நாய்கள் தத்தெடுப்பு...

'நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர். இவற்றுக்கு தெருநாய்களே காரணம் என்ற கருத்து நிலவுகிறது.
நாய்கள் தத்தெடுப்பு...
Published on
Updated on
2 min read

வி.என்.ராகவன்

'நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர். இவற்றுக்கு தெருநாய்களே காரணம் என்ற கருத்து நிலவுகிறது. சவாலான நாய்கள் பிரச்னையைத் தடுக்க கருத்தடை, வெறிநோய் தடுப்பூசித் திட்டங்கள் வெற்றி கரமாக அமையவில்லை.

தஞ்சாவூரில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தில் தெரு நாய்கள் அதிகமாகத் தத்தெடுக்கப்படுவதால், நாய்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிறது'' என்கிறார் அருங்கானுயிர் காப்பு, சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) நிறுவனரும், தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்பு சங்க அலுவல்சாரா உறுப்பினருமான முனைவர் ஆர். சதீஷ்குமார்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

அவரிடம் பேசியபோது:

'கெளரவத்துக்காகவே நாய்களை வளர்க்கின்றனர். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வெளிநாட்டு நாய்களையே மக்கள் வாங்குகின்றனர். இதுவே, தெருநாய்க் குட்டியை எடுத்து வளர்த்தால் எந்தச் செலவும் இல்லை.

நம்முடன் நன்றாகப் பழகுவதுடன் நன்றி உள்ளதாக இருக்கும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தஞ்சாவூரில் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்.

கால்நடை பராமரிப்புத் துறை, தஞ்சாவூர் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம், அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) ஆகியன இணைந்து 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். முதல் நாய்க் குட்டியை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தத்தெடுத்து, வளர்த்தும் வருகிறார்.

இதுவரை தெருக்களில் ஆதரவற்ற நிலையில் இருந்த 74 நாய்க்குட்டிகள் மீட்கப்பட்டதுடன், சமூக ஊடகங்களில் முன்பதிவு செய்தவர்களிடம் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு, தத்து அளிக்கப்பட்ட நாய்க்கு உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை செய்தல், கண்காணித்தல் போன்ற பணிகளைச் செய்கிறோம்.

தெரு நாய்களுக்கு உணவுதான் பிரச்னையாக இருக்கிறது. ஒருவர் ஒரு நாயைத் தத்தெடுத்து வளர்க்கும்போது, உணவு கிடைத்துவிடும். வளர்ப்பவர்கள் அந்த நாய்க்கு கருத்தடை செய்து, வெறிநோய் தடுப்பூசியும் செலுத்திவிடுவர். இதனால் நாய்களின் இனப்பெருக்கமும் குறைந்து, ரேபிஸ் பரவுவதும் தடுக்கப்படும்.

நாய்களுக்கு உணவுப் பற்றாக்குறை பிரச்னை தவிர்க்கப்படும். சாப்பாடு வைப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும்போது, அவருடைய விசுவாசியாக நாய் மாறிவிடுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும்போது, வளர்ப்பவர்கள் சொல்வதைக் கேட்டு கட்டுப்பட்டு இருக்கும். அதே சமயம் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்காமல், வெளியே விடும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். நாயுடன் நேரத்தை ஒதுக்கி விளையாடினால், அதற்கு மன அழுத்தம் ஏற்படாது. மற்றவர்களைக் கடிப்பதையும் தவிர்க்கும்.

தெரு நாய்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் என்பதால் நோய்வாய்ப்படாது. வெளிநாட்டு நாய் இனங்கள் சாதாரணமாக மழை பெய்தாலும்கூட உடல் நலம் பாதிக்கப்படும். வெயில் காலத்தில் வெப்பம் தாங்காது என்பதால், மின் விசிறி அவசியம் தேவைப்படும்.

இறைச்சியை விரும்பி சாப்பிடும் என்பதால், வளர்ப்புச் செலவும் அதிகம். தெரு நாய்கள் எந்த உணவு கொடுத்தாலும் சாப்பிடும். சாதாரண பிஸ்கட், பழைய சோறு கூட தின்று திருப்தியடைந்துவிடும். சிறு வயதிலிருந்தே நம் வீட்டில் தயாரிக்கப்படும் சாதாரண சைவ உணவு கொடுத்து பழக்கினால், கடைசி வரைக்கும் அதையே விரும்பி சாப்பிடும். தெரு நாய் வளர்ப்பில் செலவு குறைவு.

முன்பெல்லாம் தெரு நாய்களுக்கு சோறு கொடுக்கும் பழக்கம் இருந்தது. காலப்போக்கில் வெளிநாட்டு நாய் இனங்கள் மீதான மோகம் அதிகரித்தது. இதனால், தெரு நாய்கள் கைவிடப்பட்ட நிலைக்கு மாறிவிட்டதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆளில்லாத நிலை ஏற்பட்டது. கருத்தடை செய்யவோ, தடுப்பூசி போடவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டதால், இனப்பெருக்கமும் அதிகரித்தது.

ஒரு தெருவுக்கு சராசரியாக 20 நாய்கள் உள்ளன. உணவு கிடைக்காத நிலையில், ஒரு இட்லி கிடைத்தால் கூட, அதற்கு 20 நாய்கள் போராடும் நிலை உள்ளது. ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொள்ளும்போது, அதனுடைய எச்சில் மூலம் ரேபிஸ் கிருமி தொற்று பரவுகிறது.

ஒரு நாய்க்கு ரேபிஸ் கிருமி இருந்தால், அது 20 நாய்களுக்கும் பரவிவிடுவதால், வெறிநாய்க்கடி அதிகமானது. தெருவில் உள்ள நாய்களுக்கு தெருவாசிகளே உணவு வழங்கினால், அவற்றுக்கு உணவுப் பற்றாக்குறை பிரச்னை ஏற்படாது.

நாய்களுக்கு உணவு கொடுப்பதால்தான் இனப்பெருக்கம் அதிகமாகி, பிரச்னைகள் ஏற்படுவதாகத் தவறான கருத்து நிலவுகிறது. இதனால், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவரிடம் மற்றவர்கள் சண்டை போடுகின்றனர். உணவு கொடுக்காததால்தான், நாய்கள் பிரச்னை ஏற்படுகிறது. நாய்களுக்கு உணவு கிடைத்தால், அவற்றுக்குள் சண்டைகள் வராது. மனிதர்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும்.

தெருவாசிகளே உணவு கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை பராமரிப்புத் துறை, தன்னார்வலர்கள் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடையும், வெறிநோயைத் தவிர்க்கத் தடுப்பூசியும் போடலாம்.

இனப்பெருக்கக் காலத்தில்தான் நாய்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். கருத்தடை செய்துவிட்டால், அதனுடைய செயல்பாடுகளும் குறைந்துவிடும். இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினாலே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இதற்கு பதிலாக அதைக் கொல்வதோ, அடைத்து வைப்பதோ தீர்வாகாது.

இந்த உலகில் வாழ்வதற்கு அனைத்து உயிரினங்களுக்கும் உரிமை உண்டு. நாம் வாழ மற்ற உயிரினங்களை அழிக்கக் கூடாது'' என்கிறார் சதீஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com