

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி (டிச.11), 'தினமணி' சார்பில் 2018-ஆம் ஆண்டில் இருந்து பாரதியார் அன்பர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 11-இல் நடைபெற்ற விழாவில், இந்தாண்டுக்கான விருது எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான பிரேமா நந்தகுமாருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் அவருக்கு வாழ்த்தி அளிக்கப்பட்ட சான்றிதழ்:
'தினமணி நாளிதழ் சார்பில், 2018-ஆம் ஆண்டு முதல் பாரதி ஆய்வாளர் ஒருவருக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆய்வாளர்கள் சீனி.விசுவநாதன் (2018), இளசை மணியன் என்கிற மு.ராமசுப்ரமணியன் (2019), ஆ.இரா.வேங்கடாசலபதி (2022), ய. மணிகண்டன் (2023), ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.லட்சுமிகாந்தன் பாரதி (2024) ஆகியோரைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டுக்கான தினமணியின் மகாகவி பாரதியார் விருது எழுத்தாளர் பிரேமா நந்தகுமாருக்கு வழங்கப்படுகிறது.
விருது பெறும் பிரேமா நந்தகுமார் - எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர் என பன்முக ஆளுமை பெற்றவர். தமிழ் தவிர, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் எழுதவும், பேசவும் திறன் பெற்றவர்.
திருநெல்வேலியை அடுத்த கார்கோடகநல்லூரில் கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் - பத்மாசினி தம்பதிக்கு 1939 பிப்ரவரி 23- ஆம் தேதி மகளாகப் பிறந்தார். திருநெல்வேலியில் பள்ளிக்கல்வி, உயர்நிலைக் கல்வியை முடித்த இவர், மேல்நிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளை ஆந்திரப் பல்கலை.யில் முடித்தார்.
மகாகவி பாரதியார் கவிதைகளை 'பாரதி இன் இங்கிலீஷ் வெர்ஸ்' என்ற பெயரில் 1958-லேயே மொழிபெயர்த்தவர். இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மணிமேகலை காவியம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாரதிதாசன் கவிதைகள் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீட்டிலும் இடம்பெற்றுள்ளன.
பாரதியார் குறித்த நூல்கள் சாகித்திய அகாதெமி, யுனெஸ்கோ நிறுவன வெளியீடுகளாகவும் வெளிவந்தன. இவரின் பிறந்த வீடும், புகுந்த வீடும் எழுத்தாளர் குடும்பமானதால் இளம்வயதிலேயே இவருக்கு எழுத்தில் ஈடுபாடு ஏற்பட்டது எனலாம்.
இவரின் முதல் நூல், இவரது மாமியார் பழம்பெரும் பெண் எழுத்தாளர் 'குமுதினி' எழுதிய 'நந்துவின் தம்பி'யின் கன்னட மொழிபெயர்ப்பே. அப்போது இவரின் வயது பன்னிரண்டுதான்.
இவரின் தந்தை கே.ஆர்.ஸ்ரீனிவாச ஐயங்காரோ, அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலை ஆங்கிலத்தில் முதன்முதலில் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர்.
தந்தையின் வழியிலேயே தனது எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்ட பிரேமா நந்தகுமார், அரவிந்தர் எழுதிய 'சாவித்ரி' காவியத்தை ஆய்வு செய்து, 1961-இல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பாரதியார் மட்டுமின்றி அரவிந்தர், அன்னை, சகோதரி நிவேதிதா, உ.வே. சாமிநாதய்யர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சதாசிவ பிரம்மேந்திராள் போன்றவர்களின் சரிதைகளையும், சிறுகதைகள், தத்துவங்கள், வேதங்களில் மகளிர், நாவல் என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 72 புத்தகங்களை எழுதியுள்ள பிரேமா நந்தகுமார், பலதரப்பட்ட ஆய்வரங்குகளில் பங்கேற்று, தனது ஆய்வுக்கட்டுரைகளையும், பல ஆராய்ச்சி ஆய்வேடுகளையும் வெளியிட்டுள்ளார்.
ஆண்டாள், வேதாந்த தேசிகர், திருமழிசை ஆழ்வார், சேக்கிழார் போன்றோரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள இவர், தற்போது குலசேகர ஆழ்வாரைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வருகிறார்.
பல்கலை. மானியக் குழு ஆய்வாளர், வாரணாசியில் உயர் திபேத்தியக் கல்வி மைய உறுப்பினர், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியர், அனைத்திந்திய இலக்கியக் கழக ஆயுள்கால உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், ஆரோவில் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறுப்புகளை வகித்திருந்தாலும், முழு நேரமாக எழுத்தையும், குடும்பத்தையும் மட்டுமே நேசித்தார். அதனால் தனியாக வேலை எதற்கும் செல்லவில்லை.
இவர் எழுத்து, ஆய்வுப் பணிக்காக 2013- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றார்.
பிரேமா நந்தகுமார், 'அமுதத்துளி உதிர்ந்தது' என்ற சிறுகதை தொகுப்புக்கு தமிழ்நாடு அரசின் விருது, கொல்கத்தா அரவிந்த பவனத்தின் அரவிந்த புரஸ்கார் விருது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது கணவர் மு.ஸ்ரீ.நந்தகுமார், ஸ்ரீரங்கம் கல்வி சங்கப் பள்ளிகளின் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். நந்தகுமார் - பிரேமா தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி, வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
பிரேமா நந்தகுமார் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருதும், தகுதிச் சான்றிதழும், ரூ.1 லட்சம் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பிப்பதில் 'தினமணி' நாளிதழ் பெருமைப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.