தந்தையின் கடுமையான உழைப்பைப் போற்றி, காலத்துக்கும் நினைவாக நிறுத்தும் வகையில், அழகிய மணிமண்டபத்தைக் கட்டியுள்ளார் மகன்.
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி என்ற குக்கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 10-இல் பிறந்தவர் சீனு சின்னப்பா. 'தேங்காய் பன்' தயாரித்து சைக்கிளின் பின்னால் மரப்பெட்டியில் வைத்துக் கொண்டு வீதி வீதியாக விற்பனை செய்தவர் சின்னப்பா (இந்தப் பெட்டி இன்னமும் அவரது உழைப்பின் நினைவாக மார்த்தாண்டபுரம் பேக்கரியில் வைக்கப்பட்டுள்ளது!).
இவர் காரைக்குடி வரை நகர்ந்து வந்து 'கமலா பேக்கரி', 'எஸ்.எஸ்.எஸ். பேக்கரி' உள்ளிட்ட கடைகளை நடத்திவிட்டு முதன்முதலாக புதுக்கோட்டை பர்ஜிமியான் பஜாரில் 1983-இல் 'பேக்கரி மஹராஜ்' என்ற பெயரில் கடையைத் தொடங்கினார். அப்போதைய அமைச்சர் சு. திருநாவுக்கரசர் இந்தக் கடையைத் திறந்து வைத்தார். படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனமானது 20 கிளைகளுடன் இயங்கி வருகிறது. சுமார் 400 பேர் பணியாற்றி வருகின்றனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பின் சேர்மன், வர்த்தகர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர், திருக்குறள் கழகப் புரவலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த சீனு சின்னப்பா, பொதுநல அமைப்புகள், இலக்கிய அமைப்புகளுக்கு 'கொடைவள்ளல்'. குன்றக்குடி அடிகளாரின் தீவிர பக்தராகவும் செயல்பட்ட சீனு சின்னப்பாவுக்கு, 'அறமனச் செம்மல்' என்ற பட்டத்தையும் அவர் வழங்கியுள்ளார்.
பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதில் தொடங்கி, வாரிசுகளின் படிப்புச் செலவு, திருமணச் செலவு வரை கவனமாகப் பார்த்துக் கொண்டவர், தனது 69-ஆவது வயதில் 2022, மே 1-இல் தொழிலாளர் தினத்தில் காலமானார்.
சீனு சின்னப்பாவின் மகன் அருண் சின்னப்பா, தந்தையின் பேக்கரி தொழிலைத் தொடர்கிறார் என்பதுடன், தந்தையின் கடுமையான உழைப்பைப் போற்றும் வகையில், புதுக்கோட்டை அருகே பெருங்கொண்டான்விடுதியில் அழகிய மணி மண்டபம் ஒன்றைக் கட்டி வைத்திருக்கிறார்.
காலத்துக்கும் புகழ்பாடும் மணிமண்டபம் குறித்து அருண் சின்னப்பா கூறியது:
'அப்பாவின் ஒரே பால்ய நண்பர் பாலுவிடம், 'என்னை வாழ வைத்த புதுக்கோட்டையிலேயே எனது உடலை அடக்கம் செய்ய விரும்பு
கிறேன்' எனப் பேச்சுவாக்கில் சொல்லி வைத்திருக்கிறார். அதன்படி, தஞ்சை சாலை பெருங்கொண்டான்விடுதி கிராமத்திலுள்ள தோட்டத்து இல்ல வளாகத்தில் இறுதிச்சடங்குகளை நடத்தினோம்.
மறுநாள் ரமலானையும் பொருட்படுத்தாது, அவரது உடல் நகரை விட்டு பெருங்கொண்டான்விடுதி செல்லும் வரை வணிகர்கள் தங்களின் கடைகளை முழுமையாக அடைத்திருந்தார்கள். வள்ளலாரின் சன்மார்க்க முறைப்படி சடங்குகள் நடைபெற்றன.
திண்டுக்கல்லைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் மூலம் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. வெறுமனே எனது அப்பாவுக்காக இதனைக் கட்டவில்லை. அவரது உழைப்பைப் போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு கட்டமைப்பு. 120 அடி சுற்றளவில் வட்ட
வடிவிலான இந்த மண்டபக் கட்டுமானம் அரேபிய வடிவிலானது. உள்ளே, 6.3 அடி உயரச் சிலையும் வைத்திருக்கிறோம்.
அப்பா உயிருடன் இருந்தபோது வீட்டுக்கு வரும் அனைவரையும் விருந்தோம்பல் செய்வார். இப்போது பெருங்கொண்டான்விடுதியில் அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாள், நினைவு நாளின் போதும் இங்கே நிகழ்ச்சி நடைபெறுகின்றன. அவரது விருப்பப்படியே இன்னமும் நண்பர்கள், உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டு உணவருந்திச் செல்கிறார்கள்' என்கிறார் அருண் சின்னப்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.