இசை ஸ்வீகரித்தால் மட்டுமே இசைக் கலைஞராக முடியும்...

'இசைக் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, இசை கற்றதாலோ மட்டும் ஒருவர் இசைக் கலைஞர் ஆகிவிடுவார் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.
இசை ஸ்வீகரித்தால் மட்டுமே இசைக் கலைஞராக முடியும்...
Updated on
3 min read

எம். பாரதி

'இசைக் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, இசை கற்றதாலோ மட்டும் ஒருவர் இசைக் கலைஞர் ஆகிவிடுவார் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. இசை ஒருவரை ஸ்வீகரித்தால் மட்டுமே ஒருவரால் இசைக் கலைஞராக முடியும்'' என்கிறார் வயலின் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம் குமார்.

சென்னையில் இந்த ஆண்டு இசை விழா களை கட்டிய நிலையில், கர்நாடக இசையை ஆதரிப்பதில் முன்னோடியாக விளங்கும் 'சங்கீத வித்வத் சபை' என்ற மியூசிக் அகாதெமியின் 99-ஆவது ஆண்டு இசை விழாவை 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கிவைக்க உள்ளார்.

அகாதெமியின் 'சங்கீத கலாநிதி' எனும் விருதைப் பெறும் ஆர்.கே. ஸ்ரீராம் குமாரின் சிறப்புத் தன்மையே கர்நாடக இசையின் மரபையும், மென்மையையும் ஒரே நுனியில் இணைத்து, வயலின் வழியாக வண்ணக் கோலங்கள் படைப்பதுதான்.

சென்னை தி.நகரில் வள்ளுவர் கோட்டத்துக்கு அருகே வசித்துவரும் ஆர்.கே. ஸ்ரீராம் குமாருடன் பேசியபோது:

'எங்கள் குடும்பமே இசைக் குடும்பம்தான். எங்களுக்குப் பூர்விகம் கர்நாடக மாநிலத்தில் காவிரிக் கரையில் உள்ள அழகான சிற்றூரான ருத்ரபட்டினம். எங்கள் கொள்ளுத்தாத்தா ஹரிகதை வித்வான். தாத்தா ஆர்.கே. வெங்கடராம சாஸ்திரியோ வயலின் நிபுணர். சிறிய தாத்தாக்கள் ஆர்.கே.நாராயணசாமி, ஆர்.கே.ராமநாதன், ஆர்.கே.ஸ்ரீகாந்தன் ஆகியோரும் வித்வான்கள்தான்.

ஆர்.எஸ். ராமகாந்த், ருத்ரப் பட்டினம் சகோதரர்கள் என அழைக்கப்பட்ட ஆர்.என்.தியாகராஜன், ஆர்.என்.தாரநாதன் ஆகியோர் என்னுடைய மாமாக்கள். எனது அத்தைகள் ரத்னமாலா பிரகாஷ், ஆர்.என்.ஸ்ரீலதா இருவரும் இசைக்கலைஞர்கள்தான்.

எங்கள் வீட்டில் எப்போதும் சங்கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னையும் சிறு வயதிலிருந்தே கச்சேரிகளுக்கு அழைத்துக் கொண்டு போவார்கள். எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த சரஸ்வதி சத்யமூர்த்தியிடம்தான் ஆரம்பத்தில் வயலின் பாடங்களைக் கற்றேன். பின்னர், தாத்தாவிடம் வாய்பாட்டு, வயலின் இரண்டுமே கற்றேன்.

அதன் பிறகு டி.கே.ஜெயராமனிடமும், டி.கே.பட்டம்மாளிடமும் பாட்டு, வி.வி.சுப்ரமணியத்திடம் வயலின் கற்றேன்.

நான் படித்த பத்மா சேஷாத்ரி பள்ளியில் இருந்து மாலையில் எனது தாத்தா வீட்டுக்கு நடக்க வைத்தே அழைத்து வருவார். அப்போது ராமாயணம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றில் இருந்து ஸ்லோகங்களைச் சொல்லி, விளக்கிக் கொண்டே வருவார். வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் எனக்குச் சாப்பிட எதாவது தரச்சொல்லி, அதை நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் வயலினுடன் பாடம் சொல்லிக் கொடுக்கத் தயாராகிவிடுவார்.

'சாஹித்யமும், சங்கீதமும் சேர்ந்தால்தான் ஒரு கலைஞரால் இசையில் பரிணமிக்க முடியும்' என்பது அவரது அழுத்தமான கருத்து. அவர் டைகர் வரதாச்சாரி, செம்பை வைத்யநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், அரியங்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் உள்ளிட்ட மூத்த வித்வான்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்.

'சங்கீத மும்மூர்த்திகள்' என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூன்று பேருடைய பரம்பரையில் வந்த சிஷ்யர்கள், வழிவந்தவர்களிடம் இசையைக் கற்றேன்.

நான் சிறு வயது முதலே இசை கற்றாலும் முழு நேர இசைக் கலைஞராவதை எனது வாழ்க்கை லட்சியமாகக் கொள்ளவில்லை. பள்ளிக்கல்விக்குப் பின்னர், விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்ஸி. கணிதம் பயின்றேன். எம்.எஸ்சி கணிதத்திலும் சேர்ந்து, படிப்பை முடிக்காமல் வயலின் கலைஞராகிவிட்டேன். ஒரு விஷயத்துக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்துவிட்டால், அது நாம் எங்கு செல்லவேண்டுமோ அங்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும் என்பது என் நம்பிக்கை.

பள்ளியில் விஜய் சிவா எனக்கு ஒரு வருடம் ஜூனியர். அவர் கச்சேரிகள் செய்துகொண்டிருந்தார். பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் அவர் ஒருநாள் திடீரென்று என் வீட்டுக்கு வந்து, தன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வயலின் வாசிக்க வேண்டும் என்று சொன்னபோது நான் மிரண்டேன். ஆனால் அவர் விடவில்லை. எனக்கு தைரியமும், ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி, என்னைத் தயார் செய்தார். அவரோடு சேர்ந்து ஒத்திகைப் பார்த்தேன். 1981-இல் சங்கர ஜெயந்திக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விஜய் சிவா கச்சேரி மூலமாக எனது அரங்கேற்றம் நிகழ்ந்தது.

இன்னொரு முறை திடீரென்று ஒரு நாள் என் குருநாதர் டி.கே.ஜெயராமனும் தனது கச்சேரிக்கு என்னை வாசிக்கச் சொல்லி, இன்ப அதிர்ச்சியளித்தார்.

எம்.எஸ்.அம்மா, டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி, கே.வி. நாராயணசாமி, டி.என்.கிருஷ்ணன், பிருந்தா, முக்தா உள்ளிட்ட மூத்த கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்து, அவர்களின் வாயிலாக இசையின் நுட்பங்களைக் கற்றேன்.

எம்.எஸ்.அம்மாவுக்கும், எனக்கும் சுமார் ஐம்பது வயது வித்தியாசம். கச்சேரியின் இடையில் எம்.எஸ்.அம்மா அருகில் உட்கார்ந்து பக்கவாத்தியம் வாசிக்கும் என்னை ஒரு பார்வை பார்க்கிறார் என்றால், அதிலே ஒரு முக்கியமான செய்தி இருக்கும்.

அது நான் அற்புதமாக வாசித்ததற்கான பாராட்டாகவும் இருக்கலாம். நான் செய்த மிகச் சிறிய தவறை நுணுக்கமாகக் கவனித்துவிட்டார் என்பதாகவும் இருக்கலாம். நான் ரேடியோவில் கச்சேரி செய்தால்கூட எம்.எஸ்.அம்மா அதைக் கேட்டுவிட்டு, தன் கருத்தைத் தெரிவிப்பார்.

செம்மங்குடி தனது 93-ஆம் வயதில் புதிதாக ஒரு கீர்த்தனை கற்றுக்கொண்டு எனக்குச் சொல்லிக் கொடுத்தார். பட்டம்மாளும் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடக்கூடியது இல்லை.

கர்நாடக இசைக்கும் இளைய தலைமுறையினருக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதைக் கவனித்து, 1985-இல் விஜய் சிவா, செளம்யா, சஞ்சய் சுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, நான் ஏல்லோருமாகச் சேர்ந்து ஒய்.ஏ.சி.எம். என்ற அமைப்பைத் துவக்கினோம்.

அதன் மூலமாக இளம் இசைக் கலைஞர்களுக்கான ஒரு தளமாக அதைப் பயன்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு கர்நாடக இசை மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்தோம். அடுத்தடுத்து வந்த இளம் தலைமுறை இசைக் கலைஞர்கள் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர்.

'சங்கீத கலாநிதி' விருது என்பது வெறும் பட்டமல்ல. உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட கர்நாடக இசை மரபின் கெளரவம்'' என்கிறார் ஆர்.கே. ஸ்ரீராம்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com