வெண்மைப் புரட்சி 2.0

உலக அளவில் பால் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியா 1990-ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது.
வெண்மைப் புரட்சி 2.0
Updated on
2 min read

தமிழானவன்

உலக அளவில் பால் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியா 1990-ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக முன்னிலையில் இருக்கிறது. 2.35 லட்சம் கிராமங்களில் 30.4 கோடி எண்ணிக்கையில் பால் உற்பத்தி செய்யும் எருமைகள், பசுக்கள் உள்ளிட்டவை இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்த பங்களிப்பைச் செய்யமுடிகிறது. நாட்டின் மொத்த பால் உற்பத்தி 24 கோடி டன்.

இதற்கு முக்கியக் காரணம், கிராமப்புறத்தில் வசிக்கும் 1.72 கோடி பால் உற்பத்தியாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். குடும்பத்துக்கு வருவாய் ஈட்டும் வகையில் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளும், பால் உற்பத்தியும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்கிறது. ஆரோக்கியமான காளைகளைக் கொண்டுதான் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளைத் தமிழர்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

நாட்டில் வெண்மைப் புரட்சி 2.0-வை வெற்றிகரமாக மாற்றும் வகையில், இந்திய கால்நடை இனப்பெருக்கத்தின்ஆய்வுச் சங்கம் (இசார்), புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியன இணைந்து புதுச்சேரி ஜிப்மரில் கூடி கால்நடை இனப்பெருக்கம் தொடர்பாக விவாதித்தன.

நம் நாட்டைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது, மலேசியா அரசின் கால்நடைத் துறை துணை இயக்குநர் மிமியர்மிலா டியானா, அமெரிக்காவில் உள்ள புர்டூ பல்கலைக் கழகத்தில் சிகிச்சையுடன் கூடிய ஈனியல்துறையின் தகைசால் பேராசிரியர் அகஸ்டியன் பீட்டர், ஒக்லகோமா மாகாண பல்கலைக்கழகத்தில் சிகிச்சையுடன் கூடிய ஈனியல் துறைப் பேராசிரியர் லியோனல் தவ்சன் உள்ளிட்டோரும், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 400 கால்நடைத்துறைப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் கூடி 3 நாள்கள் விவாதித்தனர்.

இதுகுறித்து கோவாவைச் சேர்ந்த அரசு கால்நடைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டி.அந்தோனியிடம் பேசியபோது:

'இயந்திரங்களின் பயன்பாடால், காளைகளின் உழைப்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான காளைகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றன. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, 47 உயர்தர இனப் பெருக்கத்துக்கான காளைகள் வளர்க்கும் மையங்கள் இயங்கிவருகின்றன.

இங்கு 4,288 உயர்தர மரபணுக்களைக் கொண்ட காளைகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியா வெண்மைப் புரட்சி 2.0 வுக்கு வழிவகுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இந்த இரண்டாவது வெண்மைப் புரட்சி (2028-29) தொடங்கவும், ஐந்தாண்டுக்குள் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு முதன் முதலாக வித்திட்டவர் மருத்துவர் வர்க்கீஸ் குரியன். அவருடைய பங்களிப்பு 1970-ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. இப்போது உலக அளவில் பால் உற்பத்தியில் பல்வேறு நாடுகளுக்கு இடையே மறைமுகப் போட்டி நிலவுகிறது.

போட்டியின் காரணமாக இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்க விரும்புகிறது. அதனால் தேசிய பால் மேம்பாட்டு வாரியம், தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டம் (என்.ஏ.ஐ.பி), ராஷ்டிரிய கோகுல் மிஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

மலை நாடுகளில் பால் பண்ணைகள் அதிகமாக இருக்கின்றன. அங்குள்ள ஒரு பண்ணையில் 500 முதல் 1,000 பசுக்கள் பால் கறக்கும். அதை வணிக நோக்கில் அவர்கள் ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இந்த நாடுகளில் பசுக்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில் பசுக்களுக்குத் தூவானம் போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். சீதோஷ்ண நிலை குளிர்ச்சி அடைய மழை நீர் போன்று வெயில் காலத்தில் அது தூவிக்கொண்டே இருக்கும்.

இந்தியாவில் சராசரியாக ஒரு கலப்பின பசு நாளொன்றுக்கு 6.4 லிட்டராகவும், நாட்டுப் பசுக்கள் 3.1 லிட்டராகவும் பால் அளித்து வருகின்றன. அதிக எண்ணிக்கையில் பால் உற்பத்தி இந்தியாவில் இருப்பதால், ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

இன்னும் செயற்கைக் கருவூட்டலை அதிகப்படுத்தி, அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கினால் பால் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். இஸ்ரேலில் உள்ள பசுதான் அதிக அளவிலான பால் உற்பத்தியைக் கொடுக்கிறது. இங்குள்ள பசு சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் வரை பால் கொடுக்கும்.

இந்தியாவில் நிலவும் பருவ நிலையில் திடீரென்று ஒரு டிகிரி அளவுக்குச் சீதோஷ்ண நிலை உயர்ந்தாலும் பசுவுக்குப் பாதிப்பு ஏற்படும். பால் கறக்கும் திறன் குறைந்துவிடும். மேலும், இதுபோன்ற பருவக் காலத்தில் செயற்கைக் கருவூட்டலும் வீணாகிவிடும்.

மரபு ரீதியாகக் கிடைக்கும் வைக்கோல் போன்றவை கிடைப்பதில் பற்றாக்குறை இருக்கிறது. இந்தியாவில் மேய்ச்சல் நிலங்களும் குறைவு. அதனால்தான் பால் கறக்கும் பசுக்களுக்கு ஊட்டச் சத்து மிகுந்த தீவனங்கள் அளிக்க வேண்டும். குறிப்பாக மனிதர்களுக்குத் தேவையான எண்ணெயிலிருந்து கிடைக்கும் கழிவான புண்ணாக்குப் போன்றவை பசுக்களுக்குத் தீவனமாக அமைகின்றன.

விவசாயிகளுக்கு டிஜிட்டல் கல்வியை அளிக்கலாம். ஒவ்வொரு பருவத்திலும் கால்நடைகளுக்குப் பரவும் நோய்கள் குறித்தத் தகவல்களை அளிக்கலாம். அதற்கான தடுப்பூசி எங்கு போடப்படுகிறது என்ற விவரங்களையும் தரலாம். இது அவர்களுக்கு ஏதுவாக இருக்கும்'' என்கிறார் அந்தோனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com