

'தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருதை எனது நாட்டிய குரு வழுவூர் ராமையாப் பிள்ளை 1961-இல் பெற்றார். என் பிறந்த வீடாக நான் கருதும் தமிழிசைச் சங்கத்தின் விருதை இந்த ஆண்டு நான் பெற்றிருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது' என்கிறார் மூத்த பரதநாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன்.
மூதறிஞர் ராஜாஜி, கல்கி, ரசிகமணி டி.கே.சி., பேரறிஞர் அண்ணா, சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் உள்ளிட்டோரின் ஆதரவோடு, சென்னையில் 1943-ஆம் ஆண்டில் செட்டிநாட்டரசர் சர் அண்ணாமலை செட்டியார் நிறுவிய கலை, பண்பாட்டு அமைப்புதான் தமிழிசைச் சங்கம். 'தமிழ் நாடெங்கும் தமிழிசை பரவ வேண்டும்'என்ற சீரிய நோக்கத்துடன் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்தச் சங்கம் ஆண்டுதோறும் டிசம்பரில் 12 நாள்களுக்குத் தமிழிசை விழாவை நடத்துகிறது.
ஆண்டுதோறும் இசை விழாவின் தொடக்க நாளன்று தலைசிறந்த இசைக் கலைஞரைத் தேர்ந்தெடுத்து, 'இசைப் பேரறிஞர்', 'பண்ணிசைப் பேரறிஞர்' என்னும் விருதுகளுடன், பொற்பதக்கம், பணமுடிப்பும் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 'இசைப்பேரறிஞர்' விருதைப் பெறும் சித்ரா விஸ்வேஸ்வரனிடம் பேசியபோது:
'என்னுடைய அப்பா பத்மநாபன் பனாரஸிலும், அம்மா ருக்மிணி தில்லியிலும் பிறந்து வளர்ந்தவர்கள். நான் கொல்கத்தாவில் பிறந்தேன். என் அம்மாவும் முறைப்படி பரத நாட்டியம் கற்றவர் என்பதால், அவரே எனது மூன்றாவது வயதில் பரத நாட்டியம் சொல்லிக் கொடுத்தார்.
என் அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. எனது ஐந்தாவது வயதில் அவரை அரசாங்கம் லண்டனுக்கு அனுப்பி வைத்தது. அங்கே நான் 'பாலே' நடனம் கற்றேன்.
ஒன்பது வயதில் நாங்கள் மீண்டும் கொல்கத்தாவுக்குத் திரும்பி வந்தோம். திருவிடை மருதூர் டி.ஏ.ராஜலட்சுமி அப்போது கொல்கத்தாவில் வசித்தபோது, அவரிடம் எனது பத்து வயதில் முறைப்படி பரதநாட்டியம் கற்றேன். அதன்பின்னர் 11 மாதத்திலேயே அவர் எனக்கு அரங்கேற்றம் செய்து வைத்தார். கூடவே, மணிப்புரி, கதக் நடனங்களையும், ரபீந்திர சங்கீத், ரபீந்திர நிருத்யா என இசை, நடனத்தையும் பயின்றேன். பதிமூன்று வயதில் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கையை நாட்டிய நாடகமாக உருவாக்கி, மேடையில் வழங்கினேன். இதேநேரத்தில், கொல்கத்தாவில் எனது பட்டப்படிப்பையும் முடித்தேன்.
உத்தியோக நிமித்தம் அப்பா லக்னோவில் வசிக்க, அம்மா என்னை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். வழுவூர் ராமையாப் பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றேன். அவரிடம் மூன்றே மாதத்தில் தமிழிசைச் சங்கத்துக்காக அவர் வடிவமைத்த ஒரு நாட்டிய நாடகத்தில் எனக்கு முக்கியப் பாத்திரத்தைக் கொடுத்து, என்னை ஊக்குவித்தார். நான் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து முதன் முதலாக மேடை ஏறியது தமிழிசைச் சங்கத்தின் அந்த நிகழ்ச்சியில்தான். அந்த வகையில் பார்த்தால் தமிழிசைச் சங்கம் எனக்குத் தாய் வீடு.
பரதநாட்டியம் என்பது ஓர் ஆழமான கடல் போன்றது. கடலில் மேலும், மேலும் ஆழமாக மூழ்கி முத்தெடுப்பதைப் போல பரத நாட்டியத்திலும் ஆழ்ந்து செல்லச் செல்ல புதுப்புது அர்த்தங்கள் புரியும். நான் இருபது வயதில் ஆடிய ஒரு வர்ணத்தை நாற்பது வயதில் ஆடும்போது, ஏராளமான புதிய பரிமாணங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதையே 60 வயதில் ஆடுகிறபோது, வேறு ஒரு பரிமாணத்தைப் பார்க்க முடிகிறது. அதுதான் பரத நாட்டியத்தின் பலம். பரத நாட்டியம் வேறு; வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்த்தது கிடையாது.
டாக்டர் ஜகதீஷ் என்று ஒரு மேற்கத்திய கிளாசிகல் இசையின் பரம ரசிகர் இருந்தார். அவர் ஏராளமான மேற்கத்திய கிளாசிகல் இசைத்தட்டுகள் சேகரித்து வைத்திருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று, கிராம போனில் அந்த இசைத்தட்டுகளைப் போட்டு வெகுநேரம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். என்னைப் போலவே இன்னொரு இளைஞரும் அங்கே இசை கேட்க வருவார்.
அவருடைய மாமாதான் பிரபல வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியம். கிடாரையும், வீணையையும் அந்த இளைஞர் நன்றாக வாசிப்பார். அவர் கர்நாடக இசையும் கற்றுக் கொண்டார். அப்போது சார்டர்டு அக்கவுன்டென்சி படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் விஸ்வேஸ்வரன். ஆண்டவன் அருளால், இருதரப்பு பெற்றோர்களும் பேசி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
நான் பதினாறு வயதில் மற்றவர்களுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். 1975-இல், சென்னையில் சிதம்பரம் பரதநாட்டியப் பள்ளியைத் துவக்கினேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நான் உருவாக்கிய பலர் உலகம் முழுக்க ஆங்காங்கே பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1980-இல் 'தேவி அஷ்ட ரச மாலிகா' என்ற நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்தேன். செளந்தர்ய லஹரியை அடிப்படையாகக் கொண்ட, அம்பாளின் கண்கள் காட்டும் எட்டு வகையான ரசங்களை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி அது. 'கிருஷ்ணாஞ்சலி' என்ற தயாரிப்பானது வழக்கத்தில் இருந்து மாறுபட்டு பரத நாட்டியத்தில் 'பிளாஷ் பேக்' நுட்பத்தைக் கையாண்டேன். புரந்தரதாசரின் கிருதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது 'புரந்தர கிருஷ்ணாம்ருதம்' என்ற நாட்டிய நிகழ்ச்சி.
'சப்த சப்தி' என்ற நாட்டிய நிகழ்ச்சியின் சிறப்பு, ஏழு என்ற எண்ணின் ஏழு விதமான பரிமாணங்களை மேடையில் கொண்டு வந்தது. இதிகாச, வரலாற்றுப் பெண்மணிகளான சீதா, சாவித்திரி, திரெளபதி மற்றும் ஜான்ஸி ராணி ஆகிய நான்கு பேரையும் குறித்த நாட்டிய நிகழ்ச்சிதான் 'ஸ்ரீ சக்தி'. கர்நாடக இசையில் ஆண்டாள் பாடல்கள், இந்துஸ்தானி இசையில் மீராவின் பாடல்கள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட கிருஷ்ணா பற்றிய நாட்டிய நிகழ்ச்சியே 'துவாரகநாதம்'.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனையின்பேரில், தேசிய அறிவியல் அகாதெமி ஆன்மிகத்துக்கு அப்பால், இந்தியாவின் கலாசாரக் கோணத்தில் கங்கை நதியைப் பற்றிய ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கி அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இமயத்தில் துவங்கி கடலில் கலப்பது வரையிலான கங்கையின் பயணம், மனித வாழ்க்கைப் பயணத்துக்கு நிகரானது இது.
அதற்கு ஆழ்ந்த ஆராய்ச்சி அவசியமாக இருந்தது. அது சவாலானதாக இருந்தாலும், அதே நேரம் என் மனதுக்கு பெரும் நிறைவை அளித்த ஒரு நடன நிகழ்ச்சி. என் கணவர் விஸ்வேஸ்வரன் என்னுடைய பெரும்பாலான நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பாடி இருக்கிறார்; இசையமைத்து இருக்கிறார்' என்கிறார் சித்ரா விஸ்வேஸ்வரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.