சமீப வரவுகளில் ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற படம் கிறிஸ்டினா கதிர்வேலன். கடந்த சில வாரங்களுக்கு முன் திரையில் வெளியான இப்படம், இப்போது ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர்
ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கெளஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் பேசுகையில், 'வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது... இன்னும் இன்ன பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவாக்கத்தில் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி, கல்லூரி எனக் காதல் வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு.
ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறிய வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது போல முகத்தால், குரல்களால், செயல்களால், சாயல்களால்தான் நம்பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.
காதல் என்கிற அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இது கூட சென்டிமென்ட் சினிமாவுக்கான வார்த்தையாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால் இதுகூட சென்டிமென்ட்தான். இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது.
மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலைச் சொல்லலாம். சொல்லாமல்கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. உணர்கிற விஷயம் எனச் சொல்லியிருக்கிறேன். ரசிகர்களின் ஆதரவு வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.