அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்... என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'.
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
ஒரு நாய்க்கு சிலை அமைத்து, அதற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. புகழ் பெற்ற பி.பி.சி. தொலைக்காட்சியில் அந்த நாயைப் பற்றி ஒளிபரப்பி, கௌரவிக்கப்பட்டது. அதைக் கண்டவர்கள் எல்லாம் கண்கலங்கினார்கள். உணர்ச்சிப் பெருக்கால் அழுதவர்களும் உண்டு. இது இன்று வரை உலக வரலாற்றில் புதுமை.
லண்டனில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைத் தலங்களில் முக்கியமான ஒன்றாகவும் விளங்கி, அந்த நாயின் சிலையும் இருந்துவருகிறது. நாய் நன்றியும் விசுவாசமும் உள்ள பிராணி. நன்றியைத் தனது எஜமானுக்கு எந்தவிதத்தில் எல்லாம் உதவியிருக்கிறது என்பதை கதைகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றின் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த 'பாபி' நாயின் கதை வித்தியாசமானதும், அபூர்வமானதும் ஆகும்.
ஒரு கிராமத்தில் 'ஜான்கிரே' என்ற ஆடு மேய்ப்பவர் வாழ்ந்து வந்தார். 1850-ஆம் ஆண்டின் மத்தியில் வழக்கம்போல ஆடு மேய்க்கும் தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அழகிய நாய்க் குட்டி ஒன்றைப் பார்த்தார். அது துள்ளியபடியே வர, அவர் எடுத்து அணைத்துக்கொண்டார். பின்னர், நாயை வளர்த்து வந்தார். அவரைவிட்டுப் பிரியாமல் நாயும் சுற்றியே வந்தது.
வாழ்க்கை சுருக்கம்:
'ஜான் கிரேபிரியர்' என்ற அவர் தனது பெயரைச் சேர்த்து 'கிரேபிரியர் பாபி' என்று நாய்க்குப் பெயர் சூட்டினார். இருவரும் 8 ஆண்டுகளில் இணையில்லாத நண்பர்களாகிவிட்டனர் 1850-ஆம் ஆண்டு ஒரு மழைக்காலத்தில் துரதிர்ஷ்டமாக 'ஜான்கிரே' உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இவருடைய உறவினர்கள் ஊர் எல்லையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்தனர். இதையெல்லாம் பாபி கவனித்தது. மறுநாள் முதல் கல்லறைக்குச் சென்ற பாபி, அங்கே படுத்துக் கிடந்தது. இப்படியாக 14 ஆண்டுகள் கல்லறை வாசத்தைத் தொடர்ந்தது.
பரிதாபத்துக்குரிய அந்த நாய் பாபிக்கும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இடையில் ஒரு சிக்கல். தனக்கு ஆகாரம் அளித்து, அன்பும் ஆதரவும் காட்டிய தனது எஜமானனுக்கு ஒரு தடை ஏற்படும் என்று பாபி எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பான அந்தக் கல்லறை வளாகம் அவசியம் ஏற்படும்போது மட்டுமே திறந்துவைக்கப்பட்டது. மற்ற வேளைகளில் காவலாளியால் பூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது.
'பாபி' மட்டும் எப்படியோ கல்லறைக்கு உள்ளே நுழைந்து, தனது கடமையைச் செய்துவந்தது. இதனால் பாபியின் மீது காவலாளி குற்றம் சாட்டினார். 'பாபி தினமும் கல்லறைக்கு அத்துமீறி நுழைகிறது. கல்லறையை அசுத்தம் செய்கிறது' என்று அதை போலீஸில் காவலாளி ஒப்படைத்தார். அதோடு, இந்த நாய்க்கு லைசென்ஸ் கிடையாது என்றும் குற்றம் சாட்டினார். அப்போது இங்கிலாந்தில் லைசென்ஸ் இல்லாத நாய்களை கிடங்குக்கு அழைத்துச் சென்று, சுட்டுக் கொன்றுவிடுவார்கள்.
இதுகுறித்த செய்தி நாளிதழில் வந்தது. இதைக் கண்ட 'ப்ரோவஸ்ட் வில்லியம் சேம்பர்ஸ்' எனும் ஒரு பிரபுக்கு இரக்கம் ஏற்பட்டது. அவர் பாபிக்கான லைசென்ஸ் தொகையைச் செலுத்தி, அதற்கான பித்தளை வில்லையையும் பெற்றார். இதன்பின்னர், பாபிக்கு சுதந்திரம் கிடைத்தது. அது மீண்டும் தனது எஜமானரின் கல்லறையில் வந்து, தனது வாசத்தைத் தொடர்ந்தது.
இதையறிந்த அரசும் பாபியைத் தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தது. பாபியின் புகழ் பரவி, பெரிய மனிதர்களைப் போல் வாழ்ந்து வந்தது.பாபி தனது 22-ஆம் வயதில் 1872-இல் இறந்தது. தனது எஜமானர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகேயே பாபியையும் அடக்கம் செய்தனர்.
'ஏஞ்ஜிலா ஜியார் ஜீனா' என்கிறவர் விருப்பப்படி, தண்ணீர்க் குழாய் வைக்கப்பட்ட ஒரு மேசை மீது பாபியின் முழு உருவச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது.
'அன்பும் நன்றியும் கொண்ட பாபிக்கு பாராட்டுகள். 1858-ஆம் ஆண்டில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட எஜமானன் ஜான் கிரேயின் கல்லறையில் தனது இறுதிக் காலமான 1872-ஆம் ஆண்டு வரை உடனிருந்து பாதுகாத்து வந்ததின் நினைவுச் சின்னம் அரசின் அனுமதியின் பேரில் கட்டப்பட்டது- ஏஞ்ஜிலா ஜியார்ஜீனா' என்று பொறித்துவைத்தனர்.
இந்த நினைவுச் சின்னத்தை தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
ஸ்காட்லாந்தின் மேலை வீதியில் 'ஹண்ட்லி ஹவுஸ்' எனும் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. அதில், பாபியின் ஆஸ்தி காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அன்று அதன் கழுத்துப் பட்டையில் இருந்த லைசென்ஸ், வில்லை, சாப்பாட்டுத் தட்டு போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அனைத்துக்கும் மகுடம் அமைத்தது போல், நூறு ஆண்டுகள் கழித்து, 1972-இல் மாதா ஆலயம் ஒன்றில் பாபிக்கு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.