தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அறிந்த இவர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பெங்களூரில் உள்ள பூர்ண பிரஜ்னா சம்சோதன் மந்திரம் என்ற சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத் தலைவராகவும் இருந்தவர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினத்தை சம்ஸ்
கிருதத்தில் மொழிபெயர்த்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைகளை தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்து பாராட்டை பெற்றவர்.
சிலப்பதிகாரம், மணிமேகலையையும் கல்கி, மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்களது சம்ஸ்கிருத மொழிப் பயணம் தொடங்கியது எப்படி?
நான் சிறுவயதிலிருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தேன். என் பெற்றோரும் எனக்கு பல சுலோகங்களையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தனர்.
தமிழ்தான் தாய்மொழி என்றாலும், சம்ஸ்கிருதத்தை என் இரண்டாவது தாய் மொழி என்று சொல்லலாம். கதைகள் படிக்கும்போது, அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால், உடனே அந்தக் கதையை நான் சம்ஸ்கிருதத்தில் எழுதிப் பார்ப்பேன். அப்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும்.
அலாதியான திருப்தி கிடைக்கும். பொதுவாக, சம்ஸ்கிருதம் ஒரு கடினமான மொழி என்று ஒரு கருத்து உண்டு. சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவைகளை, வாசித்துக் காட்டும்போது, அதைக் கேட்பவர்கள் மிகவும் பாராட்டுவார்கள். அப்போது சம்ஸ்கிருதம் என்ற விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்னிடம் இருப்பது போல உணர்வேன். பெருமையும், மகிழ்ச்சியும் அடைவேன்.
பன்மொழி புலமை பெற்ற என் பாட்டி, கல்வியின் அவசியத்தை, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருமணத்துக்குப் பிறகு என் கணவரும் ஊக்குவித்தார்.
சிறுவயதிலேயே எனக்கு 'ராமாயண ஹரிகதா' நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் சம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழிகளுக்கு இடையில் மொழிபெயர்ப்புப் பணியில் என்னை ஈடுபடுத்தியது.
சம்ஸ்கிருதம் ஒரு 'புழக்கத்தில் இல்லாத மொழி' என்ற விமர்சனம் குறித்து?
காளிதாசரின் படைப்புகளுக்கு இணையான தரத்தில் அவர் காலத்துக்குப் பின்னர் இலக்கியப் படைப்புகள் வரவில்லை என்பது ஓரளவு உண்மைதான். அதற்காக, சம்ஸ்கிருதத்தை 'இறந்த மொழி என்ற சொல்வது முற்றிலும் தவறு.
புதிய படைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், பழைய படைப்புகளைப் பாதுகாப்பதே நல்லது. இன்றைய காலத்திலும் அபிராஜ ராஜேந்திர மிஸ்ரா, ஹம்ஸ்ராஜ் அகர்வால், ஸ்ருதிகாந்த் சர்மா, ராதா வல்லப் திரிபாதி, ராம் கரண் சர்மா போன்றவர்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தில் பங்களித்து வருகிறார்கள்.
நான் மொழி பெயர்த்து, 'லகு கதை மஞ்சரி' என்ற தலைப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகத்தில் புராண காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை வந்த அறுபதுக்கும் மேற்பட்ட சம்ஸ்கிருதச் சிறுகதைகள் உள்ளன.
இவை 'தாலி பிரச்னை', 'விதவை நிலை', 'பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்' போன்ற நவீனகாலப் பிரச்னைகளையும் கையாளுகின்றன. இதுவே சம்ஸ்கிருதம் இன்றும் காலத்துக்கு ஏற்ற வகையில் எழுதப்பட முடியும் என்பதை காட்டுகிறது.
'பொன்னியின் செல்வன்' நாவலை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க உங்களைத் தூண்டியது எது?
அபூர்வமான எழுத்தாளரான கல்கி, பல நீளமான நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கலை விமர்சனங்களையும் எழுதியுள்ளார். அவை அனைத்தும் அருமையானவை. அவற்றை வாசிப்பதே ஓர் இனிமையான அனுபவம்.
'பொன்னியின் செல்வன்' என்பது உணர்ச்சிகளும் சூழல்களும் நிறைந்த ஓர் அற்புதக் காவியம். இதில் சோழர்களின் வரலாறும், அந்த காலத்து மக்களின் வாழ்க்கையும், பல்வேறு தனித்துவமான குணங்களும் வரும். 'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகங்கள் கொண்ட நாவல். ஆயினும் கல்கி ஆறு மாத கால நிகழ்வுகளை மட்டுமே கையாண்டிருக்கிறார்.
ஆனாலும், அதில் எண்ணற்ற சம்பவங்களும், சதிகளும், சவால்களும், வீரபராக்கிரமங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கதையின் பாத்திரங்கள் தர்மம், சத்தியம், நீதியைப் பின்பற்றி வாழ்கிறார்கள். மக்கள் வீரமிகு, ஒழுக்கம் மிக்க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான படைப்பை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
'பொன்னியின் செல்வன்' மொழிபெயர்க்கும்போது எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் என்ன? சந்தோஷமான தருணம் எது?
கல்கி போன்ற ஒரு மேதையின் படைப்பை மொழிபெயர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய எழுத்துகளில் இடம்பெறும் நுட்பமான விவரிப்புகளையும், அழகிய வர்ணனைகளையும் சம்ஸ்கிருதத்துக்கு சரியான முறையில் கடத்திச் செல்வது என்பது நேரம் எடுத்துகொள்ளும் வேலை. ஒரு சொல் கூட தவறாமல், அந்த உணர்வையும் நகைச்சுவையையும் சொல்வதற்கு பல அகராதிகளையும் நூல்களையும் பார்க்க வேண்டி வந்தது.
கல்கியின் நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்றபோது, அவர் எழுதிய பெரும்பாலான கதைகளையும் நாவல்களையும் மீண்டும் ஒரு முறை நான் ஆர்வத்துடன் ஆழ்ந்து படித்தேன். அதில், 'பொன்னியின் செல்வன்' என்னை முழுமையாகக் கவர்ந்தது. அதை மொழிபெயர்க்க எனக்குள்ளே ஆர்வம் எழுந்தாலும், அது சாத்தியமாகுமா? என்ற மிரட்சியும் ஏற்பட்டது.
'பொன்னியின் செல்வன்' மொழிபெயர்ப்புக்கு மூத்த புலவர் புலமைப்பரிசில் வழங்க என்னைத் தேர்வு செய்தது. அது எனக்கு ஒரு பெரும் ஊக்க சக்தியாக அமைந்தது.
மத்திய அரசு அளித்த நிதியுதவியோடு அந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இன்றளவும் உள்ளது.
எனது 'பொன்னியின் செல்வன்' சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பை ஐந்து பாகங்களாக, ராஷ்டிரிய சம்ஸ்கிருத சமஸ்தானம் வெளியிட்டது. அந்த வெளியீட்டு விழாவில் அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிதி இரானி கலந்துகொண்டு வாழ்த்தினார்.
உங்களுடைய இதர மொழிபெயர்ப்பு..?
'ராம்கீர்த்தி மஹா காவியம்' என்ற பெயரில் தாய் மொழியில் உள்ள தாய்லாந்து நாட்டு ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்தேன். அதற்கான பாராட்டு விழாவில் தாய்லாந்து மன்னர் பங்கேற்று என்னை கெளரவித்தார்.
சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தது மனதுக்கு நிறைவளித்த ஒன்று. கல்கி, மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
டாக்டர் மு.வ. எழுதிய 'கரித்துண்டு' நாவலை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்ததும் குறிப்பிடத்தக்கது. நான் 'ஒளியின் நிழல்' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த புத்தகம் மகாத்மா காந்தியின் மகன் ஹீராலால் காந்தியின் வாழ்க்கைக் கதை, மகாபாரதத்தில் ஆண் பாத்திரங்கள், மகா
பாரதத்தில் பெண் பாத்திரங்கள் என்ற இரு நூல்களும் குஜராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டவை ஆகும்.
சம்ஸ்கிருதம் உங்கள் தினசரி வாழ்க்கைக்குப் பயன் அளிக்கிறதா?
எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது, என் தாய் மறைந்துவிட்டார். நாங்கள் ஐந்தாறு குழந்தைகள். எங்கள் தந்தையார்தான் எங்களை வளர்த்து ஆளாக்கினார். சிறுவயதிலேயே கற்ற சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எங்கள் மனதில் ஆழ்ந்த ஆன்மிக உணர்வை ஏற்படுத்தின.
நான் கற்ற காளிதாசரின் படைப்புகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்து உள்வாங்கிக் கொண்டதன் பயனாக வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாகக் காணாமல் அதன் உட்பொருளை நோக்கவேண்டும் என்று உணர முடிந்தது. அவற்றை வாழ்க்கையில் கடைப் பிடிக்க முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.