பெ.பெரியார்மன்னன்
மாணவர்களின் தோழனான ஆசிரியர் சிவ.எம்கோ, பல்வேறு இயக்கங்களில் செயல்பட்டு இன்றையத் தலைமுறையினருக்கு இலக்கியம், பாரம்பரியக் கலைகளைப் புகட்டி தமிழ் வளர்த்து வருகிறார். முன்மாதிரி ஆசிரியராகத் திகழும் அவர், சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்தவர்.
அரசுப் பள்ளிகளிலேயே படித்த சிவ.எம்கோ, இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும், தமிழில் முதுகலை ஆசிரியர் பட்டமும் பெற்றவர். 25 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் இவர், பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தனது கல்விப் பயணம் குறித்து சிவ.எம்கோ கூறியதாவது:
'அரசுப் பள்ளித் தலைமையாசிரியரான எனது தந்தை சிவலிங்கனார் எனக்கு சிறு வயதிலேயே தமிழ் மொழி, இலக்கியங்கள், பாரம்பரியக் கிராமியக் கலைகள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன்படி, பல்வேறு தன்னார்வ சமூக இயக்கங்களிலும் பங்கேற்று, தமிழ்மொழி, கலைகள், சமூக மேம்பாட்டுக்கும் என்னால் முடிந்த வரையில் பங்காற்றி வருகிறேன்.
தேசிய மாணவர் பசுமைப்படை, இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், பாரத சாரண-சாரணியர் இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைவுகளை பள்ளிகளில் தொடங்கி, மாணவர்களுக்கு நல்லசிந்தனை, படைப்பாற்றல் திறன், உறவுகளைப் போற்றுதல், மனித நேயம், சமூக அக்கறை உள்ளிட்ட நற்பண்புகளையும் கற்பித்து வருகிறேன். இதன்வாயிலாக, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு ஆளுநர் விருதும், 19 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதும் பெற உறுதுணையாக இருந்துள்ளேன்.
திருமலை திருப்பதி, வெங்கடாஜலபதி ஆலயம், உத்தரப் பிரதேச கும்பமேளா, வேளாங்கண்ணி ஆலயம், புட்டபர்த்தி சாயிபாபா கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் சென்று சேவையாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
வாழப்பாடியில் நடைபெறும் கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம்களுக்கும் மாணவர்களுடன் சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். திறமையும், அரவணைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஆசிரியர்களை மாணவர்கள் தோழனைப் போல ஏற்று, பாடத்தைக் கற்றுகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படியே நான் செயல்படுகிறேன்.
புத்தகப் பாடங்களை மட்டுமே புகட்டாமல், சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று, மாணவர் இயக்கங்களைத் தொடங்கி சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும்போது, தனிச் சுகம் கிடைக்கிறது.
எனது தந்தை சிவலிங்கனார் மறைவுக்குப் பின்னர், வாழப்பாடி இலக்கியப்பேரவையின் செயலாளராக பொறுப்பேற்று 25 ஆண்டுகளாக 15 நாள்களுக்கு ஒருமுறை அற இலக்கியங்கள் குறித்து ஆய்வரங்கங்கள், கருத்தரங்கம், பட்டிமன்றம், சுழலரங்களை நடத்தி வருகிறேன். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து தனித்திறன்களை வெளிக்கொணர உதவுகிறேன்.
புதிய படைப்பாளிகளின் நுôல்களை வெளியிடுதல், கிராமியக் கலைகள் அரங்கேற்றம், மாணவர்களுக்கான போட்டிகள், சாதனையாளர்கள் விருதுகள் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறேன். திருவள்ளுவர் தினவிழாவைச் சிறப்பாக நடத்தி திருக்குறளின் பெருமையை சாமானியர்களுக்கும் விளக்கிவருகிறேன்.
நான் பணிபுரியும் பள்ளியில் தமிழ் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் படிப்படியாக அதிகரித்து 100 சதவீதத்தை எட்ட வைத்துள்ளேன்.
எனது மனைவி புஷ்பா, கண்கட்டி ஆலா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவரும் குடும்பத்தினரும் எனது சேவைப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்'' என்கிறார் சிவ.எம்கோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.