

அபூர்வன்
ஆரோக்கியமானவர்கள் செய்யும் சாதனையைவிட உடல் சவால் நிறைந்தவர்கள் செய்யும் சாதனை பல மடங்கு மதிப்பிற்குரியது. அவர்கள் ஓடக்கூடியது தடை தாண்டி ஓடும் ஓட்டம். அப்படி 100% பார்வை சவால் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் கொண்ட ஜோதி ஜீவித்திருப்பதே பெரிய சாதனை என்கிறபோது, அதைக் கடந்து அவர் செய்யும் சாதனை ஆச்சரியமூட்டுகிறது.
தாயார் கலைச்செல்வி தன் மகள் ஜோதி குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டது...
'எனது மகள் பிறந்தபோது கண்கள் இருக்கும் இடத்தில் வெறும் சதைக்குழிதான் இருந்தது. பார்வை வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். இதனால் குடும்பத்தில் பெரிய நெருக்கடி உருவானது. கணவர் பிரிந்துவிட்டார். உறவுகள் விலகின. ஆதரிக்க யாருமில்லை. எனக்கு ஆதரவாக என் தந்தைதான் இருந்தார். இந்தக் குழந்தையை எப்படியாவது வாழவைத்துவிட வேண்டும் என்று நான் போராடினேன். பார்வைக் குறைபாட்டுடன் மனவளர்ச்சியும் குறைவாக இருந்தது. ஆட்டிசத்தின் கூறுகளும் இருந்தன. சோதித்துப் பார்த்தபோது மருத்துவர்கள் பலவகைச் சவால்கள் இருப்பதாகக் கூறினர். பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை.
இருட்டைத் தவிர எதுவும் தெரியாத உணர்விலிருந்த எனக்கு ஒரு சிறு வெளிச்சக் கீற்று கிடைத்தது. அவள் இசையை ரசிக்கிறாள் என்ற ஒன்றுதான் அது. அதற்குள் அவளை கொண்டு வர நினைத்தேன். போராடி இசைக் கல்லூரியில் சேர்த்தேன். அவள் இசையில் முதுகலை முடித்தாள். அவள் நடத்தையில் மாற்றத்துக்கு எனது உதிரத்தையும் சிந்தி உழைத்தேன்.
இன்று 1330 குறளையும் இசையோடு பாடக்கூடியவள். பாரதியார் பாடல்களை அப்படியே பாடுவாள். இன்று பல இசைக்கருவிகளை வாசிக்கிறாள். இசையைச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறாள். இந்திய குடியரசுத் தலைவரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான விருது வாங்கியிருக்கிறாள். அமெரிக்கா, ஸ்காட்லாந்து, மலேசியா, ஓமன், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று பாடி இருக்கிறாள்' என்று தன்மகள் ஜோதியைப் பெருமையோடு அறிுகம் செய்கிறார் இந்தப் போராளித் தாய்.
ஜோதி, தன்னைப் பற்றி பேசும்போது...
'நான் பாட ஆரம்பித்ததுமே எனக்குப் பிடித்த பாடல் 'பாயும் ஒளி நீ எனக்கு' தான் பாடுவேன். பாரதியாரின் 'நல்லதோர் வீணை செய்தே', 'சுட்டும் விழிச்சுடரே', 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' போன்ற வரிகள் பாடுவதும் பிடிக்கும். பாரதியாரின் பாடல்களைப் பாடும் போது புத்துணர்வு கிடைக்கும். என்னுடைய உடல் பிரச்னையைப் புரிந்து கொண்டு என் அம்மா எனக்காகப் பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
கர்நாடக இசை, இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொண்டேன். கீ போர்டு, பியானோ, சிறிய கிட்டார் போல் இருக்கும் உக்கிலீலி, பறை போன்றவற்றை வாசிப்பேன். பிரெய்லியும் ஓரளவு கற்றிருக்கிறேன். சிலம்பத்தையும் முழுதாகக் கற்றுக் கொள்ள ஆசை. மேடைகளில் ரேடியோ ஜாக்கி போல் பேசுவேன். கோயில்களில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்துள்ளேன். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் பாடியிருக்கிறேன்.
எனக்குப் பார்வை குறைபாடு இருந்தாலும் இந்த உலகம் அழகானது என்று நான் நம்புகிறேன். என்னைப் பார்ப்பவர்கள் என் மீது அன்பை விட பரிவையும் இரக்கமும் காட்டுகிறார்கள்.
நான் பாடிய 'கண்ணம்மா கண்ணம்மா' பாடல் பிரபலமான பிறகு திரைப்படங்களில் பாட ஆரம்பித்தேன். 'அடங்காதே' படத்தில் 'நிலவின் நிறமும்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானேன். அதற்குப் பிறகு சில படங்களிலும் நிறைய ஆல்பங்களிலும் பாடியிருக்கிறேன். நான் எப்போதும் சொல்வது, 'உதவிடத்தான் பிறந்தோம்' என்பதுதான். நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் இசையின் மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்' என்கிறார்.
தொடர்ந்து அம்மா கலைச்செல்வி பேசும் போது...
'என் மகளுக்கு அரசு உதவித்தொகை 2000 ரூபாய் தான் வருகிறது. ஆனால் அவளுக்குப் பல்வேறு வகையான சவால்கள் இருப்பதால், அவளது மாத பராமரிப்புச் செலவு ரூபாய் 20,000-யைத் தாண்டுகிறது. எனவே அரசு இது பற்றி கருணைத்தொகையாக இல்லாமல் உரிமைத் தொகையாக அதிகரித்துக் கொடுக்க வேண்டும். என் மகளை இசைக்கச்சேரிகளில் பொது நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு போல் பாகுபாடு காட்டி வாய்ப்பு தருகிறார்கள். அந்த மனநிலை மாறவேண்டும். சம்பந்தப்பட்டவர்களே பெரிய பயிற்சியுடன் தைரியமாக இருக்கும்போது ஏன் அவர்கள் பொதுவான வாய்ப்புகளைக் கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
தன்னையே பார்த்துக் கொள்ள முடியாமல் இருந்த அவள் இப்போது எவ்வளவோ முன்னேறி இருக்கிறாள். இது மாதிரி பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு கூடவே ஒரு ஆள் இருக்க வேண்டும். நான் எவ்வளவு காலம் தான் இருக்க முடியும் ?
இப்படிப்பட்ட சவால் உள்ள பிள்ளைகளுக்குப் பெற்றோர் அக்கறையுடன் பயிற்சிகள் அளிக்க வேண்டியது அவசியம். என் அனுபவங்களை வைத்து அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்டி வருகிறேன். மாற்றுத்
திறனாளிகளுக்குத் தேவை கருணை அல்ல; உரிமை என்று முதல்வர் அண்மையில் கூறியிருந்தார். அந்தக் கண்ணோட்டத்தில் இவர்கள் முன்னேற்றத்திற்கு அரசு உத்திரவாதமுள்ள வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்து ஏதாவது செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.