'துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் 'பிஸி'யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராக தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படி பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்'' என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்.
அவர் கூறியது:
'கல்லூரி காலத்திலிருந்தே துப்பறியும் வேலையுடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. கல்லூரிக் காலங்களில் மக்களை ஆர்வத்துடன் கவனிப்பவராகத் தொடங்கி, தனிப்பட்ட பிரச்னைகளில் தோழிகளுக்கு உதவவும், அவர்களது பிரச்னைகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும் தொடங்கினேன்.
அப்போதே ஓடிக்கொண்டிருந்தேன். உட்கார்ந்து டி.வி. பார்க்க முடியாது. செய்தித்தாள் வாசிக்க முடியாது. தொலைபேசி, பின்னர் அலைபேசி ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மர்மங்கள் நிறைந்தது இந்தத் துறை. புத்திசாலித்தனத்துடன் தந்திரத்தையும் இணைத்தவாறு புனைக்கதை போல இருக்கும் பிரச்னைக்குத் தீர்வையும், விடையையும் கண்டுபிடிக்க வேண்டும்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியங்களை உடைப்பதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும், உடைந்த அல்லது உடையப் போகும் வாழ்க்கைக்கு ஆலோசனை வழங்குவதிலும் கழிகிறது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்தல், தகவலுக்காகச் சிலரைக் கண்காணித்தல், ரகசிய விசாரணைகள் போன்றவை எனது தொழிலில் அங்கங்கள்.
அவற்றை விவரித்தால், 'திகில்' நாவல் போல் இருக்கும். மாணவன் ஒருவனுக்குப் பொறியியல் படிக்க விருப்பம் இல்லை. ஆனால் பெற்றோரோ வலுக்கட்டாயமாக பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். மன உளைச்சலால் மாணவன் புகைப் பழக்கத்தைத் தொடங்கினான். இதையறிந்த பெற்றோர் என்னிடம் வந்தனர். மாணவனிடம் பலமுறை பேசி மன உளைச்சல், புகைப் பிடிப்பதிலிருந்து மீட்டேன்.
மனைவிகளுக்குத் தெரியாமல் இன்னொரு வாழ்க்கை வாழும் ஆண்கள், பல விடுதிகளில் வருகை ஏடுகளில் ரகசியமாகப் பதிவு செய்வார்கள். அவற்றைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கும். தேர்தல்களின்போது அரசியல்வாதிகளுக்கு இடையில் போட்டியாளர்களில் ஒருவரையொருவர் துப்பறியச் சொல்வார்கள்.
நாங்கள் எப்போதும் காதுகளைத் திறந்தே வைத்திருப்போம். போதாக்குறைக்கு ரகசிய கேமரா கொண்டிருக்கும் பேனாக்கள், பொத்தான்கள், மேசையில் பொருத்தப்படும் மைக்ரோ போன்கள், உளவு கேமராக்கள் அனைத்தையும் பயன்படுத்துவோம்.
சந்தையில் போலி பொருள்கள் விற்பனையாவது குறித்து ஒரிஜினல் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் எங்களிடம் புகார் அளிப்பார்கள். நாங்கள் விசாரித்து கையும் களவுமாகப் பிடிப்போம்.
ஒருமுறை அரசியல்வாதி குறித்து அவரது மனைவியே துப்பறியச் சொன்னார். அரசியல்வாதி தன் மகன் பிறந்த நாளை மறந்து அதே நாளில் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததை படம் பிடித்து மனைவிக்குக் கொடுத்தோம். இதையறிந்த அரசியல்வாதியோ தனது அலுவலகம் அருகே கண்காணிக்க நின்றிருந்த எனது குழுவினர் மீது சந்தேகித்துப் பிடிக்க வந்தனர்.
இவர்கள் தங்களது கையில் இருந்த கேமராக்களை நிறுத்தப்பட்டிருந்த காரில் போட்டுவிட்டு கார் எண்ணை குறித்துவிட்டு, இன்னொருடாக்சியில் தப்பியோடியும் பிடித்துவிட்டார்கள். குழுவினரைச் சோதனை செய்ய ஒன்றும் கிடைக்காததால் விட்டுவிட்டார்கள். டாக்சி ஓட்டுநரின் உதவியுடன் நாங்கள் கேமரா போட்ட டாக்சி ஓட்டுநரிடமிருந்து கேமராவை மீட்டோம்.
எனது தொழில் குறித்து நான் எழுதிய புத்தகத்தின் போலி பிரதிகள் சந்தையில் விற்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு தொடர்ந்த போது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. என் மேல் தாக்குதல்களையும் நடத்தினர்'' என்கிறார் ரஜினி பண்டிட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.