திரைக் கதிர்

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், 'வேல்ஸ் ட்ரேட் கன்வென்ஷன் சென்டர்', 'வேல்ஸ் ஃபிலிம் சிட்டி', 'வேல்ஸ் தியேட்டர்' ஆகிய மூன்று புதிய நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
திரைக் கதிர்
Updated on
2 min read

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், 'வேல்ஸ் ட்ரேட் கன்வென்ஷன் சென்டர்', 'வேல்ஸ் ஃபிலிம் சிட்டி', 'வேல்ஸ் தியேட்டர்' ஆகிய மூன்று புதிய நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அங்கே தனது திரைப் பயணம் குறித்தும், திரைத்துறை முன்னேற்றம் அடைவதற்கான வழிகள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'நான் சினிமாவின் குழந்தை. எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என் மொழியும், என் கல்வியும், இப்பொழுது நான் பெற்றிருக்கும் பட்டங்களும் எல்லாமே எனக்கு சினிமா கொடுத்ததுதான். அப்படிப்பட்ட சினிமா ஏதோ தேய்ந்து கொண்டே இருக்கிற மாதிரி எனக்கு ஒரு பயம். அமெரிக்காவில் உள்ள ஸ்டூடியோக்களைப் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை இங்கு கொண்டுவர வேண்டும்.'' எனப் பேசியிருக்கிறார்.

'மான் கராத்தே', 'கெத்து' போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ரெட்ட தல'. அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் பட புரமோஷனில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், 'ரெட்ட தல' படம் ஒன்றரை வருடத்துக்கான உழைப்பு. இந்தப் படக்குழுவோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

'வணங்கான்' படத்துக்குப் பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் இயக்குநர் இந்தக் கதையைச் சொன்னார். கேட்டவுடனே எனக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படத்தில் வரும் 'கண்ணம்மா கண்ணம்மா' பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். 'இட்லி கடை' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தனுஷுவிடம் 'ரெட்ட தல' படத்தின் ஒரு சில காட்சிகளைக் காண்பித்தேன். அது அவருக்குப் பிடித்திருந்தது.'' என்றார்.

ரஜினியின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸிலும் இப்படத்துக்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் 'படையப்பா' படத்தை தியேட்டரில் பார்த்தபிறகு செளந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

'பாடல்கள் எல்லாம் நான் ஒன்ஸ் மோர் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் ஊஞ்சல் காட்சிகள் போன்ற விஷயங்களை எல்லாம் ஒன்ஸ் மோர் செய்து இப்போது தான் பார்க்கிறேன். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பாருங்கள். 'படையப்பா' ரீ-ரிலீஸிற்காக அப்பா கொடுத்த பேட்டியை நான் தான் இயக்கினேன். அதுவே எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம். எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

விக்ரம் பிரபு நடிகராக அறிமுகமான படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்கத்தில், டி.இமான் இசையில் கடந்த 2012-ஆம் ஆண்டு அத்திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியானது. தற்போது விக்ரம் பிரபு, அவர் நடித்துள்ள 'சிறை' படத்துக்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கோவையில் இப்படத்துக்காக செய்தியாளர்களைச் சந்தித்தவர், 'கும்கி 2' படம் குறித்துப் பேசியிருக்கிறார். '8 வருடத்திற்கு முன்பே அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள். அந்தச் சமயத்திலேயே படத்தைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க. ஒரு படத்தை எடுத்த பிறகு மறுபடியும் அதைத் தொட வேண்டுமான்னு எனக்குள்ள எப்போதும் ஒரு கேள்வி வரும். 'கும்கி' முதல் பாகத்திலேயே கதை முடிந்துவிட்டது. ஒரு கும்கி போதும்'' எனப் பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com