'தனியொரு பெண்ணாக இருந்து நானும் சாதித்து, கணவரையும், குழந்தைகளையும் சாதிக்க வைத்துள்ளேன். என்னைச் சார்ந்தவர்களையும் சாதனைகள், சமூகச் சேவைகள் செய்ய உறுதுணையாக இருக்கிறேன். அனைத்துக் குழந்தைகளை ஊக்குவியுங்கள். சரிசமமாக அனைத்தும் கிடைத்திடச் செய்யுங்கள்.
கல்வி ஒன்றே மிகச் சிறந்த ஆயுதம். இன்றைய கல்வி முறையில் ஒழுக்கக் கல்வியைப் பாடப்பகுதியாகச் சேர்த்தால், தவறுகள் குறையவும், மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையில் தவறு செய்யாமல் நல்வழியில் சமூகத்துக்குச் சிறந்த பங்களிப்பை அளிக்கவும் உதவும்'' என்கிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஆசிரியரும், செய்தி வாசிப்பாளருமான நித்யா சிவா.
இவரும், இவரது கணவரும் தனியார் வங்கி மேலாளருமான ப.சிவாவும் கின்னஸ் சாதனைகளைப் படைத்தவர்கள். இவர்களது மகன் அனிஷ், மகள் ஜான்வி ஆகிய இருவரும் விளையாட்டு, சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்துள்ளனர். நான்கு பேரும் கின்னஸ், இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து நித்யா சிவாவிடம் பேசியபோது:
'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட காவேரிப்பட்டணம்தான் எனது சொந்த ஊர். ஆட்சியர் அலுவலக ஊழியராகப் பணிபுரிந்த கோவிந்தராஜ் - தேவிகா தம்பதியின் ஐந்தாவது மகள். என்னை வளர்த்தது எனது சித்தப்பா பத்மநாபன் - மல்லிகா தம்பதியர்தான். இவர்கள் எனக்கு இளம்வயதிலேயே கல்வியோடு மக்களுக்குச் சமூகப் பணியை ஆற்ற வேண்டும் என்று கூறியே வளர்த்தனர்.
கணிதப் பாடத்தில் எம்.எஸ்.சி. , எம்.எட்., எம்.ஃபில். படித்த நான், பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிவருகிறேன். செஞ்சிக்கு அருகேயுள்ள விவசாயி பழனி- பச்சையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த எனது கணவர் சிவா, எம்.எஸ்ஸி. விவசாயம் படித்தவர்.
சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகமுண்டு. எனக்கு நானே தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு சாதனைகளைப் புரியத் தொடங்கினேன். 10 கி.மீ. ஓட்டத்தில் சாதனைகளைப் புரிந்து, சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளேன். விவசாயத் துறையில் சிறந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, எனது கணவர் சிவாவும் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இருவரும் சாதனையாளர்களாக இருப்பதால், எங்கள் குழந்தைகளையும் சாதனையாளர்களாக மாற்ற முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.
வேளச்சேரி டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயிலும் எனது மகன் அனிஷ், ஒன்றாம் வகுப்புப் பயிலும் ஜான்வி ஆகிய இருவரும் தற்போது கராத்தே, ஓட்டம், சிலம்பம், யோகா, விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதோடு, சாதனைப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளனர். இருவரும் கராத்தேயில் ஆரஞ்சு பட்டத்தையும், சிலம்பத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளனர். நாட்டிலேயே இளம்வயதில் இந்தப் பட்டத்தைப் பெற்ற சிறுமி என்ற பெயரை ஜான்வி பெற்றுள்ளார்.
அனிஷ் பத்து கி.மீ. ஓட்டம், கண்ணைக் கட்டிக் கொண்டு சிலம்பம் ஆடுதல், பானை மீது சிலம்பம் ஆடுதல் போன்றவற்றில் சிறந்துள்ளான். இதோடு, மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, 'இளம் விஞ்ஞானி' என்ற விருதை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார்.
உலக நாடுகளின் தேசியக் கொடியை கியூபில் யோகாவில் அமர்ந்தது, கராத்தே, பரதநாட்டியம், யோகா, சிலம்பம், தமிழ் எழுத்துகளை வேகமாகச் சொல்லுதல், குழந்தைகளின் தனித்துவமான திறமை செயல்பாடு, ஏ.பி.சி. ரைம்ஸ் பாடல் வாசிப்பு, எண்களை விரைவாகச் சொல்லுதல், மெய்நிகர் ஓட்டம் உள்ளிட்டவற்றில் சாதனைகளை நிகழ்த்தப்பட்டுள்ளன.
மரக்கன்றுகள் நடுதல், கடற்கரை தூய்மைப் பணி, நெகிழி விழிப்புணர்வு, புற்றுநோயாளிகளுக்காக தங்களது சேமிப்புப் பணத்தில் நிதியுதவி வழங்கியது, போட்டிகளில் பரிசாகப் பெற்ற பணத்தை குழந்தைகளுக்கு உணவுக்காக வழங்கியது உள்ளிட்ட சேவைகளை இருவரும் மேற்கொண்டுள்ளனர்.
இருவரையும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், கோவி.செழியன், மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பாராட்டி, சான்றிதழ்களையும், விருதுகளையும் அளித்துள்ளனர்.
10 ஆண்டுகளாக நான் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வியை நேரிலும், இணையவழியிலும் அளித்து வருகிறேன். சில முறை ரத்த தானம் அளித்துள்ளதோடு, புற்றுநோயாளிகளுக்காகத் தலைமுடியையும் தானம் செய்துள்ளேன். எனது வாழ்நாளுக்குப் பின்னர், நாங்கள் நான்கு பேரும் உடல் உறுப்புகள் தானம், உடல்தானம் செய்வதற்கான உறுதிமொழிக் கடிதத்தையும் அளித்துள்ளேன்.
கரோனா காலத்தில், வாட்ஸ் அப் குழுக்களைத் தொடங்கி, நூற்றுக்கணக்கானோரை கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதை ஊக்குவித்தேன்.
'எது நடந்தாலும் நாங்கள் இருக்கிறோம்' என்று குழந்தைகளோடு தினமும் உரையாடுங்கள். அதிக நேரத்தைக் குழந்தைகளோடு செலவிடுங்கள். ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து எளிமையாக சந்தோஷமான வாழ்க்கை அனைவரும் வாழவேண்டும். நேரத்தைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளுங்கள். சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முன்னேறுங்கள். விடாமுயற்சியும் தினமும் பயிற்சியும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.
திருமணமானவுடன் பெண்கள் வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது. அவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்திக் கொண்டு, சாதனைகளைப் புரியவேண்டும்.
பெண்கள் சிறு பிரச்னைகள் என்றாலும் அச்சப்படும் நிலை உள்ளது. ஏமாந்து போய் சோர்ந்துவிடவும் கூடாது. தாழ்வு மனப்பான்மையை பெண்கள் மறக்க வேண்டும். அவர்களும் சாதனைகள் புரிந்து, சுற்றியுள்ளவர்களையும் சாதனையாளர்களாக, சாதிப்பவர்களாக மாற்றும் வகையில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்'' என்கிறார் நித்யா சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.