தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.
தங்கம்
தங்கம்
Published on
Updated on
2 min read

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான். எவ்வளவு தான் கிடைக்கும் பூமியில் அது? பெரும்பாலான நாடுகள் தற்போது தங்கத்துக்காக ஆகாயத்தைப் பார்க்கின்றன. 'தாதுப் பொருள்களும், தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் பல கிரகங்களில் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே, விஞ்ஞானிகள் இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

சந்திரன், செவ்வாய், அதைச் சுற்றி வரும் குட்டிச் சந்திரன்கள், 'அஸ்ட்ராய்ட்' எனப்படும் சிறு கோள்கள், 'காமட்' எனப்படும் வால்நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றிலும் தங்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. 2050-ஆம் ஆண்டு வாக்கில் பல கோடானு கோடி டாலர் தொழிலாக இந்தத் தங்கச் சுரங்கம் தோண்டும் தொழில் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் 'ஆர்டெமிஸ்' திட்டத்தின்படி, சந்திரனில் ஒரு காலனியை உருவாக்கத் திட்டம் தீட்டியுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா ஒத்துழைப்புத் தருவதாக உறுதி கூறவே, அதற்கான உடன்படிக்கையும் உறுதியாகியுள்ளது.

ஒவ்வொரு பொருளையும் சந்திரனுக்கோ, இதர இடங்களுக்கோ கொண்டு செல்வது என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட செலவை உருவாக்கும். ஆகவே அந்தந்த இடத்தில் கிடைப்பனவற்றைக் கொண்டு புதிய தொழில்கள் விண்ணில் உருவாக வேண்டும். ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மையம் இந்தச் சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக ஆக்க முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

பூமியில் அல்லாத வேறு இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி பற்றிய ஆய்வு சிட்னியில் 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெற ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

இதற்கான உலகம் சார்ந்த சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் தொழிலகங்களும் விண்வெளி ஆய்வு மையங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். பூமியில் சுரங்கம் தோண்டும் போது அது எந்தவித சுரங்கமானாலும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது.

எடுத்துக்காட்டுக்குச் சொல்வதென்றால் ஒரு எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட வேண்டுமென்றால் லிதியம், தாமிரம், கிராபைட், துத்தநாகம், கோபால்ட், நிக்கல் ஆகியன தேவைப்படுகின்றன. இவற்றைத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் மாசு கவலையளிப்பதாக உள்ளது. விண்ணில் ரோபோக்கள், புரபல்ஷன் அமைப்புகள், ஸ்பெக்ட்ரோமீட்டர் உள்ளிட்டவையே இனி சுரங்கங்களைத் தோண்டும். கோடாலிக்கும், மண்வெட்டிக்கும் இனி விடுதலை.

செவ்வாய்க்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே உடைந்து துண்டு துண்டாக உள்ள கிரகங்களில் உள்ள தாதுப் பொருள்களும் உலோகங்களும் தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளவையாகும். 'எம் டைப்' என்ற சிறு கோள்கள் நிக்கலையும் இரும்பையும் கொண்டிருக்கின்றன. 200 மீட்டர் குறுக்களவுள்ள ஒரு சிறு கோளில் பூமியில் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட பிளாட்டினத்தை விட அதிக பிளாட்டினம் இருக்கிறது.

நாஸா தன் கண்ணைப் பதித்து இருப்பது 140 மைல் அகலமுள்ள '16 சைக்' என்ற ஒரு சிறுகோளின் மீது தான். இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு க்வாட்ரல்லியன் என்ற எண் ஒன்றுக்குப் பக்கத்தில் 15 பூஜ்யங்களைப் போட்டு வரும் எண்ணாகும். பத்தாயிரம் டாலர் க்வாட்ரில்லியனுக்கும் மேலாக மதிப்பு உள்ள விலைமதிப்புள்ள தாதுப் பொருள்கள் இதில் உள்ளன. நாஸா வெற்றி பெற்றால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பூமியில் அமெரிக்காவே வல்லரசாக இருக்கும்.

இந்த தங்க வேட்டையில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டுவிட்டன, நிபுணர்களும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். ஏனெனில், உலகின் பிரம்மாண்டமான வல்லரசு உருவாக வேண்டுமென்றால் அது தங்க வேட்டையில் முதலிடம் பெறுவதோடு விண்ணில் ஒரு சுரங்கத்தைத் தோண்டிக் காண்பிக்க வேண்டும். பல நாடுகள் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. நாளைய தங்கம் நமக்குக் கிடைப்பது விண்ணிலிருந்துதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com