வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
ஆசிய பண்பாட்டு மையத்தின் கவிதைப் பள்ளி ஏற்பாட்டில், பேராசிரியர் அண்ணாதுரை, முனைவர்கள் வளவன், நட்சத்திரன், ஆய்வாளர்கள் பாபு, ராதா, முதுநிலை மாணவர்கள், ஓவியர்கள் என 25 பேர் இவ்விரு கிராமங்களில் கள ஆய்வுச் சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டனர்.
நாட்டேரி பிரம்மதேயத்தில் உள்ள (இன்றைக்கு பிரம்மதேசம்) மாமன்னர் ராஜேந்திரன் பள்ளிப்படை (அதாவது நினைவகம் அல்லது கல்லறை) என்று சொல்லப்படுகிற இடத்திலும் ஆய்வு, கவிதை, ஓவியம் சார்ந்து இந்தப் பயணம் இருந்தது.
'அரசர்கள் அறிவுத் துறையினர் ஒரு பக்கம் என்றால், மக்கள் அதில் பங்கு பெறவில்லை. ஒருபக்கம் கண்ணெதிரே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எழுவதும், வீழ்வதுமாக இருந்தபோது, மக்கள் அதில் வேடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்'' என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தக் கள ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் கூறியது:
'பெளத்தம், சமணம் ஆகியன 'வந்தேறிய மார்க்கம்' என்ற கருத்து நிலவுகிறது. அந்த மதங்களை இங்கு யாரும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. இங்கிருந்து செழித்தவையாக உள்ளன. அறிவுத் துறையில் முன்னணியில் இருந்த பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பெளத்தம் முதலில் அழிவுற்றிருக்கிறது. பின்னர், சமண- சைவ மோதலாக மாறி, சைவம் வென்று, அதுவே மார்க்கமாக வளர்ச்சி பெற்றது.
சைவத்தை ஏற்காதவர்கள் இப்போதும் அந்தச் சிற்றூர்களில் வாழ்ந்து வருகின்றனர். சைவத்தை ஏற்றவர்கள் வெள்ளாளர்களாக மாறி, வேளாண்மையில் சிறந்தனர். இந்தப் பகுதியில் விவசாயம் மிகச் சிறப்பாக இருந்துள்ளது.
பாலாற்றின் வரலாறு
'தஞ்சை பூமி சோறுடைத்து', 'யானை கட்டி போரடித்தார்கள்' என்றெல்லாம் கூறுவர். காவிரியில் அன்று கடைமடை வரை நீர் வருவது இயல்பாக இருந்தது.
பல்லவத் தேசத்து வரலாறு அப்படியல்ல; பாலாறு எப்போதும் மணலாறு, தலைகீழாக நின்றாலும் தண்ணீர் தலைமேலே ஓடாத ஆறு என்பர். பின்னர், எவ்வாறு தஞ்சையை மிஞ்சி நெல் வளத்தைக் கொண்டிருந்தது. அதுதான் பல்லவர்களின் நீர் மேலாண்மை. பல்லவப் பேரரசை 600 ஆண்டுகள் நிலைபெறச் செய்தது 'பாலாறு' என்ற பேரரசிதான்.
பல்லவர்கள் காலத்தில் பாலாற்றின் நீரைக் கொண்டு ஏரிகள் உள்ளிட்ட பலவகை நீர் நிலைகள் அமைத்து மிகப் பெரிய வேளாண்மைப் புரட்சி நிகழ்த்தப்பட்டது. பிரம்மதேயங்கள் என்பவை வேளாண் உற்பத்தி மண்டலங்களாகத் திகழ்ந்தன. இந்தப் பிரம்மதேயங்களில் பிராமணர்கள் விவசாய மேலாண்மை செய்துள்ளனர். உண்மையில் அதிக விளைச்சல் நிகழ்ந்தது வட தமிழ்நாட்டில்தான்.
கட்டடக் கலை
இவ்விரு கிராமங்களிலும் சமணர்களின் கட்டடக் கலை பாணியைக் காணமுடிகிறது. இதுவே பல்லவர்களுடைய கட்டடக் கலைப் பாணியாகவும் வளர்ந்தது. பல்லவர்களின் குறிப்பிடத்தக்க சமூக வளர்ச்சிப் போக்காக விவசாயமும், கட்டடக் கலையும்தான். பல்லவருடைய கட்டடக் கலை பாணியை சோழர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
பல்லவர்களுக்கு முன்பாகவே சமணர்கள் திராவிடக் கட்டடக் கலையை நிர்மாணித்திருந்தனர். வேளாண்மை செழிப்பாக இருந்தது.
அறிவுத் துறையில் சிறந்து விளங்கினர். இலக்கண இலக்கியங்கள் என தமிழுக்கு பெரிய பங்களித்துள்ளனர். திருப்பனமூரில் அவர்கள் சம்ஸ்கிருத பள்ளியை நடத்தி, அதில் சிறந்து விளங்கியுள்ளனர். பல்லவர் காலத்திலும் சமணம் செழித்திருந்தது. கட்டடக் கலைக்கு முன்னோடியாக சமணம் இருந்ததை அறிய முடியும்.
சோழர்களின் ராணுவ நடவடிக்கைகள்
வெம்பாக்கம், நாட்டேரி பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகள் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது, வந்தியத்தேவன் இந்தப் பகுதிகளை ஆட்சி செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. பாலாற்றுக் கரையோரப் பகுதிகளான இவை செழுமையான பூமியாகும். மேடான பகுதியாகும். இதனால் சோழர்களின் ராணுவ நடவடிக்கைகள் இங்கு இருந்துள்ளன.
ராணுவத்தை அதாவது அப்போதைய காலாட்படைகள், குதிரைப் படைகள், யானைப் படைகளை பாதுகாப்பாக பராமரிக்க மேடான பகுதி முக்கியத் தேவையாக இருந்தது. எனவே பாதுகாப்பு படைகளுக்கு தலைவரான வந்தியத்
தேவன் இப்பகுதியை ஆளுகை செய்ததாக அறியப்படுகிறது. வந்திய தேவனுக்கு ராஜராஜ சோழன் சகோதரி குந்தவையை மணம் முடித்திருந்தார்கள்.
ராஜேந்திர சோழனின் நினைவகம்
மாமன்னர் ராஜராஜ சோழன் காஞ்சிபுரம் வந்தபோது கைலாசநாதர் கோயிலைப் பார்வையிட்டு, அதே போன்றதொரு கோயிலை தஞ்சையில் எழுப்ப தீர்மானித்ததாகச் சொல்கிறார்கள். வே.நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய 'சோழர்கள்' எனும் நூலில் இதுதொடர்பான தகவல்கள் இருக்கலாம்.
கடல் பகுதி நாடுகளான ஜாவா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை பகுதிகளையெல்லாம் வென்ற ராஜராஜ சோழன் மகனான ராஜேந்திரன் 'கடாரம் கொண்டான்' என்று பெயர் பெற்றார். 'கங்கைகொண்ட சோழபுரம்' கண்ட அந்த ராஜேந்திரன், குந்தவை -வந்தியத்தேவனை பார்ப்
பதற்காக வரும்போது, வந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறார். அவரை அந்தப் பகுதியிலேயே எரித்து விடுகின்றனர். அவருடைய மனைவியும் தீ பாய்ந்து இறக்கிறார். இருவருடைய அஸ்தியையும் அங்கு வைத்து ஒரு பள்ளிப்படை அதாவது நினைவகம் கட்டப்பட்டது. அந்தப் பள்ளிப்படையே 'நாட்டேரி பிரம்மதேயம்' என்ற இடத்தில் உள்ளது'' என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.