

'வரமாய்க் கிட்டிய வாழ்க்கையை அதற்கேற்பக் கிட்டும் வசதிகளோடு வாழ்ந்து அனுபவித்து நிறைவுபெற்றுவிடவேண்டும்' என்று நினையாமல், எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டித் தியாகங்கள் பல செய்து, குறிக்கோளுடன் வாழ்ந்தவர்களே வரலாற்றை வாழ்விக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் எஸ்.ஆர்.கே. மயிலாடுதுறைக்கும் தரங்கம்பாடிக்கும் அருகில் உள்ள கிள்ளிமங்கலம் என்ற ஊரில், வி.கே.சுந்தரம் - மங்களம் அம்மையார் தம்பதியருக்கு 1921 ஏப்ரல் 2-இல் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் இராமகிருஷ்ணன். எழுத்து, சொல், செயல் அனைத்திலும் தன்னை நிறுத்தித் தமிழுக்கும் தாய்நாட்டுக்கும் பெரும்பணியாற்றிய அவர், 1995 ஜூலை 24-இல் மறைந்தாலும், அவர் புகழ் என்றும் மறையாது நின்று நிலைக்கும்.
விடுதலைப் போராட்ட வீரராகக் களம் இறங்கி, மார்க்சியச் சிந்தனையாளராக மலர்ச்சி பெற்று இதழாளராக எழுச்சியுற்று, எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பேராசிரியர்களின் பேராசிரியராகவும் ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடியாகவும் எஸ்.ஆர்.கே. திகழ்ந்தார். பாரதி போற்றிய தமிழ் இலக்கிய முன்னோடிகளான திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பன் உள்ளிட்டோரை உச்சிமேல் வைத்து மெச்சியதோடு, அவர்கள் குறித்து உன்னத நூல்களை எஸ்.ஆர்.கே. எழுதினார்.
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜினி பாமி தத் எழுதிய 'இந்தியா டுடே' என்ற நூலை 'இன்றைய இந்தியா' என்ற பெயரிலும், ரஷியப் புரட்சிக் காலத்தில் உருவான ஆஸ்தி ரோவ்ஸ்கி எழுதிய 'ஹவ் தி ஸ்டீல் வாஸ் டெம்பர்டு' என்ற நாவலை, 'வீரம் விளைந்தது' என்ற தலைப்பிலும் எஸ்.ஆர்.கே. மொழிபெயர்த்துத் தந்தார். அவர் மேலும் தந்த மொழிபெயர்ப்பு நூல்கள் 'சக்கரவர்த்தி பீட்டர்', 'பள்ளித் தோழன்' ஆகியனவாகும்.
காரைக்குடிக் கம்பன் கழகத்தில் சா.கணேசனின் தூண்டுதலால் பங்கேற்ற எஸ்.ஆர்.கே., தம் நிறைவுக் காலம் வரை அங்கு தொடர்ந்து உரையாற்றியிருக்கிறார். அவர் அங்கு ஆற்றிய உரைகளுள் ஒன்று, 'கம்பனும் மில்டனும்'.
அது நூலாகவும் வெளிவந்தது. அதுவே அவர்தம் ஆய்வுப் பொருளாக அமைந்து, பேராசிரியர் தெ.பொ.மீ.வின் நெறிகாட்டலின்கீழ், முனைவர் பட்டம் பெறும் ஆய்வேடாக உருப்பெற்றது. ஆங்கில ஆய்வேடு பின்னர் தமிழிலும் நூலாக்கம் கண்டது. அது மேலும் கம்பனை ஒப்பாய்வு நோக்கில் தரிசிக்க வைத்தது.
'கம்பனும் மில்டனும் ஒரு புதிய பார்வை', 'கம்பனும் ஷேக்ஸ்பியரும்' ஆகிய நூல்களுடன், 'கம்பன் கண்ட அரசியல்', 'கம்பச் சூத்திரம்' ஆகிய நூல்களையும் தந்த எஸ்.ஆர்.கே. வாலி குறித்து 'சிறியன சிந்தியாதான்' என்ற நூலையும், சீதை குறித்து, 'கற்பின் கனலி' என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அளவில் சிறியதாக இருந்தாலும், அவரது எழுத்தாளுமையை விளக்கும் நூல் 'இளங்கோவின் பாத்திரப்படைப்பு' ஆகும். இவை அனைத்தும் மறுபதிப்பாகத் தொகுத்துச் செம்பதிப்பாக வெளியிட்டிருக்கிறேன்.
இந்த வகையில் இன்னும் மறுபதிப்பாக வெளிவரவேண்டியவை,'வள்ளுவர் கண்ட வாழ்வியல்', 'திருக்குறள் ஒரு சமுதாயப் பார்வை' மற்றும் ' திருக்குறள் ஆய்வுரை' ஆகியன.
அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் தீவிர கவனம் செலுத்திய எஸ்.ஆர்.கே. அதற்கான நெறியில் புனைந்த நூல்கள், 'இந்தியப் பண்பாடும் தமிழரும்', 'சமய வாழ்வில் வடக்கும் தெற்கும்' ஆகியன. விஞ்ஞானம் தொடர்பாக அவர் தந்த நூல்கள், 'உங்கள் உடம்பு', 'நமது உடல்' ஆகியன. 'மார்க்சியப் பொருளாதாரப் பார்வை', 'ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு' அவர்தம் உழைப்பில் உதித்த மார்க்சிய நூல்கள்.
1982-இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டின்போது, உலக சமாதான இயக்கத்தின் சார்பில் உலகெங்கிலும் விழா கொண்டாட எஸ்.ஆர்.கே. முயற்சித்தார். அவர் புதுதில்லியில் 64 நாடுகள் பங்கு கொண்ட சர்வதேச பாரதி நூற்றாண்டு விழாவைத் தலைவர் ரொமேஷ் குப்தாவுடன் இணைந்து அரும்பணியாற்றி, பாரதி குறித்த அரிய ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார்.
சோவியத் யூனியன், பின்லாந்து, பிரான்ஸ், செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரிய நாடுகளுக்கெல்லாம் சென்று அவர் பாரதியாரின் புகழ் பரப்பினார். பிராக், கோபன்ஹேகன் நகரங்களில் நடந்த சர்வதேச சமாதான மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து, கேட்போர் மனத்தில் தம் கருத்தைப் பதிய வைப்பதில் அவருக்கு இணை அவரே ஆவார். மிக வேகமான பேச்சாளராயினும், இரு மொழிகளிலும் வாக்கிய அமைப்பிலோ, இலக்கண வரம்பிலோ ஒரு சிறு தவறும் வராமல் பேசக் கூடியவர்.
'தான், தாம் என்ற ஒருமை, பன்மைச் சொற்களை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவரான எஸ்.ஆர்.கே.வின் பேச்சில் தவறுகூட வந்ததில்லை' என்று அவருடன் கம்பன் அரங்குகளில் களம் இறங்கிய பேராசிரியர் அ.ச.ஞா. கூறி வியக்கிறார்.
'எஸ்.ஆர்.கே.தான், எனது எழுத்தாற்றலை முதலில் கண்டு பிறருக்கும் பிரகடனப்படுத்தியவர். மேம்போக்காகவோ, நுனிப்புல் மேயும் தன்மையிலோ அணுகியதில்லை. அவ்விதம் அணுகிப் பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவோரைச் சகித்துக் கொண்டதும் இல்லை.
வரலாறு, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு பூர்வமாக விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து தமது கருத்துகளைக் கற்றோரும் வியந்து பாராட்டும் வண்ணம் நிலைநிறுத்தும் வலிமை அவருக்கிருந்தது'' என்று அவர்தம் ஆளுமைத் திறத்தை எழுத்தாளர் ஜெயகாந்தன் மதிப்பிட்டுரைக்கிறார்.
நிறைவுக் காலத்தில் 'பார்கின்சன்' நோயால் எஸ்.ஆர்.கே. பாதிக்கப்பட்டபோதும், எழுத்துத் தவத்தை அவர் விடவில்லை. கணினி முன் அமர்ந்து ஒற்றை விரலில் தட்டச்சு செய்து, அவர் எழுதிய ஆக்கங்கள் பல. தினமணி சுடர், சமரன், கல்பனா உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் நூலாக்கம் பெறத் தக்கன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.