அழகே ... அழகின் அழகே ..!

பாறை ஓவியங்கள் பெரும்பாலும் கோயிலை ஓட்டிதான் காணப்படுகின்றன.
அழகே ... அழகின் அழகே ..!
Updated on
3 min read

கும்பகோணம் அரசு நுண்கலை கல்லூரியில் இளங்கலை, முதுகலை முடித்த பி.தேவராஜ், எம்.ஆர். தியானேஷ், ஸ்ரீராம் சின்னதுரை ஆகிய 3 மாணவர்கள், அங்கு பணியாற்றும் மூத்த விரிவுரையாளர் சதீஷ் குமார் மணி, பகுதிநேர விரிவுரையாளர் சி. ராம் ஆகிய 5 பேர் புதுச்சேரி அருங்காட்சியகம் அருகேயுள்ள வளர்கலைக் கூடத்தில் அண்மையில் தங்களின் அழகியல் கலையை வெளிப்படுத்தும் வகையில் ஓவியப் படைப்புகளைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தனர்.

அவர்களிடம் பேசியபோது:

மூத்த விரிவுரையாளர் சதீஷ் குமார் மணி: பாறை ஓவியங்கள் பெரும்பாலும் கோயிலை ஓட்டிதான் காணப்படுகின்றன. கும்பாபிஷேகங்கள், புனரமைப்புப் பணிகளால் பாறை ஓவியங்களுக்கு ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆவுடையார் கோவில் சுவர் ஓவியங்களையும் மக்கள் சுரண்டிச் சிதைத்துள்ளனர். இயற்கை முறையில்தான் அந்தப் பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதைப் பாதுகாக்கும் வழிமுறையும் அப்போது இல்லை. இதுபோன்ற ஓவியங்களைப் பாதுகாக்கும் ரசாயனங்கள் தற்போது வந்துவிட்டன.

கோயில்கள் இறைவழிபாட்டுக்கு மட்டுமன்றி, கலையை வளர்க்கும் இடமாகவும், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இடமாகவும் இருக்கின்றன. குகைக் கோயில்களின் கட்டுமானம் மிகவும் பிரசித்தி பெற்றவை. பூமியின் மட்டத்தைக் காட்டிலும் அவை உயர்ந்து நிற்கின்றன. அங்கு இடம் பெற்றுள்ள பாறை ஓவியங்கள் சிறப்பானவை. பாறை ஓவியங்களின் நளினம், அழகு மிகவும் சிறப்பானவை. கோயில்கள் சாலை மட்டத்துக்குக் கீழ் பள்ளமாக மாற்றப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் கோயிலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

SWAMINATHAN

கும்பகோணத்தில் பல கோயில்கள் இந்த நிலைக்குச் சென்றுவிட்டன. அங்குள்ள ஒரு சில கோயில்களில் இடம் பெற்றிருந்த பழமையான ஓவியங்களும் மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கோபுரத்தில் இருக்கும் ஓவியங்கள் இன்னமும் பாதுகாக்கப்படுகின்றன. சரபோஜி மன்னர்கள் காலத்தில் ஓவியக் கலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று மதுரையில் நாயக்கர்கள் காலத்தில் ஓவியக் கலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் தமிழர்களின் கட்டடக் கலை குறிப்பாக கோயில் கட்டுமானங்கள் மிகவும் சிறப்பானவை.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்களின் உண்மையை வெளிப்படுத்த தேர்ந்த கற்பனை கலந்துதான் ஒரு கலைஞர் தன்னுடைய படைப்பை வெளிப்படுத்த முடியும்.

'ஆயகலைகள்' என்று சொல்லப்படும் 64 கலைகளுக்கும் தாய்க்கலை என்று காட்சிக் கலையான ஓவியக் கலையைச் சொல்லலாம். சித்தன்ன வாசல் உள்ளிட்ட இடங்களில் குகை ஓவியங்களும், குகை சிற்பங்களும் வேராக இருந்து இதை நிரூபித்துக் காட்டி வருகின்றன. அங்குள்ள வேட்டையாடும் காட்சி ஓவியம் மிகவும் சிறப்பானது. பழங்கால குகை ஓவியங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலும் இருக்கின்றன. வரைந்து ஒரு விஷயத்தைப் புரிய வைத்திருக்கிறார்கள். அதனால் தாய்க் கலைக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன.

பகுதி நேர விரிவுரையாளர் சி. ராம்: தேடல் காரணமாக காட்சிக் கலை மாறியுள்ளது. புதுமையை மக்கள் விரும்புகின்றனர். அதனாலும் மாறியுள்ளது. கலைஞர்களும், கலை ஆர்வலர்களும் புதுமை விரும்பிகளாக இருக்கின்றனர். அதனால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி, திரைப்படம் போன்று ஓவியமும் ஓர் ஊடகக் கருவிதான். செம்மண் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் அதைப் பிரதிபலிக்கிறார்கள். கர்நாடக இசை பின்புலத்தில் இருந்து வந்தவர்களும் அதைப் பிரதிபலிக்கிறார்கள். அவ்வளவுதான்.

உலக அளவில் சில நாடுகளில் ஓவியக் கலைக்குச் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வசிப்போர் தங்கள் வீட்டில் ஓர் ஓவியம் இல்லையென்றால் அது சபிக்கப்பட்ட வீடு என்று கருதுகின்றனர். அதனால் பெரும்பாலானோர் வீடுகளில் ஏதோ ஒரு ஓவியம் தொங்கிக் கொண்டிருக்கும். நம் நாட்டைப் பொருத்தவரை அழிந்து வரும் கலையில் ஒன்றாக ஓவியக் கலை இருந்து வருகிறது.

பி.தேவராஜ், ஸ்ரீராம் சின்னதுரை, எம்.ஆர். தியானேஷ்: எங்கள் குருநாதர் ஓவியர் எஸ். சிவபாலன் சிறந்த வழிகாட்டி. அவருடைய வீடு எங்களுக்குத் தஞ்சம். மேலும் உணவு கொடுக்கிறது. அவரின் தூண்டுதல் எங்களைத் தூங்க விடாது. அவரின் குருநாதர் ஓவியர் மனோகரனும் முக்கியக் காரணம். இதைத் தவிர கல்லூரியில் படிக்கும்போதே களப்பயணமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்றுள்ளோம். இப்போதும் அதைத் தொடருகிறோம். நாங்கள் இணைந்து ஓவியக் காட்சிக்காக உருவாக்கியுள்ள பெயர் 'அரோரா'.

நாங்கள் மூன்று பேரும் ஓராண்டில் குறைந்தது ஒரு மாதம் களப்பயணமாக வெளியூர் செல்வோம். அங்கு செல்லும்போது அங்குள்ளவர்கள் சாதாரணமாகக் கடந்து செல்லும் விஷயங்களை நாங்கள் காட்சிக்கான விஷயமாகப் பயன்படுத்துவோம். ரசித்து ஓவியத்தில் அதைக் கொண்டு வருவோம். களப் பயணம் செல்வதால்தான் இதைச் செய்ய முடிகிறது. ஒவ்வொரு மனிதர்களிடமும் எதாவது ஒரு படைப்பாற்றல் புதைந்திருக்கிறது. அது பாட்டுப் பாடுவதாக இருக்கலாம். கட்டுரை எழுதுவதாக இருக்கலாம். ஓவியம் தீட்டுவதாக இருக்கலாம். கலைஞர்கள் படைக்கும் கலைகளைக் கலை ஆர்வலர்கள் விரும்பி ஏற்கும்போதுதான் ஒரு படைப்பு சிறக்கிறது.

SWAMINATHAN

கிராமப்புற வாழ்வியலை நினைவூட்டும் வகையில் எங்கள் ஓவியங்கள் அதிகம் இருக்கின்றன. எதிர்காலத்தில் விழிப்புணர்வு ஓவியங்களில் கவனம் செலுத்த உள்ளோம். ஓர் உணர்ச்சி குறிப்பிட்ட கலைஞரின் வெளிப்பாடுதான். அவரைப் பொருத்தே அது அமைகிறது . பொதுவாக ஓவிய விரும்பிகள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் உணர்ச்சியைதான் விரும்புகிறார்கள்.

நீல நிறம் குளிர்ச்சியான உணர்ச்சிகளையும், சிவப்பு நிறம் கோபமான உணர்ச்சிகளையும், பச்சை நிறம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இவை காட்சி மொழியை வழி

நடத்திச் செல்கின்றன. பார்வையாளர்களை ஈர்க்கவும், அவர்களின் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதாகவும் ஓவியங்கள் அமைந்துவிட்டால் சிறந்த ஓவியங்களாக மாறுகின்றன. ஒரு பார்வையாளர் - தன்னுடைய மனச்சோர்வு நீங்குவதாக உள்ள ஓவியங்களையும், நல்ல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓவியங்களையும், வாழ்வில் தன்னைச் சமநிலைப்படுத்தும் ஓவியங்களையும் விரும்புவராக இருக்கிறார். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் காட்சி மொழியை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களைத் தீட்டி வருகிறோம்.

-தமிழானவன்,

படங்கள் கி. ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com