கோயம்புத்தூரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் விகாஷ் குமார் தனது மகனுக்கு ரசாயனம் இல்லாத நீச்சல் குளத்தைத் தேடிச் சென்றபோது, பெரும்பாலானவற்றில் தண்ணீரில் குளோரின் அளவு அதிகமாக இருப்பதை அறிந்தார். 'தீங்கில்லாமல் குளம் தேவை' என்பதை உணர்ந்து இயற்கையான பொருள்களை மட்டுமே பயன்படுத்தி
நீச்சல் குளத்தைக் கட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியது:
''சிறு வயதில் கிராமத்தில் இயற்கையான முறையில் குளங்களில் குளித்து வளர்ந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது.
குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத் தர, கிராமங்களுக்குத் தொடர்ந்து போக முடியாத நிலை. நகரத்தில் பல நீச்சல் குளங்கள் இருந்தாலும் அவை பக்க விளைவுகளின் பட்டியலை இலவச இணைப்பாக வழங்குகின்றன.
அதிகமான குளோரின் தண்ணீரில் கலந்திருக்கிறது. தலைமுடியைச் சேதப்படுத்தி, சருமத்தை எரிச்சலூட்டுகிறது. தண்ணீர் பட்டு கண்கள் சிவப்பாகும். சுவாசிப்பதிலும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
இத்தனை உபாதைகளை என் மகன் அனுபவிக்க நான் விரும்பவில்லை. தூய்மையான குளம் ஒன்றை உருவாக்க விரும்பினேன். ஐரோப்பாவில் இயற்கை நீர்நிலைகளைப் பிரதிபலிக்கும், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருக்கும் பயோ நீச்சல் குளங்களை பற்றி அறிந்தேன்.
பொள்ளாச்சியில் உள்ள எனது பண்ணை வீட்டில் சிமென்ட், குளோரின், செயற்கை ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாமல் மாசுக்களை இயற்கையான முறையில் நீக்கிக் கொள்ளும் நீச்சல் குளத்தைக் கட்டினேன்.
நம் காலநிலைக்கேற்ற, கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு உயிரி நீச்சல் குளங்களை வடிவமைத்து நிர்மாணிக்க 'பயோஸ்பியர்' என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினேன். எனது நீச்சல் குளங்கள் முற்றிலும் அந்தந்த நகரங்களில் இயற்கையாகக் கிடைக்கும் கற்கள், பாறைகள், சரளைக் கற்கள், மண் துகள்கள், நீர்வாழ் தாவரங்கள், நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளடக்கியிருக்கும்.
நீச்சல் குளங்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்ச மோட்டார் துணை வேண்டும். பாக்டீரியாக்கள், நீர்வாழ் தாவரங்கள் நீச்சல் குள மாசுக்களை இயற்கையாக வடிகட்டி தூய்மைப் படுத்தும் காரணிகளாகச் செயல்படுகின்றன. தண்ணீரின் சமநிலையை பராமரிக்கின்றன. ஆண்டில் ஒருமுறை கூட தண்ணீரை மாற்றத் தேவையும் ஏற்படுவதில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுள்ள வீட்டு உரிமையாளர்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகளில் உயிரி நீச்சல் குளங்களைக் கட்டிக் கொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இயற்கை நீச்சல் குளமும் கட்ட சுமார் 45 நாள்கள் ஆகும். சிறு நீர்வீழ்ச்சிகள், வளைந்து செல்லும் இயற்கை நீரோடைகளை உள்ளடக்கியதாகவும் உயிரி நீச்சல் குளங்களை வடிவமைக்கலாம். குளங்களில் கான்கிரீட் அல்லது பிளாஸ்டிக் போர்வை பயன்படுத்தப்படவில்லை.
மக்கள் என்னிடம் வருவது ஒரு குளத்துக்காக மட்டுமல்ல; அவர்கள் தொலைத்து விட்டதாகக் கருதும் இயற்கையின் ஒரு பகுதியை மீட்டு எடுப்பதற்காவும்தான்'' என்கிறார் விகாஷ் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.