வாழ்வியலை சித்திரிக்கும் கல்வெட்டுகள்

வரலாற்றுச் சிறப்புடைய 'பேளூர்', அதன் சுற்றுப்புறக் கிராமங்களான செக்கடிப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை, புழுதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் மன்னர்களின் வாழ்வியலை சித்திரிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
வாழ்வியலை சித்திரிக்கும் கல்வெட்டுகள்
Published on
Updated on
3 min read

பெ.பெரியார்மன்னன்

வரலாற்றுச் சிறப்புடைய 'பேளூர்', அதன் சுற்றுப்புறக் கிராமங்களான செக்கடிப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை, புழுதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் மன்னர்களின் வாழ்வியலை சித்திரிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகே வசிஷ்ட நதிக் கரையில்தான் இந்த ஊர்கள் அமைந்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்டநதியானது ' நிவா' நதி என்று அழைக்கப்பட்டுள்ளது. பேளூரை 'திருவேள்வியூர்' 'வேள்வியூர்' என்ற பெயர்களில் பல சிற்றரசர்கள், சோழர்கள், நாயக்கர்களின் பேரரசு கீழ் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்

களின் அறப்பணிகள், கொடைகள், மேற்கொண்ட போர்கள், சூடிய வெற்றிகள், நீர்மேலாண்மை போன்றவற்றை விளக்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

அங்காளம்மன் கோயிலில் அடிப்பகுதி உடைந்த நிலையிலுள்ள ஒரு கல்வெட்டில், எட்டு வரிகள் உள்ளன. கடைசி மூன்று வரிகள் சிதைந்துள்ளன. 'ஸ்வஸ்திஸ்ரீ மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்..' என கல்வெட்டு தொடங்குகிறது.

இந்த அடைமொழி முதலாம் பராந்தகச் சோழனுக்கு உரியது. அவரது 41-ஆவது ஆட்சி ஆண்டில், அதாவது 948-இல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் மூலம் பத்தாம் நூற்றாண்டில் பேளூர் பகுதியானது சோழர்ளின் ஆட்சியில் இருந்துள்ளதை அறியலாம்.

 நரசிங்கபுரத்தில் உள்ள கல்வெட்டில் கோயிலுக்கு விளக்கு எரிக்கத் தானம் கொடுத்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் பராந்தகச் சோழனுக்கு பிறகு ஆட்சி செய்த இரண்டாம் ஆதித்யனின் 959- ஆம் ஆண்டு கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். வீரபாண்டியனை ஆதித்ய கரிகாலன் தோற்கடித்ததும் தலையை வெட்டி எடுத்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருநூற்றுமலையிலுள்ள சிறுமலை கிராம மக்கள் வழிபாட்டில் வைத்து பாதுகாத்து வரும் நடுகல் கல்வெட்டில், 12- ஆம் நூற்றாண்டில் இப்பகுதி சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கன் ஆளுகைக்கு கீழ் இருந்தது தெரியவருகிறது.

அங்காளம்மன் கோயில் முன்புறமுள்ள தனியார் நிலத்தில், ஆறடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட கல்வெட்டு உள்ளன. இந்தக் கல்வெட்டின் நான்கு புறங்களிலும் ஏராளமான வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. இதன் 1, 2-ஆம் பக்கத்தில் தலா 29 வரிகளும், 3-ஆம் பக்கத்தில் 41 வரிகளும், 4 -ஆம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

'மைசூரு நாட்டு மன்னர் கந்தீரவனுக்கு மதுரை திருமலை நாயக்கர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், மைசூரு மன்னர் போர் தொடுத்திருக்கிறார். கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ்நாட்டில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் சென்றுள்ளனர். இதற்கு திருமலை நாயக்கரின் போர் வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இந்தப் போர் 1656-ஆம் ஆண்டில் நடந்திருக்கலாம்' என வரலாற்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கரியராமர் கோயிலில் ஏழு ஆண்டுக்கு முன் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் ஆய்வு மேற்கொண்டதில், 1,200 ஆண்டுகள் பழமையான கல் செக்கில், கல்வெட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் உள்விட்ட பகுதியில் 2 வரிகளில், 'ஸ்ரீ விளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனார்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று' என 12 வார்த்தைகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது.

பழங்காலத்தில் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகளை பொது உரலில் ஆட்டி எண்ணெய்யை எடுத்துக்கொண்டு, புண்ணாக்கை கூலியாக தரும் வழக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. விளக்கமாறன் என்பவரின் மகன் மூக்கன் இறந்து விட்டதால் அவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும். இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தரும் படி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

செக்கடிப்பட்டி கிராமத்தில் தனியார் விளை நிலத்தில் விஜயநகர பேரரசு காலத்திய கல்வெட்டானது 17- ஆம் நூற்றாண்டில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. சிற்றரசர் சின்னமநாயக்கரின் வாரிசுகள் ஆறு பேரில் ஒருவரான லட்சுமண நாயக்கர் பேளூரில் கோட்டை அமைத்து வாழ்ந்ததும் வசிஷ்ட நதியின் கரையோரங்களில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டியதையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் தேருக்கு சங்கிலி செய்து அளித்த, திருவனந்தல் பண்டாரம் என்பவருக்கு இலக்குமண சமுத்திரத்தில் 24 அடி கோலால் நூறு குழி நிலம் கொடையாக அளித்ததையும், இலட்சுமண நாயக்கர், தனது தந்தை சின்னம்மநாயக்கன் பெயரில் சின்னம்ம நாயக்கர் மடம் ஒன்றை அமைத்ததையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் ஆறு வரியில் 85 வட்டெழுத்துகளுடன் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர். வட்டெழுத்துகளின் கீழே இரண்டி உயரத்தில் ஒரு வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும், தலைப்பகுதியில் கொண்டையும், காதணியாக பத்தரக் குண்டலமும், இடுப்பில் குறுவாளும் உள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டில் பேளூர், வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளை இராமாடிகள் என்பவர் ஆட்சி புரிந்து வந்துள்ளார். அவரது மகன் பெருமான் என்பவர் பூலம்பாடி என்ற ஊரின் மீது படையெடுத்துச் சென்றதும், போரில் பிள்ளைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த பாராவன்னார் மகன் பொன்னகுன்றி என்ற வீரர் வீரமரணம் அடைந்ததும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com