வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா!

'பெருகிவரும் குற்றச்செயல்கள், உளவியல் சிக்கல்கள் தடுக்கப்பட வேண்டுமானால், அன்பும், நட்புறவும், எளிமையும் நிறைந்த சூழ்நிலையை ஒவ்வொருவருக்கும் தந்தாக வேண்டும்.
வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா!
Updated on
2 min read

'பெருகிவரும் குற்றச்செயல்கள், உளவியல் சிக்கல்கள் தடுக்கப்பட வேண்டுமானால், அன்பும், நட்புறவும், எளிமையும் நிறைந்த சூழ்நிலையை ஒவ்வொருவருக்கும் தந்தாக வேண்டும். நல்ல குடும்பங்களின் தொகுப்பே சிறந்த சமூகம் என்பதால் வீடு, சமூகம் இரண்டிலும் மேன்மையான சிந்தனைகளைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு பெரியவர்களான நமக்கு இருக்கிறது.

சமமான வாய்ப்புதான் அதை உருவாக்க முடியும். முதலில் இதை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்'' என்று ஒரு கலைஞனுக்கான பொறுப்புணர்வு உணர்ந்து பேசுகிறார், இயக்குநர் குகநேசன் சோனைமுத்து. ஏற்கெனவே இவர் இயக்கிய 'மதுரை தேனி வழி ஆண்டிப்பட்டி' படத்துக்கு ஏக வரவேற்பு இருந்தது. இப்போது 'சுப்பன்' படத்தின் மூலம் மீண்டும் கதை சொல்ல வருகிறார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

இணையம், செல்போன்கள் ஆழமாக வேறுரூன்றி விட்டதை விமர்சிக்கும் விதமாக படத்தின் ட்ரெய்லர் இருக்கிறதே?

அப்படித்தான் இருக்கும். இன்றைய சினிமாவில் மிகவும் துணிச்சலாகப் பேச வேண்டிய விஷயம் இது. எதையும் இமேஜுக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறிவிட்டன.

இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் பெண்கள் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள்.

சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலைமாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ? வறுமை, ஆதிக்க சக்திகளின் பணபலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு.

இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் எனப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வையை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு பார்வையும் இருக்கிறது.

விஞ்ஞானம் எல்லாவற்றையும் மாற்றி வைத்திருக்கிறதே?

இந்த விஞ்ஞானம் ஒரு பெண்ணை எப்படிப் பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அச்சு அசலாகக் காட்டப் போகிறேன். செல்போன், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தெரியாத பெண்ணுக்கு நேருகிற சில சம்பவங்களின் தொகுப்புதான் இது. உண்மையான அன்புக்கு கிடையாய்க் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

காதல் என்கிற அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது. அந்தக் காதலே ஒரு பெண்ணுக்கு சாபமாக வந்தால், எப்படியிருக்கும்? படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. இதுகூட சென்டிமென்ட் சினிமாவுக்கான வார்த்தையாக இருக்கலாம்.

இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள்.

ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டுப் போகக் கூடாது என நினைக்கிறார்கள்.

இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலைச் சொல்லலாம். சொல்லாமல்கூட இருக்கலாம். காமமும் அப்படித்தான். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள், தோழர்களே...

எப்படி இருக்கும் படத்தின் திரை வடிவம்?

இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், படித்த பத்திரிகைச் செய்தி, கண் கூடாகப் பார்த்த அம்சங்கள். இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான்.

ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். 'வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா' என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை! நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது.

கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் குடிமகன். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களைவிட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.

இன்னும் பரிச்சயமான நடிகர்கள் இருந்தால், கதை எல்லோரையும் போய்ச் சேர வசதியாக இருக்குமே?

நானே புதுமுகம் மாதிரிதான். சினிமாவில் லேபிளுக்குத்தான் காசு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்த லேபிளை உருவாக்க வேண்டுமே. அதற்காகத்தான் இந்தப் போராட்டம். ஒரு வகையில் எல்லோருமே புதுமுகங்கள்தான். ஆனால், எல்லோருமே தங்களது இடத்துக்கு ஏங்குபவர்கள். பாலஹாசனுக்கு இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் வந்த 'ரேகை' என்ற வெப் சீரிஸில் அவருக்கு நல்ல இடம்.

ஸ்ரீதேவா, காயத்ரி ரெமா, சாருநிஷா, கஜராஜ், சரவண சக்தி, டாக்டர் சரவணன் இப்படி தெரிந்த முகங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சரிவிகிதத்தில் புதுமுகங்களும் இருக்கிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்புக்கு முதல் தகுதியை உண்டாக்கித் தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். முதல் வாய்ப்பு தந்து என்னைத் தூக்கி விட்ட தயாரிப்பாளர் ஆனந்த முருகன் சாருக்கு ஆயிரம் நன்றிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com