கடாரம் கொண்டான் ராஜேந்திரசோழனுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், கம்போடியாவில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி கடாரம் கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழாவை இருநாள் மாநாடாக நடத்தினர்.
தென் கிழக்கு ஆசியப் பல்கலைக்கழகமும், அங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து சியாம் ரீப் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்திய இந்த மாநாட்டுக்கான பணிகளை அங்கோர் தமிழ்ச்சங்கத் தலைவர் சீனிவாச ராவ், செயலர் சீ. தாமரை, துணைத் தலைவர் ஆர். ஞானசேகரன் ஆகியோர் முன்னின்று மேற்கொண்டனர்.
மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த நந்தவனம் சந்திரசேகரனிடம் பேசியபோது:
'கங்கைகொண்டசோழபுரமும், தஞ்சைப் பெரிய கோயிலும் சோழ மன்னர்களின் அடையாளமாக இன்றும் கம்பீரமாகத் திகழ்கின்றன. அவர் மலேசியா நாட்டில் உள்ள கடா மாநிலத்தின் பூஜாங் பள்ளத்தாக்கை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வென்றதன் வெற்றிக் கொண்டாட்டத்தை கம்போடியா நாட்டில் நடத்தியிருப்பது சாலச் சிறந்தது. சென்ற இடமெல்லாம் புலிக்கொடியை நாட்டிய பெருமைக்குச் சொந்தமானவருக்கு கம்போடியாவில் கௌரவம் சேர்க்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கம்போடியா சிறப்பு மலரின் முதல் பிரதியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க. சோ. கண்ணன் வெளியிட, அங்கோர் தமிழ்ச்சங்கத் தலைவர் சீனிவாச ராவ் பெற்றுக்கொண்டார். கம்போடியா சுற்றுலாத் துறை இணை அமைச்சர் குச் பன்ஹாசா, தென் கிழக்கு ஆசியப் பல்கலைக் கழகத் தலைவர் மியன் சோதி, திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர். ஈஸ்வரன், உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞான
மூர்த்தி, மலேசியா முன்னாள் அமைச்சர் டத்தோ சுப்பிரமணியம், தொல்லியல் ஆய்வாளர் தெய்வநாயகம், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
முதல்நாள் நிகழ்வில், ராஜேந்திர சோழனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட 2 பாடல்கள் படக்காட்சிகளுடன் வெளியிடப்பட்டது. சோழ சாம்ராஜ்ஜிய வரலாறு, ராஜேந்திர சோழனின் கடல்பயணம், வீரம், போர் வெற்றிகள், சாதனைகள், சோழர்களின் கட்டடக் கலை உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளுடன் கூடிய ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
இரண்டாம் நாள் நிகழ்வில் மகளிருக்கென பிரத்யேக ஆய்வரங்கம் நடைபெற்றது. பெண் தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துப் பேசினர்.
கங்கைக் கரையில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும், கடல் கடந்து பல வெற்றிகளைக் குவித்த ராஜேந்திர சோழனின் பெயரை கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (இ.சி.ஆர்.) சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன' என்கிறார் நந்தவனம் சந்திரசேகரன்.
மாநாட்டில் பங்கேற்ற பொறியாளரும், எழுத்தாளருமான ப. நரசிம்மன் கூறியது:
'வரலாற்று நோக்கில் பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அரசாண்டு சிறப்பு சேர்த்துள்ளனர். அண்டை நாடுகளுடன் நட்புறவு பாராட்டியும் மக்களோடு கலந்து தங்களது கலை, சிற்பம், கோயில், பண்பாடு ஆகியவற்றை நிறுவியும் பெரும் பண்பாட்டுப் புரட்சியும், வணிகத் தொடர்பும் செய்துள்ளனர்.
கம்போடியாவில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்திய மாநாட்டில் கம்போடியா, மலேசியா நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளும், அரசு நிர்வாகத்தினரும் பங்கேற்றனர். இந்த மாநாடு உலக அரங்கில் தமிழர்களின் வரலாறு, வீரம், பண்பாட்டை மீண்டும் ஒருமுறை உரக்கப் பறைசாற்றியுள்ளது' என்கிறார் நரசிம்மன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.