தலைமுறை தலைமுறையாக...

தலைமுறை தலைமுறையாக...

இயல்பான மனிதர்களாக இருக்கும்போது மற்றவர்களைப் போல்தான் நடை, உடை, பாவனையில் நடமாடுகின்றனர்.
Published on

தமிழானவன்

இயல்பான மனிதர்களாக இருக்கும்போது மற்றவர்களைப் போல்தான் நடை, உடை, பாவனையில் நடமாடுகின்றனர். கலையை நிகழ்த்துவதற்காக முகத்தில் ஒப்பனை ஏறியதும் மிடுக்கும், துடிப்பும் ஒட்டிக் கொள்கிறது. நாட்டின் பாரம்பரியம் மிக்க கலையைப் பற்றி பேசினாலும் அந்த உணர்வாகவே இந்தக் கலைஞர்கள் வாழ்கின்றனர்.

79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி புதுவை யூனியன் பிரதேச அரசு நடத்திய கலைவிழாவில் பங்கேற்க ஆந்திரம், குஜராத், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிஸ்ஸா, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களிலிருந்து 12 கலைக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 120 கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.

இதைத் தவிர புதுச்சேரியைச் சேர்ந்த 30 கலைக் குழுவில் இருந்து சுமார் 400 கலைஞர்கள் இடம் பெற்றனர். இந்த 520 கலைஞர்களும் புதுச்சேரியின் 5 இடங்களில் சுழற்சி முறையில் மூன்று நாள்கள் கலைகளை மக்களிடம் கொண்டு சென்று உயிர்ப்புக் கொடுத்தனர்.

புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறையும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இந்தக் கலைஞர்கள் சிலரிடம் பேசினோம்.

பி.புட்டி

கர்நாடகத்தின் பிரபலமான சிவத் தாண்டவ நடனத்தை கதையம்சமாகக் கொண்ட "மகளிர் வீரகாசே' என்ற வீரகாசி நாட்டுப்புற நடனத்தை நடத்தினோம். மேள தாளத்துக்கு ஏற்ப வீரபத்ரா, பத்ரகாளி, தட்ச பிரம்மா, பார்வதிதேவி, கோபம் அடைந்த சிவன் உள்ளிட்டவர்களாக மாறி ஆக்ரோஷமாக ஆடுவோம்.

நாட்டில் நிலவும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தக் கலையை பத்து வயது சிறுமியாக இருக்கும்போதே கற்றேன். ஏழாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கலையை நிகழ்த்தி வருகிறேன்.

பி.எஸ்ஸி. நர்சிங் மாணவி பி. சந்தனா, கோலாரில் ஐபோன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஆர். சந்திரிகா உள்ளிட்ட ஐந்து பெண் கலைஞர்கள், நான்கு ஆண்கள் எங்கள் குழுவில் உள்ளனர்.

விநாயகர் சதுர்த்திக்காக, ஹைதராபாத்துக்குச் செல்ல எங்கள் குழுவுக்கு ஏற்கெனவே வாய்ப்பு கிடைத்துள்ளது.

தத்பாட்

"மகளிர் வீரகாசே' கலையில், ஆண் கலைஞர்கள் பெண் வேடமிட்டு நிகழ்த்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாகப் பெண்களும் ஈடுபட்டுள்ளனர். தங்களாலும் இத்துறையில் சாதிக்க முடியும் என்பதை காட்டுவதாகவே இது இருக்கிறது.

இ.ஜி. அபர்ண ஷர்மா

கேரளத்தின் தாள இசைக் கலைஞர்களை எல்லா இடத்துக்கும் அழைத்துச் செல்வதில் சிரமம் இருக்கிறது. இதனால் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவின் உதவியுடன் என்னுடன் 3 கலைஞர்களை இணைத்து, கேரள நடனத்தை நிகழ்த்தி வருகிறேன்.

கதகளியிலிருந்து சற்று மென்மை அடைந்த வடிவமான கேரள நடனத்தை உருவாக்கிய டாக்டர் குரு கோபிநாத் குறித்து ஆராய்ச்சி செய்யப் போய் நடனக் கலைஞராகவே மாறியுள்ளேன். இதுதொடர்பாக 2 புத்தகங்களை எழுதியுள்ளேன். கேரள அரசு வழங்கும் ஆராய்ச்சி உதவித் தொகையையும் பெற்றுள்ளேன்.

இந்தக் கலை வடிவத்தை மீட்டெடுக்க ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று விருப்பப்படுவோருக்குக் கற்பித்து வருகிறேன். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், சென்னை, கர்நாடகத்தில் உள்ள மூகாம்பிகை கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருகின்றன.

எஸ்.பிரசாத்

செண்டை மேளத்தை கேரளத்தில் உட்கார்ந்து ரசித்துக் கேட்பார்கள், தமிழகத்தில் கேட்டுக் கொண்டே செல்வார்கள். இங்கு பொழுதுபோக்குக்கான இசை வடிவமாக இருக்கிறது.

எஸ்.சாய்ராம் மணிகண்டா

ஆந்திரத்தின் பாரம்பரிய கரகலு, வீரநாட்டியத்துக்காக எனது கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டேன். மூன்று தலைமுறையாக, கலைக் குடும்பப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளேன். சிறு வயது முதலே இசைக் கருவிகளை நேசிக்கவும் வாசிக்கவும் தொடங்கினேன்.

தவில் போல இருக்கும் வீரனம் என்ற இசைக் கருவியில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். நாகஸ்வரம் உள்ளிட்ட தாளக் கருவிகளின் இசைக்கு ஏற்ப தலையில் கரகத்துடனான ஆட்டத்துக்கு என்னுடன் 9 கலைஞர்களை இணைத்திருக்கிறேன். தஞ்சாவூர், பெங்களூர், ராஜஸ்தான், தில்லி, உள்ளிட்ட இடங்களில் எங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஜெ. ராகுல்

ஹரியாணாவில் அறுவடை நேரத்தில் நிகழ்த்தப்படும் பாரம்பரியம் மிக்க ஃபாக் கூமர் நடனத்தை 11 கலைஞர்களுடன் நிகழ்த்தி வருகிறோம். ஹோலி பண்டிகையின்போது இந்தக் கலை நிகழ்த்தப்படும். இதைத் தவிர

திருமணம், குழந்தை பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது.

பி.டெக். கட்டடவியல் படித்தும் கலையின் மீதான ஈர்ப்புக் காரணமாக முழு நேரமும் ஈடுபட்டுள்ளேன். குருநாதர் எஸ். அஜயின் வழிகாட்டுதலின்படி, இந்தக் கலையை மீட்டெடுப்பதுதான் என் முதல் பணி. மூன்றாவது தலை

முறையாக எங்கள் குடும்பத்தார் இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறோம்.

நிகழ்ச்சி இல்லையென்றால், விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறேன்.

தீபேஷ் பாண்டே

மத்திய பிரதேசத்தின் புந்தேல் கண்ட் என்ற பகுதியில் அதிகமாகத் திருமணம், குழந்தை பிறப்பு கொண்டாட்டத்துக்கு மகிழ்ச்சியுடன் "பதாய்' எனும் நாட்டுப்புறக் கலை வடிவத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தக் கலை வடிவத்தை நிகழ்த்த எங்கள் குழுவில் 4 பெண்கள், 6 ஆண்கள் உள்ளனர். நாட்டின் 29 மாநிலங்களுக்கும் பயணித்து இந்தக் கலையை நிகழ்த்தியுள்ளேன்.

நடனத்துக்கான 6 ஆண்டு கால டிப்ளமோ படிப்பை முடித்த நான், சாகர் என்ற இடத்தில் கலை அகாதெமியை நிறுவி இளையத் தலைமுறையினருக்குப் பயிற்றுவித்து வருகிறேன்.

படங்கள்: கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com