கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை

பஞ்சாப் மாநிலம் மோகாவில் 1926-ஆம் ஆண்டில் பிறந்தார் நரிந்தர் சிங் கபானி.
கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை
Updated on
2 min read

பஞ்சாப் மாநிலம் மோகாவில் 1926- ஆம் ஆண்டில் பிறந்தார் நரிந்தர் சிங் கபானி. கல்வியை மதிக்கும் குடும்பத்தில் வளர்ந்தார். அவரது ஆரம்ப கல்வியின் முக்கியமான தருணம் ஒரு வழக்கமான இயற்பியல் வகுப்பின்போது ஏற்பட்டது.

அவரது ஆசிரியர், அறிவியல் புரிதலைப் பின்பற்றி, ஒளி முறையாக நேர்கோட்டில் பயணிக்கும் என்றார். ஆனால், அதை கபானி நம்பவில்லை. சிறுவயதில் அவர் பெட்டி கேமராக்களைக் கொண்டு, பட்டகங்களிலும், வளைந்த மேற்பரப்பு கொண்ட கண்ணாடிகளிலும் ஒளி எப்படிச் செல்கிறது என்பதைக் கவனித்து வந்தார்.

இதனை தொடர்ந்து ஓர் ஊடகத்தின் மூலைப் பகுதியில் ஒளி நேராகச் செல்ல முடியுமா என்று கேள்வி கேட்டு ஆசிரியருக்கு சவால் விடுத்தார். ஆனால் இவரின் அறிவியல் ஆசிரியரோ இவர் வகுப்பிற்கு இடையூறு செய்வதாக எண்ணி, 'நீ தவறாகச் சொல்கிறாய். படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்'' என்று அறிவுரை கூறினார். கபானி இதை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு 'ஒளி வளைந்தும் செல்லும்' என்று நிரூபிக்க நினைத்தார். இந்தத் தேடல் அவர் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் படித்த

போதும், பின்பு சிறிது காலம் இந்திய ஆயுத உற்பத்தியாளர் சேவையில் அதிகாரியாக இருந்தபோதும் தொடர்ந்தது.

1952 - ஆம் ஆண்டு கபானி லண்டனுக்குச் சென்றார். இம்பீரியல் கல்லூரியில் தனது முனைவர் பட்ட ஆய்வை ஒளியியலில் முனைவர் ஹாரால்டு ஹோப்கின்ஸ் வழிகாட்டுதலின் கீழ் துவங்கினார். ஒளி ஊடிச் செல்லும் முறையை ஆய்வு செய்வதில் ஹோப்கின்ஸ் ஆர்வமாக இருந்தார்.

டேனியல் கொல்லாடன் மற்றும் ஜான் டிண்டால் மேற்கொண்ட பரிசோதனைகளால் நீரில் ஒளியைப் பிடிக்க முடியும் என்பதை 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அறிவியல் உலகம் அறிந்திருந்தது. ஆனால், மிகச் சிறந்த தரமான படங்களை நீளமான, நெகிழ்வுமிக்க கண்ணாடி இழைகளின் மூலமாக தூரமாகக் கையாளுவது விஞ்ஞான ரீதியாக இன்னும் கடினமாக இருந்தது. இதற்கு ஒளி, கண்ணாடி இழையின் ஒரு முனை எல்லைப் பகுதியை அடையும் போது ஒளி சிதறி வலிமையும் தெளிவும் குறைந்து போவது முக்கியத் தடையாக இருந்தது.

கண்ணாடி இழையின் மேற்புறத்தில் மாறுபட்ட ஒளி விலகல் எண் கொண்ட ஒரு பொருளை மேற்பூச்சாகப் பூசினால் ஒளியை எதிர்திசைக்கு இழப்பின்றி திருப்பி அனுப்ப முடியும் என்று கபானி அனுமானித்தார். இந்த நிகழ்வு முழுமையான உள்நோக்கிய ஒளி பிரதிபலிப்பு - இங்கும் அங்குமாகச் சென்று வளைவுப்பாதையிலும் வெளியேறாமல் செல்லும் என்பதைக் கண்டறிந்தார்.

இதை கபானியும் ஹோப்கின்ஸூம் புகழ்பெற்ற 'நேச்சர்' இதழில் 1954-ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டனர். இந்தக் கண்டுபிடிப்பு உடனடி அடித்தளத்தை அமைத்தது. அது மருத்துவர்கள் பெரிய அறுவை சிகிச்சை செய்யாமல் மனித உடலுக்குள் பார்க்க உதவிய ஒரு கருவிக்கு வழிகாட்டியது.

கபானி அமெரிக்காவுக்குச் சென்றார். 1960 ஆம் ஆண்டு சயின்டிபிக் அமெரிக்கன் இதழில் அவர் 'ஃபைபர் ஆப்டிக்ஸ்' என்ற சொல்லை முதன்முறையாக உருவாக்கினார். அவர் இனி வெறும் ஆராய்ச்சியாளர் அல்ல; புதிய தொழில்நுட்ப காலத்தின் தொழில்முனைவோர், புரட்சியாளர்.

அவர் 1960 -ஆம் ஆண்டு ஆப்டிக்ஸ் டெக்னாலஜி என்கிற நிறுவனத்தை நிறுவினார். 1967 ஆம் ஆண்டு அதனை பொது நிறுவனமாக மாற்றினார். பின்னர் அவர் 1973 ஆம் ஆண்டு காப்ட்ரான் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். சாண்டா க்ருஸ், யூசி பெர்க்லி, ஸ்டான்ஃபோர்ட் போன்ற முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றினார். தனது வாழ்நாளில், சூர்ய சக்தி சேகரிப்பது முதல் மருத்துவக் கருவிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றார்.

2009 -ஆம் ஆண்டில், இயற்பியலுக்கான நோபல் பரிசு சார்லஸ் கே காவ்வுக்கு வழங்கப்பட்டது. 1960- களில் கே காவின் பணி உண்மையில் நீண்ட தூர தரவு பரிமாற்றத்திற்கு முக்கியமானதாக இருந்தாலும், கபானியின் 1954 ஆம் ஆண்டு வேலைதான் ஊடகம் சாத்தியமானது என்பதை நிரூபித்தது. நோபல் கமிட்டியின் முடிவில் இருந்து கபானியை விலக்கியது அறிவியல் சமூகத்தில் விவாதத்தைத் தூண்டியது. நோபல் பரிசு விடுபட்டது ஏமாற்றமளிக்கிறது என்றாலும், அவரது படைப்புகளை பரவலாகப் பயன்படுத்துவது ஒரு வெகுமதி என்று குறிப்பிட்டார்.

பல பன்னாட்டு விருதுகளை வாழும் காலத்திலேயே பெற்ற கபானிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது அவரது மறைவுக்குப்பின் அறிவிக்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற 'டைம்' இதழில், 1999 -ஆம் ஆண்டு இறுதிப்பதிப்பில் டாக்டர் கபானி 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பத்து அறிவியலாளர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். கபானி 2020 டிசம்பர் 4 அன்று கலிபோர்னியாவில் மறைந்தார். இவரின் அளப்பரிய பணிக்காக 'கண்ணாடியிழை ஒளியியலின் தந்தை'' என்று அழைக்கப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com