அக்கா... அன்புள்ள அக்கா...

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமாகி, நாட்டிய நட்சத்திரமாக ஜொலித்தவர் குமாரி கமலா.
அக்கா...  அன்புள்ள அக்கா...
Updated on
2 min read

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமாகி, நாட்டிய நட்சத்திரமாக ஜொலித்தவர் குமாரி கமலா. மயிலாடுதுறையே இவரது பூர்விகம். நான்கு வயதில் பேபி கமலாவாக 'வாலிபர் சங்கம்' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழிலும், 'ஜெயிலர்' படத்தின் மூலமாக ஹிந்தியிலும் அறிமுகமானவர். 'நாம் இருவர்' படத்தில் இவர் தனது நடனத்தின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

'வழுவூர் ராமையா பிள்ளையிடம் கமலா பரதநாட்டியம் கற்கவேண்டும்' என்பதற்காகவே அவரது அம்மா தனது குடும்பத்தோடு மும்பையில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

மத்திய அரசின் 'பத்மபூஷண்' விருது பெற்ற இவர், 1980-இல் அமெரிக்காவுக்குச் சென்று நாட்டியப் பள்ளியை ஆரம்பித்தார். கலிஃபோர்னியாவில் வசித்து வந்த அவர் தனது 91-ஆவது வயதில் அண்மையில் மறைந்தார். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வசிக்கும் அவரது தங்கை ராதா தனது அக்கா கமலா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்:

'நான்கு வயதில் இருந்தே திரைத் துறையில் அக்கா கமலா நடிக்க ஆரம்பித்துவிட்டார். பின்னர் பரத நாட்டியம் கற்றதாலும், பள்ளிக்குச் செல்லவில்லை.

வீட்டுக்கே வந்து படிப்பு சொல்லிக் கொடுக்க அம்மா ஆசிரியர்களை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், நானும், என் தங்கை வசந்தியும் பள்ளிக்குச் சென்றோம்.

கமலாவுக்கும் எனக்கும் எட்டு வயது வித்தியாசம் என்றாலும், நெருங்கிய சிநேகிதிகளாகப் பழகினோம். பள்ளியில் இருந்து நான் வரும்போதே அவர் எனக்கு நாட்டிய வகுப்பு எடுக்கத் தயாராக இருப்பார். வகுப்பில் தப்பித் தவறி நான் ஏதாவது தவறாகச் செய்துவிட்டால், அவ்வளவுதான். தன் விரல்களால் என் தொடையில் அழுத்தமாகக் கிள்ளிவிடுவார். எனக்கு வலி தாங்க முடியாது.

அக்கா கமலா, தங்கை வசந்தியோடு என்னையும் அம்மா நிறைய கச்சேரிகள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள், நாடகங்களுக்கு அழைத்துச் செல்வார்.

வித்வான் ராமநாதபுரம் கிருஷ்ணனிடம் அக்கா பாட்டு கற்றார். ஓரளவுக்கு தனிக்கச்சேரிகளும் அவர் செய்திருக்கிறார். ஆனால், திரைத்துறையிலும், பரதநாட்டியத்திலும் அவர் பிஸியாக இருந்ததால், வாய்பாட்டுக் கச்சேரிகளுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகளின்போது அவர் பாட்டுப் பாடியது உண்டு. எனக்குப் பின்னர் என் தங்கை வசந்தியும் நடனம் கற்றார். மூவரும் சேர்ந்து திருவாசகம் நாட்டிய நாடகத்தில் நடித்திருக்கிறோம்.

நாங்கள் இருவருமாக ஐரோப்பாவின் பல நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். மேற்கு ஜெர்மனியில் நிகழ்ச்சிகளை நடத்தியபோது, ஏராளமான ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வந்திருந்தார்கள்.

கிழக்கு ஜெர்மனியில் பெரும்பாலான மக்கள் முகங்களில் சோகமே இருந்தது. நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் பேசியபோது, 'கிழக்கு ஜெர்மனியில் உள்ள குடும்பங்களின் உறுப்பினர்கள் பலர் மேற்கு ஜெர்மனியில் இருப்பதாகவும், அவர்களைச் சென்று பார்க்க இவர்களுக்கு வழி இல்லை' என்றும் கூறினர்.

மேற்கு ஜெர்மனியில் இருந்தபோது, இந்திய மாணவர்கள் பலரையும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைத்தோம். எங்கள் அம்மா அங்கே கிடைக்கும் காய்கறிகளை வைத்து, உணவுகளைத் தயாரித்து அளித்தார். அவர்கள் சாப்பிட்டுவிட்டு, எங்கள் அம்மாவை 'ருசி ராணி' என்று புகழ்ந்தனர்.

ஹாலந்து நாட்டில் பாலாடைக் கட்டிகளை ரசிகர்கள் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். ஆனால், ஊருக்குப் புறப்படும்போது, விமானத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடை இருக்கக் கூடாது என்பதால், அவற்றை நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் கொடுத்தோம். அவை எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை.

ரஷியாவுக்குச் சென்றிருந்தபோது, விண்வெளி வீரர் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருந்தார். அவரை ஒரு மாபெரும் ஹீரோவாக அவர்கள் கொண்டாடியதைப் பார்த்து வியந்தோம். 'ரஷ்யன் சர்க்கஸ்' நிகழ்ச்சியில், சாகசக் கலைஞர்கள் அந்தரத்தில் ஆபத்தான சாகசங்களை வெகு சகஜமாக செய்து காட்டியதைப் பார்த்து மலைத்துப் போனோம்.

பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்த்தபோது, ஆங்காங்கே தெருக்களில் பல ஓவியர்களைப் பார்த்தோம். எங்களை அங்கேயே நிற்கவைத்து, படமாக வரைந்து கொடுத்துவிட்டார்கள்.

ஐரோப்பியப் பயணத்தின்போது பல நாடுகளிலும் அந்தந்த நாடுகளுக்கே உரிய நடனமான பாலே நடன நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தோம். ஜெர்மனியில் ஒரு ரயில் நிலையத்தில் எங்களுடைய பைகளை டிராலியில் ஏற்றி, நாங்களே தள்ளிக் கொண்டு பிளாட்பாரத்தில் நடந்தோம்.

எதிர்பாராதவிதமாக டிராலியில் இருந்த சில பொருள்கள் தண்டவாளப் பகுதியில் சரிந்துவிட்டது. நாங்கள் உதவி கேட்டும் உதவ யாரும் முன்வரவில்லை. நாங்களே ரயில் பாதையில் இறங்கி எல்லாவற்றையும் மறுபடியும் டிராலியில் ஏற்றிக் கொண்டு வெளியில் வந்தோம்.

ஒருமுறை கோனேரிராஜபுரத்தில் ஒரு பிரமுகர் வீட்டுக் கல்யாணத்துக்கு எங்களை நாட்டிய நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார்கள். கிராமத்தில் வயல்வெளியில் மேடையை அமைத்து, அதில்தான் கச்சேரி, நடனம். இரவு நேரத்தில் அங்கே நடனமாடியபோது, ஏராளமான பூச்சிகள் வட்டமிட்டன.

கமலாவை ஒரு பூச்சி கடித்துவிட, தோல் தடித்துவிட்டது. என் உடைக்குள்ளேயும் ஒரு பூச்சி போய்விட்டது. நாங்கள் நாட்டியமாடிக்கொண்டே, உடையில் அந்தப் பூச்சி இருக்கும் இடத்தில் விரலை வைத்து அழுத்தி, அந்தப் பூச்சியை நசுக்கியது எனக்கு மறக்கவே மறக்காது. இதைவிட ஒரு சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? மணமகனுக்கு 10 வயது. மணப்பெண்ணுக்கு எட்டு வயது'' என்கிறார் ராதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com