செய்திகள் வாசிப்பது...

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் தமிழில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கியதன் பொன்விழா அண்மையில் நிறைவுற்றது.
செய்திகள் வாசிப்பது...
Published on
Updated on
3 min read

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் தமிழில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கியதன் பொன்விழா அண்மையில் நிறைவுற்றது.

அதனைக் கொண்டாடும் விதமாக, டி.டி. தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின. இதில் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக, தொலைக்காட்சியில் செய்தி வாசித்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியானது மிகக் குறுகிய கால அவகாசத்தில் ஆகஸ்ட் 15-இல் ஏற்பாடு செய்யப்பட்டது.

டி.வி.வரதராஜன், செந்தமிழரசு, பாத்திமா பாபு, நிஜந்தன், ஜெயஸ்ரீ சுந்தர் ஆகிய ஐந்து பேரும் சில செய்திகளை வாசித்து, தொலைக்காட்சி நேயர்களை 1980, 1990-களின் காலத்துக்கே அழைத்துச் சென்றனர்.

இந்தப் புதுமையான அனுபவம் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பேசினோம்.

டி.வி.வரதராஜன்

டி.டி. தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தித் துறையின் ஜெகன் என்பவர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். 'நாங்கள் எப்படி செய்தி வாசிப்பாளர்கள் ஆனோம், செய்தி வாசிப்பு அனுபவங்கள், ஸ்டூடியோவுக்கு வெளியில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள்..' போன்ற மலரும் நினைவுகளை அந்த நிகழ்ச்சி கிளறிவிட்டது.

'தொலைக்காட்சியில் முழு நேர ஊழியர்கள் அல்லாதவர்களும் செய்தி வாசிப்பாளராகலாம். பட்டதாரியாக இருக்க வேண்டும்' என்பதை அறிந்தபோது, ஆச்சரியமாக இருந்தது. வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் செய்தி வாசிப்பாளராக விருப்பம் தெரிவித்து, கடிதம் எழுதினேன்.

நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. செய்தி அறிக்கையைக் கொடுத்து, அதை வாசிக்கச் சொன்னார்கள். குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம், தோற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பார்த்தனர். திறமையின் அடிப்படையில் செய்தி வாசிப்பாளர்களைத் தேர்வு செய்தனர்.

'காமிரா முன்னால் அமர்ந்து செய்தி படிக்கும்போது, பதற்றம் இல்லாமல், சகஜமாக படிக்கிறோமா?' என்று கூட பரிசோதித்தார்கள். நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நாற்பதுக்கும் அதிகமானவர்களில் நான் ஒருவன் மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன்.

நான் பணியாற்றிய அரசுடைமை வங்கியில், நிதியாண்டின் இறுதிக் கட்டத்தில் முதலீட்டு இலக்கை அடைவதற்கு சில கோடி ரூபாய் தேவைப்பட்டது. 'தமிழ்நாடு அரசுடன் பேசி, அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?' என்று வங்கிப் பொதுமேலாளர் என்னிடம் கேட்டார்.

அவருடன் நானும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று அன்றைய நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியனை சந்தித்தோம். இதுகுறித்து சொன்னதும், உடனடியாக எங்கள் வங்கியில் சில கோடி ரூபாயை முதலீடு அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

ஒருமுறை சுதந்திர தினத்தன்று, சென்னை கோட்டையில் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசியதை வாழ்நாளில் மறக்க முடியாது.

நிஜந்தன்

ஆங்கிலப் பத்திரிகையில் பகுதி நேர செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1989-இல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க விண்ணப்பித்து, தேர்வானேன். அந்த ஆண்டில் ஜூலை 29- ஆம் தேதியன்று முதல் நாள் முறையாக செய்தி வாசித்தது உண்மையிலேயே ஒரு சவால்தான்.

'பல லட்சம் பேருக்கு செய்தி சொல்லப் போகிறோம்' என்ற பதற்றமும், 'அமைதியாக இருந்தால்தான் நினைத்ததைச் செய்ய முடியும்' என்ற நிதானமும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த செய்தியை நான் முதன்முதலாக வாசித்தேன். வாசித்து முடிந்ததும் ஏதோ விண்வெளிக்குப் போய் வந்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

அந்தக் காலத்தில் ஒரு தெருவுக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டிதான் இருந்தது என்றாலும் ஊரே தொலைக்காட்சியில் செய்தி பார்த்துவிடும். அந்த அளவுக்கு செய்திகளுக்கு நம்பகத்தன்மை இருந்தது.

பல முக்கியத் தருணங்களில் நான் செய்தி வாசித்திருக்கிறேன். 1989 தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், 1990-இல் மத்தியில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்கள், பிரதமர் மாற்றம், 1991-இல் மத்திய அரசு மாற்றம், தாராள பொருளாதாரக் கொள்கைகள், ஐரோப்பிய நாடுகள் பிரிந்தது, ரஷியாவின் அடிப்படை தகர்ந்தது... என்று பல அம்சங்களை நான் செய்தியாகச் சொல்ல நேர்ந்தது. 1991-இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி வாசித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

தேர்தல் காலத்தில் அப்போது அரசியல்வாதிகளின் காணொளிகளை தூர்தர்ஷன் செய்திகளில் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் தேர்தல் காலத்தில் சுமார் 15 நிமிடங்கள் காணொளிகள் இல்லாமலேயே செய்தி வாசிக்க வேண்டும். கேமரா செய்தி வாசிப்பாளரையே கவனித்துக்கொண்டிருக்கும். நடுவில் தண்ணீர்கூட குடிக்க முடியாது. இறுதியில் உலகச் செய்திகள் வரும்போது மட்டும்தான் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும்.

அந்தக் காலத்தில் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு ஒரு திரைப்பட நட்சத்திரத்துக்கு இணையான புகழ் கிடைத்தது. எங்கு சென்றாலும் ரசிகர்கள் சூழ்ந்துகொள்வார்கள். எக்கச்சக்க கடிதங்கள் வரும். நேரிலேயே அலுவலகத்துக்கே விசிறிகள் வந்துவிடுவார்கள்.

தூர்தர்ஷன் என் ஊடகப் பயணத்தில் மிக முக்கியமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நான் அதற்குப் பிறகு பல தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றியிருக்கிறேன்.

பத்திரிகையாளராக, செய்தி வாசிப்பாளராக என் ஊடகப் பயணம் 36 ஆண்டுகளைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. செய்தித் தொலைக்காட்சிகளில் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.

ஆயிரக்கணக்கான விவாத நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்திருக்கிறேன். பல முக்கியப் பிரமுகர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். இப்போதும் தொடர்ந்து வலைக்காட்சிகளுக்காக நான் நேர்காணல் செய்துகொண்டிருக்கிறேன். சில திரைப்படங்களிலும், இணையத் தொடர்களிலும் நான் இப்போது நடித்து வருகிறேன்.

பாத்திமா பாபு

நாடகத்தில் நடிக்கத் தேர்வுக்காக வந்தபோது, செய்தி வாசிப்பாளராவதற்கான வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். அதற்கும் விண்ணப்பித்து, தேர்வு செய்யப்பட்டேன்.

செந்தமிழரசு

'உழைப்பவர் உலகம்' நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி நிலையம் வந்தபோது, செய்தி வாசிப்பாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். பொது அறிவு, செய்தி வாசிப்புத் திறமை, கேமிரா முன் செய்தி வாசிப்பு என்று மூன்று கட்டத் தேர்வுகளையும் முடித்தேன். சில நாள்கள் கழித்து, நான் செய்தி வாசிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கடிதம் வந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுச் செய்தியைப் படித்தபோது, கண்ணீர் வந்தது.

ஜெயஸ்ரீ சுந்தர்

கல்லூரி நாள்களிலேயே எனக்கு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என மிகுந்த ஆர்வம் உண்டு. முதலில் 'இலக்கியச் சோலை' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகும் வாய்ப்பு வந்தது. நான் முதல் நாள் செய்தி வாசித்தபோது, உடன் வாசித்த இன்னொருவர் நிஜந்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com