திரைக் கதிர்

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்கப்போவதை உறுதி செய்திருக்கிறார்.
திரைக் கதிர்
Updated on
2 min read

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்கப்போவதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய படங்களில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், 'என்னுடைய அடுத்தப் படத்தில் மம்மூட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர், 2016-ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் சொந்தமாகவே தயாரிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கவிருக்கிறாராம்.

ரசிகரின் திருமணத்துக்கு விடியோ காலில் வாழ்த்துத் தெரிவித்த நடிகர் சூர்யாவின் விடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்ற சேலம் வடக்கு மாவட்டத் தலைவர் நந்தாவின் திருமணத்துக்கு விடியோ காலில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் சூர்யா.

இதுதொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, 'உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில் நிரந்தரமாக இருக்கட்டும்'' என வாழ்த்தியிருக்கிறார்.

சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்தியப் பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தை பேட்டி கண்டிருந்தார். அந்தப் பேட்டிக்குப் பின் பேசிய அனுபமா, 'சமீபத்தில் துபையில் நான் அஜித்தை பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார். ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை.

ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார். சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார். பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்'' என ஆச்சரியமாகக் கூறினார். அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com