'என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம். தமிழ் பற்றி மேடைகள்தோறும் விழிப்புணர்வுப் பேச்சுகளை அளிக்க வேண்டும்.
புராதனக் கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த காணொளிகளைப் பதிவிட்டு இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் என் மனதில் உள்ளன'' என்கிறார் பெ. ஆசிகா.
சென்னை கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆறு இலக்கியங்கள் சார்ந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளையும் நடத்துகிறது. இவற்றில் அதிக அளவில் பரிசு பெறக் கூடிய பெண் போட்டியாளருக்கு "சாலமன் பாப்பையா' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், அந்த அமைப்பின் பொன் விழா ஆண்டில் விருது பெற்றவர் ஆசிகா.
தெளிவான தமிழ் உச்சரிப்பும், தேன் போன்ற குரலும் ஆசிகாவுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. தன் கருத்துகளை மேடைகளில் ஆணித்தரமாக எடுத்துரைக்கும்
அவரிடம் பேசியபோது:
'எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கொடுகூர் கிராமம். எனது தந்தை பெரியசாமி, தச்சர். அம்மா பெயர் வள்ளி, இல்லத்தரசி. அகிலா, அபிலா என்ற இரண்டு சகோதரிகளும், அரவிந்த் என்ற சகோதரரும் உள்ளனர். நாங்கள் மொத்தம் ஆறு பேர். நான் கடைக்குட்டி. நான் எம்.எஸ்ஸி., பி.எட். படித்துவிட்டு, எம்.எட். இறுதியாண்டு படிக்கிறேன்.
என் பெற்றோர் மனப்பாடச் செய்யுள்களை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, உணர்ச்சியுடன் விவரிப்பார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு படித்து, ஒப்பிப்பது எங்கள் வழக்கம். செய்யுள்களை நான் உணர்ச்சியுடன் சொல்வதை அம்மா மிகவும் ரசிப்பார். சிறு, சிறு தலைப்புகளைக் கொடுத்து என்னை பேசச் சொல்வார். என்னுடைய பேச்சுத் திறமையை வளர்த்துவிட்டவரும், கண்டறிந்தவரும் அம்மாதான்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, "கல்விக்கு கண் கொடுத்த கர்மவீரர் காமராஜர்' என்ற தலைப்பில் மேடையேறிப் பேசினேன். 12 மாணவர்கள் அதே மேடையில் பேசினர். அதில், நான் பரிசு பெற்றேன். பின்னர், பல மேடைகளில் பேசியுள்ளேன்.
பேச்சு என்றால், அது காந்தியடிகள், காமராஜர், பாரதியார், பெரியார் ஈ.வே.ரா., உள்ளிட்டோரை பற்றியே இருக்க வேண்டும் என்ற வட்டத்தில் முதலில் இருந்தேன். கம்பர், சேக்கிழார் போன்றோரை அறிமுகப்படுத்தியவர் என் கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்த கோ.மணிகண்டன். பேச்சுக்கு அடித்தளமாக இருக்கும்
தமிழுக்கு இலக்கியங்கள் மிகவும் முக்கியம் என்ற தெளிவான புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவர் அவர்.
இலக்கிய நூல்களைப் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. அவ்வப்போது கவிதையும் எழுதுவேன். என் பொழுதுபோக்கே புத்தகங்களை வாசிப்பதுதான்.
சென்னை கம்பன் கழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கம்பன் விழாவின் மாணவர் அரங்கில், "கம்பனில் ஊழியல்' என்ற தலைப்பில் பேசினேன். என்னுடைய பேச்சைக் கேட்டுவிட்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் என்னை ஆசிர்வதித்தார்.
சாலமன் பாப்பையாவுடன் முதலில் பட்டிமன்றத்தில் பேசியபோது, "சமூகச் சிந்தனைகளைவிட, சமூகத்தை புரட்சிகரமாக மாற்றக் கூடிய சிந்தனைகள்தான் மாபெரும் மாற்றத்தை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றன. அந்த மாற்றத்தைத் தரக் கூடிய வகையில் உங்கள் பேச்சு இருக்கிறது' என்று சொல்லி என்னை வாழ்த்தினார்.
150-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பேச்சுக்காகவும், எழுத்துக்காகவும் பெற்றிருக்கிறேன். குறிஞ்சி தமிழ் சங்கம் வழங்கிய "கலைமணி', வாகை தமிழ்ச் சங்கத்தின் "மாண்புமிகு மகளிர்' , "இளம் பேச்சுப் புயல்', "சிங்கப்பெண்',
"சிந்தனை சொல்லருவி' போன்ற விருதுகளுடன், "குட்டித் தமிழச்சி ஆசிகா' என்ற அடைமொழியையும் என் பேச்சு எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
மலேசியாவில் 2025 ஜனவரி மாதத்தில் நடைபெற்ற "விண்ணைப் பிளக்கும் வானரங்க சொற்போர்' என்ற போட்டியில், "தமிழ் சாம்பல் அணி' என்ற அணியில் நானும் பங்கேற்றேன். இலங்கை அணிக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில், எங்கள் அணி வெற்றிவாகை சூடியது. என்னுடைய ஏழு ஆண்டு கால உழைப்புக்குக் கிடைத்த பலன் இது.
2024-ஆம் ஆண்டில் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தில் மாணவர் அரங்கில், "பெரியபுராணம் காட்டும் திருத்தலங்கள்' என்ற தலைப்பில் பேசியதற்கு பாரதி பாஸ்கர் பாராட்டினார்.
கம்பராமாயணப் பாடல்கள் மிகவும் எளிமையாக, மனதில் பதியும்படி இருக்கும். கம்பருக்கு நான் செய்யக் கூடிய சிறு பணியாகத்தான் இந்தப் பாடல்களை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்தப் பாடல்களைப் படிக்கும்போதும், ஒவ்வொரு விதமான அனுபவத்தையும், ஒவ்வொரு விதமான தெளிவையும் கொடுக்கின்றன.
சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, அந்த நேரத்தை சரியானபடி நூலகங்களில் செலவிட வேண்டும். இந்தச் சமூகத்தை மாற்றும்படி நீ படி. தமிழுக்கு இயன்ற தொண்டை செய்து தரணி போற்றும் தமிழர்களாக உயர்வோம் என்பதே இன்றைய இளைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்பும் ஆலோசனை'' என்கிறார் ஆசிகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.