தெருக்கூத்து கற்கும் வட இந்திய மாணவர்கள்

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலையான 'தெருக்கூத்து', தமிழர்களின் தொன்மைக் கலைகளில் ஒன்று.
தெருக்கூத்து கற்கும் வட இந்திய மாணவர்கள்
Updated on
2 min read

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலையான 'தெருக்கூத்து', தமிழர்களின் தொன்மைக் கலைகளில் ஒன்று. இதுதொடர்பான குறிப்புகள் அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. நவீன பொழுதுபோக்கு அம்சங்களால் நலிவடைந்துவரும் தொன்மைக் கலைகளில் தெருக்கூத்தைக் கற்று நிகழ்த்த இளம்தலைமுறையினர் தற்போது முன் வருகின்றனர்.

உத்தர பிரதேசத்துக்கு உள்பட்ட வாரணாசியிலுள்ள மத்திய அரசின் தேசிய நாடகப் பள்ளியில் ஓராண்டுக் கால நாடகப் பட்டயப்படிப்பு பயிலும் வட இந்திய மாணவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தெருக்கூத்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவர் செ. கற்பகம் கூறியது:

'நாடகப் பள்ளியில் பயிலும் 20 மாணவர்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள கலைகள் குறித்து தொடர்புடைய மாநிலங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். இதன்படி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையுடன் இணைந்து டிசம்பர் 8 முதல் 27- ஆம் தேதி வரை என மொத்தம் 20 நாள்களுக்கு இவர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்மஸ்ரீ

விருது பெற்ற புரிசை கண்ணப்ப சம்பந்தன், தெருக்கூத்து கலைஞர் பழனி முருகன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மாணவ, மாணவிகள் ஹிந்தி, மராத்தி உள்பட வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் என்றாலும், தெருக்கூத்தில் தமிழில் உள்ள பாடல்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு, அதைத் தமிழில் பேசியும், பாடியும் வருகின்றனர். அடவுகள் சிறப்பாக ஆடினாலும், வசனங்கள் பேசுவது மிகவும் முக்கியமானது. அதை மாணவர்களுக்கு புரிசை கண்ணப்ப சம்பந்தன், பழனி முருகன் தமிழில் ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுத்துக் கற்றுத் தருகின்றனர்.

தொடர்ந்து 3 மணிநேரம் தெருக்கூத்து நிகழ்த்தும் அளவுக்கு மாணவர்களுக்கு உடல் உறுதியாக இருப்பதற்காக நாள்தோறும் காலையில் உடல் தளர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடவுப் பயிற்சி, வார்த்தைகளைப் புரிய வைத்து, பேசவும், பாடவும் கற்றுத் தரப்படுகிறது. எளிதில் அவர்கள் அறிகின்றனர்.

பயிற்சியின் நிறைவில் தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் அருகேயுள்ள ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் மக்கள் முன்னிலையில் தெருக்கூத்து கலை நிகழ்த்தவுள்ளனர்' என்கிறார் கற்பகம்.

பத்மஸ்ரீ விருது பெற்ற புரிசை கண்ணப்ப சம்பந்தன்: கோயில் தொடர்புடைய கலையாக இருப்பதால், அழிவதற்கு வாய்ப்பில்லை. கிராமங்களில் மட்டுமே இருந்த இந்தக் கலை 1980-களிலிருந்து நகர்ப்புறங்களிலும் பிரபலமடைந்தது. இதன் மூலம் படித்த இளைஞர்களும் தெருக்கூத்து கலையைக் கற்க முன் வருகின்றனர்.

கடந்த காலத்தில் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த 5 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 2023 ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியைச் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இந்திரஜித் என்ற தலைப்பில் தெருக்கூத்து கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்குழுவினர் ரஷ்யாவுக்குச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி, பாராட்டு பெற்றனர். தற்போது, இந்த மாணவர்களுக்கு வீர அபின்யு என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் கற்கின்றனர்.

இதேபோல, புதுச்சேரி, கேரளத்தில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளான பிரான்ஸ், சிங்கப்பூரிலும் தெருக்கூத்து பயிற்சி அளித்துள்ளோம். அங்கெல்லாம் ஆர்வமுடன் கற்க முன் வருகின்றனர்.

பயிற்றுநர் பழனி முருகன்: இந்த மாணவர்கள் இந்திய நாடகம் பற்றிப் படிக்கின்றனர். ஏற்கெனவே கர்நாடகத்தில் யக்ஷகானம், கேரளத்தில் கூடியாட்டம், களரிப் பயட்டு, கதகளி உள்ளிட்ட கலைகளைப் பயின்றனர். தற்போது இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அடவுகள் பயிற்சியைத் தொடர்ந்து, பாட்டு பாடிக் கொண்டே ஆடுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மகாபாரதத்திலிருந்து வீர அபிமன்யு கதையை ஒரு மணி நேரம் நிகழ்த்தும் அளவுக்கு கற்றுத் தரப்படுகிறது. பாரம்பரிய கலை வடிவத்தைத் தொடர்புடைய மொழியில் கற்றுக் கொண்டால்தான், அதனுடைய ரசனை புரியும். இதன் அடிப்படையில் இந்த மாணவர்களுக்கு தமிழிலேயே கற்றுத் தரப்படுகிறது. இதை மாணவர்களும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.

தெருக்கூத்து கற்கும் தில்லியைச் சேர்ந்த மாணவி சிம்ரன் சிங்: ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்ட எனக்கு இந்தக் கலையைத் தமிழில் கற்பது சவாலானதாக இருந்தாலும், மிகவும் பிடித்திருக்கிறது. இதை முதலில் சரியாகப் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருந்தது. இங்கு அளிக்கப்படும் பயிற்சி மூலமும், கூகுள் மூலமும் கொஞ்சம் கொஞ்மாக புரிந்து கொண்டு வருகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com