பாஸ்போர்ட், விசா ஆகிய இரண்டும் இல்லாவிட்டால் யாராக இருந்தாலும், எந்தவொரு வெளிநாட்டிலும் நுழையவே முடியாது. 'இவர் என் நாட்டு பிரஜை' என்கிற 'பாஸ்போர்ட்' காகிதமும், 'இவரை நம் தேசத்தில் அனுமதிக்கலாம். இத்தனை நாள் தங்கலாம்' என்பதை காட்டும் 'விசா'வும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எல்லோரிடமும் இருந்தாக வேண்டியது அவசியம்.
உள்ளூரிலேயே தவறுகள் செய்தல், அரசுக்கு வரி பாக்கி, வங்கிக் கடன் மோசடி, குற்றங்கள் புரிந்து வெளிநாடு சென்று தப்பிவிட முயற்சிப்பவர்களைத் தடுக்கவே பாஸ்போர்ட். இதை பயணியின் சொந்த நாட்டு அரசு தர வேண்டும்.
'இவர் எங்கே வேண்டுமானாலும் போகலாம். எனக்கு எந்தப் பாக்கியும் கிடையாது' என்கிறது பாஸ்போர்ட். 'என் நாட்டுக்குள் இவர் வரலாம்' என்கிறது விசா. இதை பயணிக்குத் தருவது இவர் போக விரும்புகிற நாட்டின் தூதரகம்.
தூதரகங்கள் விசாக்களை வழங்குகின்றன. பாஸ்போர்ட் இருந்தால்தான் விசாவுக்கு மனு அளிக்கவே முடியும். இவை வழங்கப்படுகிற இடத்திலே கூட்டம் அலைமோதுகிறது.
முற்காலத்தில் அரசனுடைய தூதர்களும் முக்கியஸ்தர்களும் வெளிநாடுகளுக்குப் போகும்போது அரசனிடமிருந்து நன்னடத்தைக் காகிதமோ, முத்திரை மோதிரமோ வாங்கிச் செல்வது வழக்கம். பேபர்ஸ் புல்லிதழ்கள் மீது இந்தச் சான்றிதழ்கள் எழுதப்பட்டு, ராஜ முத்திரைகள் இடப்பட்டன. அந்த நாளில் வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் குறைவு.
இன்றைய பாஸ்போர்ட்டிலே காணப்படும் வாசகங்கள் ரோம் சக்கரவர்த்தி அகஸ்டசுடையது. 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்டஸின் வாசகம் இதுதான். 'இதைக் கொண்டு வரும் பயணிக்கு, பூமியிலே, கடலிலோ எவராவது துன்பம் செய்விக்க முடிவு செய்தால், அப்படிச் செய்யும் முன் ஸீஸரை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு தனக்குப் பலம் இருக்கிறதா என்பதை யோசிப்பானாக' - இது ஸீஸர் அளித்த பாஸ்போர்ட்டின் வாசகம்.
முதன் முதலில் அமெரிக்க பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. 1780-ஆம் ஆண்டில் ஜூலை 7-ஆம் தேதியிட்ட பாஸ்போர்ட்டில், 'சட்ட சம்பந்தமான காரியங்களுக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரஜை' என்று எழுதியிருந்தது. அப்போது ராஜாங்க காரியதரிசியாக இருந்த 'தாமஸ் பிக்கரிங்' என்பவர் கையெழுத்திட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் சாதாரண காகிதங்களாகவும் உள்ளூர் அதிகாரிகள் அல்லது பிரபலமானவர்களால் வழங்கப்பட்டதாகவும் இருந்தன. அது இருப்பது கட்டாயமாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான பயணிகள் அது இருப்பதை பெரிய பாதுகாப்பாகக் கருதினர்.
1856-ஆம் ஆண்டில் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் அதிகாரம் அமெரிக்க ராஜாங்க காரியதரிசிக்கு வழங்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க பாஸ்போர்ட்டுகளில் அதை எடுத்து வரும் ஆளைப் பற்றிய வர்ணனைகளும் இருந்தன.
1914-ஆம் ஆண்டில்தான் முதன் முதலாகப் புகைப்படங்களை இணைக்கும் வழக்கம் தோன்றியது. 1926-ஆம் ஆண்டில் பாஸ்போர்ட்டுகள் முக்கியத்துவம் பெறத் துவங்கின. வெறும் ஒற்றைக் காகிதமாக இருந்த அது கனத்த அட்டையுடன் கூடிய சிறு புத்தகம் போன்ற வடிவம் பெற்றது.
இப்போது எல்லா நாடுகளின் பாஸ்போர்ட்டுகளும் பாக்கெட்டில் வைக்கும் அளவில் சிறியதாக இருக்கின்றன. பாஸ்போர்ட்டுகள் தருகிற வேலையை அரசாங்கங்கள் மட்டுமே செய்கின்றன. பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் அரசு முத்திரையுடன் தரப்படுபவை மட்டுமே பிற நாடுகளில் செல்லுபடியாகக் கூடியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.