வீட்டுக்கொருவர் ஐ.ஏ.எஸ். அலுவலர்!

நாட்டு மக்கள் மீது அக்கறையுடைய இளைஞர்களின் பெருங்கனவு ஐ.ஏ.எஸ். அலுவலராவதாக இருக்கும்.
வீட்டுக்கொருவர் ஐ.ஏ.எஸ். அலுவலர்!
Published on
Updated on
1 min read

நாட்டு மக்கள் மீது அக்கறையுடைய இளைஞர்களின் பெருங்கனவு ஐ.ஏ.எஸ். அலுவலராவதாக இருக்கும். கனவை நனவாக்குவது எளிதல்ல; திடமான மன உறுதி, லட்சியத் தாகம், கடும் உழைப்பு, அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அறிவு, பரந்துபட்ட படிப்பு, நுட்பமான நுண்ணறிவு, இடைவிடாத முயற்சி... போன்ற இயல்புகளும், நல்ல பயிற்சி மையங்கள், வழிகாட்டிகள், நூல்கள், பொருளாதார வசதி போன்றவையும் அவசியமானது.

இதுபோன்ற எந்த பெரிய வசதி வாய்ப்புகளையும் பெற்றிராத 'மாதோபட்டி'யில் உள்ள 75 குடும்பத்தினரில் வீட்டுக்கொருவராவது ஐ.ஏ.எஸ். அலுவலராகியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜோன்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கிராமம் உள்ளது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் வாமிக் ஜோன்பூரி மகன் முஸ்தபா ஹுசேன், 1914-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் முதன்முறையாக இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952-இல் இந்து பிரகாஷ், 1953-இல் வித்யா பிரகாஷ் போன்றவர்கள் ஐ.ஏ.எஸ். அலுவலர்களாக உயர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து, பலரும் ஆட்சிப் பணிக்கும், அரசுத் துறைகளின் உயர்பதவிகளுக்கும் அடியெடுத்து வைக்கத் தொடங்கினர்.

1955-இல் ஐ.ஏ.எஸ். அலுவலரான வினய்குமார் சிங், பிகார் அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அவரது சகோதரர்கள் சத்ரபால்சிங், அஜய்குமார் சிங் இருவரும் 1964-ஆம் ஆண்டிலும், மற்றொரு சகோதரர் சசிகாந்த் சிங் 1968-ஆம் ஆண்டிலும் ஐ.ஏ.எஸ். ஆனார். சசிகாந்த் சிங்கின் மகன் யஷஸ்விசிங் 2002-ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அலுவலர்களாகியுள்ளனர். சத்ரபால் சிங் முதன்மைச் செயலாளராக ஓய்வுபெற்றவர். ஆஷா சிங், உஷா சிங், இந்து சிங், சரிதா சிங் போன்ற பெண்களும் ஐ.ஏ.எஸ். அலுவலர்களாக உயர்ந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் ஐ.ஏ.எஸ், அலுவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டது இந்தக் கிராமத்தைப் பொருத்தவரை இன்றைக்கும் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.

சாத்தியமானது எப்படி?

கல்வி அறிவு இல்லாத கிராமத்தில் சுதந்திரப் போராட்டவீரராக விளங்கிய தாக்கூர் பக்வதி தின்சிங், கிராமப் பெண்களுக்கு கல்வியைப் புகட்டுமாறு தனது மனைவி ஷ்யாம்ரதி சிங்கிடம் அறிவுறுத்தினார். அவரது முயற்சியால், 1917-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது.

ஆண் குழந்தைகளும் ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினர். 22 ஆண்டுகள் கல்வியைப் போதித்து வந்த ஷ்யாம்ரதி சிங் வீட்டில் இருந்து இதுவரை 6 ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் உருவாகியுள்ளனர். கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com