பொ.ஜெயச்சந்திரன்
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்றிலும் அசத்தி வருகிறார் பள்ளி மாணவி கயா குமார். அதைவிட அணிக்கு 'கேப்டன்' என்ற அடையாளத்தையும் உருவாக்கி உள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'என் பெற்றோரின் பூர்விகம் சென்னை ஆழ்வார்பேட்டை. எனது அப்பா ராஜேஷ்குமார், தொழில்நுட்ப வல்லுநர். அம்மா ஆர்த்தி தனியார் நிறுவன மேலாளர். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில்தான்.
எனக்கு மூன்று வயதாகும்போது, எனது அண்ணன் கிரிக்கெட் விளையாட என்னை அழைத்துச் சென்றார். விடுமுறை நாள்களில் பந்தும், பேட்டும்தான் கையில் இருக்கும்.
நல்ல சத்தான உணவுகளையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டேன். அடுத்த சில ஆண்டுகளிலேயே முக்கிய மைதானங்களில் சென்று விளையாடத் தயாரானேன்.
மாவட்ட அளவில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்தேன். இதுவே என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.
பதிமூன்று வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நியு சௌத் வேல்ஸ் மாகாணத்தின் 'சிறந்த பேட்ஸ்மேன்', 'சிறந்த ஆல்ரவுண்டர்' என்ற விருதை 11-ஆம் வயதிலேயே பெற்றேன். ஜூனியர் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களாக, 9 போட்டிகளில் 399 ரன்களை குவித்துள்ளேன். 7 விக்கெட்டுகளை வீழ்த்தியும், 9 கேட்சுகளை பிடித்தும் இருக்கிறேன். அந்தப் போட்டிகளில் துணை கேப்டனாக இருந்தேன்.
யு-12 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகவும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனையாகவும் இருந்தேன். 15 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக ஆயிரம் ரன்களை அடித்துள்ளேன். 61விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறேன்.
2024-25-ஆம் ஆண்டு கிளப், மாகாண முதல்தரப் போட்டிகள் என 57 போட்டிகளில் கலந்துகொண்டேன். இதில் 44 இன்னிங்ஸ் ஆடி, 1,617 ரன்களை குவித்தேன். இதில் 164, 153, 150, 106 என நான்கு சதங்களும், 8 அரை சதமும் அடங்கும். குறிப்பாக, அந்தத் தொடரில் 17ஆட்டங்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தேன். இடக்கை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளேள்.
எனது சிறப்பான பந்து வீச்சு 6 ஓவர்களில் வீசி, 6 ரன்கள் விட்டுக் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறேன். 2024-ஆம் ஆண்டு அடிலெய்ட்- டில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையை வேல்வதற்கு பெரிய அளவில் பங்காற்றினேன். நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பி.எஸ்.எஸ்.ஏ. அணியின் முன்னாள் துணை கேப்டன், கேப்டனாக இருந்தேன். தற்போது 15 வயதுக்கு உள்பட்டோருக்கான நியூ சௌத் வேல்ஸ் பெண்கள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளேன்.
2025-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையவுள்ள ப்ரீவெர் கோப்பைக்கான தொடர் கிரிக்கெட்டில், டிசம்பர் 8-ஆம் தேதி வரை 7ஆட்டங்களில் 285 ரன்கள், 11விக்கெட், 7 கேட்சுகளை பிடித்துள்ளேன். இதுவரைக்கும் இந்த ஆல் ரவுண்டர் என்ற அடிப்படையில் 2-ஆவது இடத்தில் உள்ளேன்.
2026- ஆம் ஆண்டு பிப்ரவரியில் பெர்த்தில் நடைபெறவுள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய முக்கிய வீராங்கனைகளைச் சந்தித்து ஆசியும் பெற்றுள்ளேன். அவர்களும் என்னை ஊக்குவித்துள்ளனர்' என்கிறார் கயா குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.