைப் பற்றி புதியதாகச் சேர விரும்பும் மாணவர்களுக்குச் சொல்கின்றனர். அவர்கள்தான் மாணவர் சேர்க்கைக்கு முக்கியக் காரணமாகவும் இருக்கின்றனர். இதைத் தவிர பசுமை வளாகத்துக்கு மாணவர்களின் பங்களிப்பும் அதிகமாக இருக்கிறது.

அவர்கள் புதியதாக மரக்கன்றுகள் நடுகின்றனர். தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர். அவர்கள் ஓய்வு எடுக்கவும் நிழல்களைப் பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் உறுதுணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்துக்கும் பல்கலைக் கழக பசுமை வளாகம் பங்களிப்பு செய்யத் தொடங்கியுள்ளது.

பசுமை வளாகத்தின் எதிர்காலத் திட்டம் என்ன ?

இந்த வளாகத்தைத் தன்னிறைவு அடைந்த, சுற்றுச்சூழல் வளம் மிகுந்த வகையிலான பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சியில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளோம். பருவநிலை மாற்றம், உயிரிகள் இழப்பு, கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஆகிய 3 பெரும் பிரச்னைகளை அடையாளம் கண்டுள்ளோம். இதையெல்லாம் முறியடிக்கும் வகையில் எந்தக் காலத்திலும் வளரும் மரங்கள், தாவரங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டறிந்து பல்கலை.

வளாகத்தில் வளர்ப்பது, பசுமை நிறைந்த சூழலில் உயிரிகளின் பெருக்கத்தை அதிகரிப்பது, கழிவறை உள்ளிட்ட மனிதப் பயன்பாடுகளுக்குப் பிறகு வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரித்து தாவரங்களின் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களைத் தீட்டியுள்ளோம். புதியதாகக் கட்டடங்கள், மாணவிகள் விடுதிகள் போன்றவற்றிலும் அழகான செடிகளும், கொடிகளும் அலங்காரமாக அமைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com