சாலிகிராமம் பிரசாத் லேப் எதிரே இருக்கும் டீக்கடைக்கு போனால், எல்லா மேஜைகளிலும் நடிகர்களின் கூட்டம். "கன்னி மாடம்' ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் சிரிக்கிறார். 'வணக்கம் பாஸ்...'' என வாசமாக வணக்கம் வைக்கிறார். சினிமா பந்தா இல்லாமல் மெல்லிய குரலில் பேசி, ஜில்லென புது லுக் காட்டி அமர்கிறார். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி உட்காருகிற துறுதுறு ஹீரோ.
பிரபலத்தின் வாரிசு... பெரிய சினிமா பின்னணி... இதுவெல்லாம்தான் நடிப்பதற்கான தகுதிகள் என்ற நிலை இப்போது இல்லை....
பெரிய அதிர்ஷ்டம் எனக்கும். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வந்தவர்களில் நானும் ஒருவன். மதுரை திருமங்கலம்தான் நமக்கு எல்லாம். ஐ.டி. படிப்பு, கை நிறைய சம்பளம் என இப்படித்தான் இலக்கு இருந்தது. கல்லூரி வாழ்க்கை எல்லோரையும் இடம் மாற்றிப் போடும். என்னையும் அப்படித்தான் அது மாற்றி வைத்தது. கல்லூரி நாள்களில் நாடகங்கள் நடிப்பதில் அவ்வளவு ஆர்வம். பல்
கலைக்கழக அளவில் மைம் நாடகங்களில் பெரிதாகக் கவனிக்கப்பட்டேன். அதுவே, சென்னைக்கு சினிமா நோக்கி வர வைத்தது. இங்கே வந்தும் பல நாடக குழுக்களோடு பயணமானேன். 100-க்கும் அதிகமான நாடகங்கள். காளி வெங்கட் எல்லாம் அப்போது என் செட்தான்.
"சபாஷ் சரியான போட்டி' எனக்கு முதல் படம். அதுதான் சின்ன சின்ன வாய்ப்புகளைக் கொண்டு வந்தது. போஸ் வெங்கட் சார், "ஒரு கதை இருக்கு... ஆனால் வழக்கமான கதை கிடையாது... சில விஷயங்களை சரியாகச் செய்தால் இது வேறு லெவலில் இருக்கும்...' என அழைத்து வந்தார். "சார் எதற்கும் தயார்...' என்று அவருடன் சேர்ந்து பயணமானேன்.
கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேலான உழைப்பு. அப்படி ஒரு கஷ்டம். இதில் எந்த மிகையும் இல்லை. என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான். மறக்கவே மாட்டேன். நன்றி சார். நீங்களெல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு நான் வந்ததே பெரிய விஷயம். எளிமையும், உழைப்புதான் எல்லாவற்றையும் விட அழகு. வாய்ப்பு தந்து அரவணைத்த ரூபி பிலிம்ஸ் ஹசீர் சாருக்கு சிரம் தாழ்ந்த நன்றி.
அடுத்தடுத்த படங்களை சரியாகத் திட்டமிடுவதில் தாமதம் காட்டுவது போல் இருக்கிறதே...
அதை உணர்ந்தே இருக்கிறேன். எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறுதான் இங்கே உழைக்க முடியும். எதையும் தனியாகச் செய்ய முடியாது என்பதில் தெளிவு உண்டு. நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது. "கன்னி மாடம்' முதல் ஹிட். அதனால் என்னைக் கவனிப்பவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பார்கள். அதை பூர்த்தி செய்தே ஆக வேண்டும்.
இப்போது "மைலாஞ்சி'. எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கி வரும் படம். நல்ல கதை. எல்லாம் சரியாக அமைந்தால் என் அடுத்த நிறுத்தம் இன்னும் அழகாக மாறும். என்னிடம் எப்போதும் மெனக்கெடல்கள் உண்டு. எதைத் தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். கல்லூரி படிக்கும் போதே, சினிமாவுக்காக என்னை தயார்படுத்திக் கொண்டே வந்தேன்.
அதனால்தான் "கன்னி மாடம்' படத்தில் அந்த நேர்த்தியை உணர முடிந்தது. முக்கியமாக சினிமாவை புரிந்து கொண்டதும் இதற்கு ஒரு காரணம். ஒரு செயல் ஒரு மனிதனை அழகாக்கணும். அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்த முதல் சினிமா. "மங்கி டாங்கி'. இது இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் உதவியாளர் அபி சைலேஷ் இயக்கும் படம். "எனக்கு வாய்த்த அடிமைகள்', இது தவிர இன்னொரு படம். எல்லாமே சரியாக இருக்கும்.
தொடக்கத்தில் கதைதான் முக்கியம் என்பவர்கள், பின்னாளில் கமர்ஷியல் சினிமாக்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்தானே....
நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும். ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கை கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. ஹாலிவுட்டில் இது எப்போதோ வந்து விட்டது. இங்கே இப்போதுதான் நடந்து கொண்டு வருகிறது.
பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். எனக்கும் அப்படித்தான். கதைதான் முக்கியம்.
இதுதான் கதை எனத் தீர்மானமாகப் பிடித்து விட்டால், அந்தக் கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் வெற்றிகளின் பட்டியல் தொடரும்.
சினிமாவில் யாரை பிடிக்கும்...
கெளதம் வாசுதேவ்மேனன், வெற்றிமாறன் இருவரும் ரொம்பவே பிடித்த இயக்குநர். வாழ்க்கையை அதன் பக்குவத்தில் புரிந்து கொண்டு, அதையே கதையாக்கி வசனங்கள் மூலமாக கலையாக்குகிற வித்தைக்காரர்கள். கதைக்கு வசனம் எழுதாமல், எழுதுகிற வசனத்தில் வாழ்க்கையைச் சொல்லி விடுவார்கள்.
இந்த மேஜிக் எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். இப்போது சினிமாவுக்கு வந்து விட்டேன். இவர்கள் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.விக்ரம், சூர்யா, அருண் விஜய் இந்த மூவரையும் அவ்வளவு பிடிக்கும். அவர்கள் எதிர்க் கொள்ளாத விமர்சனங்கள் இல்லை.
பெயர், புகழ் என இப்போது சினிமா தருகிற வெளிச்சத்துக்கு அந்தப் பக்கம், யாராலும் எதிர்கொள்ள முடியாத ஒரு பக்கம் இவர்களுக்கு உண்டு. சினிமா உலகத்தில் விதவிதமான குணாதிசயங்கள் நிறைந்த மனிதர்கள் வந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
என்னை மாதிரி வளர்ந்து வருகிற ஒவ்வொருத்தருக்கும் இவர்களின் வாழ்க்கை பெரிய உதாரணம். அவர்களின் பொறுமையும், எளிமையும் எப்போதுமே அழகு. அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல். இப்படி ஒவ்வொருவரையும் கவனித்து வழி நடக்க நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.